Wednesday, June 2, 2010

முள்ளிவாய்க்கால் பேரழிவினை தடுத்திருக்கக்கூடிய போர் நிறுத்தத்திற்கான வரலாற்று வாய்ப்பொன்று தவறிப்போனதெப்படி?


shockan.blogspot.com

ஜனவரி 29, காலை 11.10க்கு தொலைபேசித் தொடர்பில் வந்தார் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் நடேசன். வன்னிப் போர்க்களத்தின் இறுக்க நிலைபற்றி முதலில் இரண்டொரு நிமிடம் உரையாடினோம். அவர் சொன்னார் - ""உங்களிடம் பேசிவிட்டு உடனே நான் வேறு இடத்திற்கு நகரவில்லை யென்றால், நமது தொலைபேசி நுண்அலை களின் பயணப் பாதையை கணித்து துல்லியமாக குண்டு வீசும் தொழில்நுட்ப ஆற்றல் இன்று சிங்கள ஆமிக்காரனுக்கு இருக்கிறது'' என்று.

மத்திய அரசிலுள்ள தமிழக காங்கிரஸ் முக்கிய அமைச்சரின் மகன் முந்தைய நாள் இரவு எனக்குச் சொன்னவற்றையெல்லாம் அப்படியே நடேசன் அவர்களுக்குக் கூறினேன். ""இந்திய அரசு போர் நிறுத்தம் ஒன்றிற்கு ராஜபக்சே அரசு மீது அரசியல் அழுத்தம் கொணர முடிவு செய்துள்ளதாய் தெரிகிறது. அவர்கள் உங்களுக்கு விதிக்கும் ஒரே நிபந்தனை -ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பத்தினை -INTENTION TO LAY DOWN ARMS வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதற்கு உடன்பாடென்றால் புதுடில்லியில் மூத்த அதிகாரி ஒருவர் மிச்ச விபரங்களை உங்களோடு நேரடியாகப் பேசுவார்'' என்றேன்.

தொலைபேசி உரையாடலை நிறைவு செய்யுமுன் என் தனிப்பட்ட கருத்தாக நடேசன் அவர்களிடம், ""அண்ணே... போர்க்கள முனையில் விடுதலைப்புலிகளால் ஓர் திருப்புமுனையை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையும் வாய்ப்பும் இருக்கிறதெனில், இந்தியாவின் இந்த போர் நிறுத்த முன்னெடுப்பை நீங்கள் நிராகரிக்கலாம். அல்லது வேறு ஏதேனும் நாடு இந்தியாவைவிட நம்பகத் தன்மை கொண்ட போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருந்தால் இந்தியாவின் இந்த முயற்சியை நீங்கள் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால் தற்காத்துக் கொள்ள முடியாத, வேறெந்த வாய்ப்புகளும் இல்லாத நெருக்கடியான களமுனையில் நீங்கள் நிற்கிறீர்களென்றால் இந்தியாவின் இந்த முயற்சியை -முயற்சியின் தருணத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங் கள்'' என்று கூறினேன்.





இன்னொன்றையும் அவரிடம் கூறினேன். தமிழீழ விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கான காரணங்களாய் சில வற்றை முந்தைய சில கட்டுரைகளில் விவாதித்திருந்ததைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அறிவீர்கள். அவற்றோடு இன்னொரு முக்கியமான விஷயம், முப்பதாண்டு கால ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முறையாக சிங்கள ராணுவம் - சில தருணங்களில் பேரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தபோதும்கூட -பின்வாங்காமலும் இடைவேளை கொடுக்காமலும் தொடர்ந்து போர் நடத்தியது. இடைவிடாத, ஓய்வற்ற, தொடர்ந்த போர் புலிகளின் வியூக வகுப்பிற்கும் பதிலடித் திட்டமிடல்களுக்கும் பழக்கமில்லா புதிய சவால்கள் பலவற்றை உருவாக்கியிருந்தன. இதனை மனதில் இருத்தியவனாய் நடேசன் அவர்களிடம் சொன்னேன். ""அண்ணை, குறைந்தபட்சம் உங்களை நீங்கள் சற்றே ஆசுவாசப்படுத்தி மூச்சுவிடத் தேவையான இடைவெளியாகக் கூட இந்தியாவின் இந்த முயற்சியை பார்க்கலாம். முக்கியமாக ராஜீவ்காந்தி அவர்களது நிகழ்வுக்குப்பின் இந்தியா முதன் முறையாக -சற்றேறக்குறைய 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் -உங்களோடு நேரடியாகப் பேச முன்வருவதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்'' என்றேன்.

நான் சொன்னவற்றை அக்கறையுட னும் திருப்தியுடனும் கேட்டுக்கொண்ட நடேசன் அவர்கள், ""இது மிகவும் முக்கியமான விஷயம். தலைவர் பிரபாகரன் அவர்களின் கவனத்திற்கு உடனே இதனை நான் எடுத்துச் செல்வேன். ஆனால் பகல் நேரத்தில் அவரை சந்திக்க ஏலாது. இன்று மாலையே அவரை சந்தித்துவிட்டு மீண்டும் நான் உங்களைத் தொடர்புகொள்கிறேன்'' என்றார்.

பகல் முழுதும் இது குறித்தே சிந்தனையாயிருந்தது. வேறெதிலும் கவனம் செலுத்தவும் முடியவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதன் மூலம் தமிழரின் அரசியல் அபிலாஷைகளையும் கொன்று புதைக்கும் ராஜபக்சேக்களின் சிங்களப் பேரினவாத அரசியலுக்கு மிகப்பெரும் துணையாய் நிற்கும் இந்தியா திடீரென போர் நிறுத்தம் ஏற்படுத்த முன்வருவதற் கான காரணங்கள் என்னவாயிருக்கும் என்ற கேள்விகள் வேறு இன்னொருபுறம் பிசைந்து கொண்டிருந்தன.

கொந்தளித்துக்கொண்டிருந்த தமிழக அரசியற் சூழலும், கலைஞர் அவர்களின் தொடர்ந்த அழுத்தமும் காரணமா? இல்லை பாராளுமன்றத் தேர்தலை வென்று மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவேண்டுமென்றால் 2004 தேர் தலைப்போல் தமி ழகத்தின் அனைத்து தொகுதிகளையும் வெல் வது முக்கியம் -அவ் வாறான பெருவெற்றி யை சாதிக்க போர் நிறுத்தம் உதவுமென்ற அரசியற் கணக்கா? இல்லை அமெரிக்கா நேரடியாக இலங்கைக் குள் ராணுவத் தலையீடு மேற்கொள்வதை தடுத்து நிறுத்தும் அதிரடித் திட்டமா? இல்லை, இவை அனைத்துமே சேர்ந்த காரணமா? துல்லியமாக எதுவும் பிடிபடவில்லை.





அமெரிக்க ராணுவத் திட்டத்தின் முழு விபரங்களும் அப்போது ஜனவரி இறுதியில் தெரிந்திருக்கவில்லையென்றாலும் ஆயுதங்களை அமெரிக்க மேற்பார்வையில் அடைத்து வைக்கும் திட்டம் (LOCKING OF WEAPONS) அப்போதே பேசப்பட்டது.

தொலைபேசி உரையாடலில் சொல்லியிருந்த படி அன்று மாலையே பிரபாகரன் அவர்களிடம் இந்தியாவின் போர் நிறுத்த திட்டத்தை விவாதித்து விட்டு இரவு 10.45 மணியளவில் மீண்டும் செயற்கைக் கோள் தொலைபேசி வழி தொடர்புக்கு வந்தார் நடேசன். ""ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் தெரிவித்தல் -INTENTION TO LAY DOWN ARMS என்ற இந்தியாவின் நிபந்தனை பற்றி தலைவர் மேலும் விளக்கம் கேட்கிறார்'' என்றார் நடேசன். நான், உரியவர்களிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்பு கொள்கிறேன், உங்களைத் தொடர்புகொள்வது எங்ஙனம்? -எனக் கேட்டேன். அவர் தனது மின் அஞ்சல் முகவரியைத் தந்தார். "நீங்கள் என் மின் அஞ்சலுக்கு ஒரு வரி எழுதிப் போடுங் கள். அடுத்த பத்து நிமிடங்களில் நான் உங்களின் தொடர்புக்கு வருவேன்' என்றார். இறுக்கமான அப்போர் சூழலில்கூட 24 மணி நேர இணையத் தொடர்பில் அவர்கள் இருந்தார்களென்பது வியப்பா யிருந்தது.

நடேசன் அவர்கள் தொடர்பைத் துண்டித்ததுமே இம் முயற்சிகளில் ஈடு பட்டிருந்த அந்த முக்கிய அமைச்சரின் மகனைத் தொடர்புகொண்டு பிரபாகரன் அவர்கள் அறிய விரும்பும் விளக்கம் பற்றிக் கூறினேன். அவர் புதுடில்லியோடு பேசிவிட்டு உடனே மீண்டும் தொடர்புகொள்வதாய் கூறினார். சொன்னபடியே... இரவு 11.45 மணியளவில் தொலைபேசி அழைத்த அவர், ""அவர்களே (விடுதலைப்புலிகளே) ஓர் அறிக்கையைத் தயாரித்து எங்களுக்குத் தரட்டும். அது ஓ.கே.யா என்பதை நாங்கள் சொல்கிறோம்'' என்றார். உடனே நான் நடேசன் அவர்களுக்கு இத்தகவலை மின் அஞ்சலில் அனுப்பினேன். அதிகாலை 12.20 மணியளவில் மீண்டும் தொடர்புக்கு வந்தார் நடேசன். விபரங்களை விளக்கமாகக் கூறினேன். அவரோ, ""ஃபாதர், நீங்கள் அவர்களோடு நேரடியாகப் பேசிக் கொண்டிருப்பதால் அவர்களின் மனநிலை உங்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் எதிர்பார்க்கும் அறிக்கை வரைவினை நீங்களே எழுதி, அவர்களின் ஒப்புதலை முதலில் பெற்றுவிட்டு எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பி வையுங்களேன்'' என்றார். நானும் ""நல்லது அப்படியே செய்கிறேன்'' என்றேன். உரையாடலை நிறைவுசெய்யும் முன் "அண்ணே, கள நிலை எப்படியிருக்கிறது?' எனக் கேட்டேன். ""சனம்தான் சரியா கஷ்டப்படி ணும். மற்றபடி இறுக்கமான நிலைதான். ஆனாலும் நாங்க உறுதியாத்தான் நிக்கிறம்'' என்றார். நேரம் அதிகாலை சுமார் 12.45 ஆகியிருந்தது. செபமொன்று மனதிற்குள் சொல்லிவிட்டு எழுதுகோலையும் எடுத்து முன் வைத்தேன். போர் நிறுத்தம் நோக்கிய முயற்சியில் முக்கியமான திருப்புமுனையை ஒருவேளை உருவாக்கப்போகிற விடுதலைப்புலிகளின் சார்பான குறு அறிக்கையை எழுதத் தொடங்கினேன். அந்த நள்ளிரவு தந்த வரலாற்று வரிகள் இவை:

""இந்தியாவின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு, இந்தியாவின் முயற்சியாலோ அல்லது பிற உலக நாடுகளின் முயற்சியாலோ மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை கள் தொடங்கி, தமிழ் மக்களுக்கு திருப்தியானதோர் அரசியற் தீர்வு ஏற்படும்பட்சத்தில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராக இருக்கிறது.''

'INTENTION TO LAY DOWN ARMS' -ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் தெரிவித்தல் என்ற இந்தியா எதிர்பார்த்த நிபந்தனையை "தமிழ் மக்களுக்கு திருப்தியானதோர் அரசியற்தீர்வு ஏற்படும் பட்சத்தில்' என்ற எதிர் நிபந்தனையோடு முடிச்சிடத் தலைப்பட்டிருந்தேன். இதனை இந்தியா ஏற்றுக் கொள்ளத் தயங்கும் என ஒருபுறம் மனம் சொன்னது. ஆனால் அந்த முடிச்சு இல்லாமல் ஆயுதங்களை ஒப்படைக்க புலிகள் ஒப்புக்கொள்வது தற்கொலைக் குச் சமமானது என்பதும் நன்றாகவே தெரிந்திருந்தது. வரைவினை எழுதி முடித்தபோது அதிகாலை மணி 1.05. மின் அஞ்சலில் அவ்வரைவினை நடேசன் அவர்களுக்கு மின்அஞ்சல் செய்துவிட்டு, மத்திய அமைச்சரின் மகனிடம் காலையில் கொடுப்பதற் காக அதே வரைவினை அச்செடுத்து உறையி லிட்டு மூடி முகவரியும் எழுதி வைத்துவிட்டு உறங்கச் சென்றேன்.

ஜனவரி 30, 2009. உறையிலிட்டு வைத் திருந்த வரைவினை அந்த மத்திய அமைச்சரின் மகனிடம் ஒப்படைப்பதற்காகப் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது காலை 8.45 மணி அளவில் நடேசன் அவர்களிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. ""வணக்கம் ஃபாதர். நீங்களே எழுதி அனுப்பிய வரைவினைப் பார்த்தேன். சரியா இருக்குது. ஆனா "தமிழ் மக்களுக்கு திருப்தியானதொரு தீர்வு வரும் பட்சத்தில்தான் ஆயுதங்களை ஒப்படைப்போம்' என்ற நிபந்தனையை இந்தியா ஏற்றுக் கொள்ளுமென நினைக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கோ'' என்றார்.

காலை 10.30 மணி அளவில் மத்திய அமைச்சரது மகனிடம் அந்த வரைவினை ஒப்படைத்தேன். கொஞ்சநேரம் உரையாடிவிட்டு விடைபெறுகையில் நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டது மறக்க முடியாதது: ""அப்படியே புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தாலும்கூட எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுக்கிற அளவுக்கு அவர்கள் முட்டாள்களா, என்ன? இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்தது போல துருப்பிடித்த, சுடமுடியாத, காயலாங் கடைக்கு விற்க மட்டுமே தகுதியுடைய ஆயுதங் களைத்தான் கொண்டு வந்து தரப்போகிறார் கள். தைரியமா இப்போதைக்கு ஒத்துக்கொள்ளச் சொல்லுங்கள்'' என்றார். வரைவினை உடனே புதுடில்லிக்கு தொலைநகல்-ஃபேக்ஸ் செய்வதாகக் கூறிய அவர் விரைவில் மீண்டும் தொடர்பு கொள்வதாய் கூறினார். நான் விடைபெற்று வந்து என் அலுவல கப் படிக்கட்டில் ஏறிக்கொண்டி ருந்தபோது மீண்டும் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. படபடப்புடன் எடுத்தேன். ""ஃபாதர், சக்ஸஸ். வரைவிற்கு புதுடில்லி ஞ.ஃ. சொல்லிவிட்டது. இத்தோடு தபால்காரர்களாகிய நமது வேலையும் முடிந்துவிட்டது. இனி நடேசன் நேரடியாக புதுடில்லியோடு பேசலாம். நான் உங்களுக்கு இன்னும் இரண்டு நிமிடங்களில் புதிய மின் அஞ்சல் ஒன்று அனுப்புவேன், அதில் புதுடில்லிக்காரர் ஒருவரின் மின்அஞ்சல் முகவரி இருக்கும். அந்த முகவரிக்கு தனது தொலைபேசி எண்ணைத் தெரிவித்து தகவல் அனுப்ப நடேசன் அவர்களுக்குச் சொல்லுங்கள். உடனேயே நேரடியாக நடேசனோடு பேசுவார்கள்'' என்றார்.

மனதிற்கு மிக்க நிறைவாயிருந்தது. அடர்ந்த இருளினூடே சிறியதோர் ஒளிக்கீற்றுபோல் நீண்ட சுரங்க இருளுக்குப்பின் வெளிச்சம் தெரிவதுபோல் அடுத்த ஐந்தாம் நிமிடத்திலேயே மகிழ்ச்சிச் செய்தியை நடேசன் அவர்களுக்கு அனுப்பினேன்.

புதுடில்லி-நடேசன் நேரடிப் பேச்சுவார்த்தை கள் தொடங்கின. நான்கு நாட்கள் தொடர்ந்து பேசி யிருக்கிறார்கள். 5-ம் நாள் நடேசன் தொடர் புக்கு வரவில்லை என அமைச்சரின் மகன் அழைத்து வருத் தத்துடன் கூறினார். நான் நடேசன் அவர்களைத் தொடர்புகொண்டேன். தொலைபேசி அழைப்புக்கு வந்த நடேசன் அவர்களது குரலில் முன்பிருந்த உற்சாகம் இருக்கவில்லை. ""இங்கெ கொஞ்சம் வேற மாதிரி யோசிக்கணும்'' என்று மட்டும் சொன்னார். முள்ளிவாய்க்கால் பேரழிவினை தடுத்திருக்கக்கூடிய போர் நிறுத்தத்திற்கான வரலாற்று வாய்ப்பொன்று தவறிப்போனதெப்படி?

No comments:

Post a Comment