Thursday, June 3, 2010

பச்சைமுத்து பாஸா?


shockan.blogspot.com

அரசியல் கட்சிகளே திகைத்துப் போகும் அளவிற்கு... பார்க்கவ குலத் தினரைப் பெரிய அளவில் திரட்டி... தனது இந்திய ஜனநாயக கட்சியின் முதல் மாநாட்டை 29-ந் தேதி நடத்தி முடித்திருக்கிறார் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் அதிபரான பச்சைமுத்து.

லட்சம் பேருக்கு மேல் திரண்டும்... மாநாட்டுப் பந்தலுக்குள் 5 ஆயிரம்பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். மாநாட்டை பச்சைமுத்து கொடி யேற்றித் தொடங்கி வைக்க.... பச்சைமுத்துவின் சாதனை விளக்கக் கண்காட்சியை ராமன் ஐ.ஏ.எஸ். திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து லாட்டரி அதிபர் மார்டினின் மனைவி லீமாரோஸ் குத்துவிளக்கு ஏற்றி வைக்க... மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.

நட்சத்திரப் பேச்சாளர்கள் இடம்பெறாத நிலையில்... நடிகர் தாமு தனது மிமிக்ரி நிகழ்ச்சி மூலம் கலகலப்பை ஏற்படுத்தினார்.

மைக் பிடித்த கோவை தம்பி ""நான் அண்ணா காலத்தில் இருந்தே அரசியலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அறிஞர் அண்ணா, "திராவிட இயக்கமான எங்களுக்கு ஆட்சி பீடத்தில் அமரும் வாய்ப்பைத் தரக்கூடாதா? அதற்கான தகுதி எங்களுக்கு இல்லையா?' என்று கேட்டார். அவரை ஆட்சி பீடத்தில் மக்கள் அமரவைத்து அழகு பார்த்தார்கள். ஆட்சி பீடத்தில் யாரை அமரவைக்கலாம் என்று தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களாக இப்போது நாங்கள் வளர்ந்திருக் கிறோம். நாங்கள் ஆளும்கட்சியை எதிர்த்து அரசியல் பண்ண வரவில்லை. அவர்களுடன் இணைந்து செயல்பட வந்திருக்கிறோம். அதே சமயம் ஆளும் கட்சியின் தவறாக நாங்கள் பார்ப்பது அரசின் இலவசத் திட்டங்களைத் தான்''’என்றார் குரலுயர்த்தி.

இந்த மாநாட்டில்... "மதுபான விற்பனையை நிறுத்தி விட்டு... விவசாயிகளின் வாழ்வாதாரமான கள், பதநீரை அரசு அனுமதிக்க வெண்டும். நதிநீர் இணைப்பைத் துரிதப்படுத்த வேண்டும். தடையில்லா மின்சாரம் வேண்டும். பொறியியல் கல்லூரிகளுக்கு இணையாக வேளாண்மைக் கல்லூரிகளை அரசு தொடங்கவேண்டும்' என்பது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியதோடு... இலங்கையில் நடந்த தமிழர் படு கொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

நிறைவாக மைக் முன்வந்த பச்சைமுத்து “""என் பெற்றோர் வைத்த பெயரே எனக்கு மறந்துபோகும் அளவிற்கு என்னை பாரிவேந்தர் என்று அழைக்கிறார்கள். நான் மட்டும் பாரி வள்ளல் அல்ல. இங்கே வந்திருக்கும் அத்தனைபேரும் பாரிவள்ளல்கள்தான். இவர்கள் வாரிவாரிக் கொடுத்த 4 கோடி ரூபாயைக் கொண்டுதான் இந்த மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கிறேன். எங்கள் ஜனநாய கட்சி... பொதுமக்களை சங்கடப்படுத்தும் விதத்தில்... எப்போதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் என்பது போன்ற போராட்டங்களை நடத் தாமல் தனித்தன்மையோடு செயல் படும்''’என்றதோடு... ""படிக்காத இளைஞர்களை படிக்க வைப்போம்; படித்த இளைஞர்கள் மூலம் அரசியல் புரட்சியை உண்டாக்குவோம்'' என்றும் சூளுரை செய்தார்.

மாநாட்டுக்கு வந்த சிலரை சந்தித்தோம். “ஆந்திராவில் இருந்து வந்திருந்த லலிதா “""ஆந்திராவில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறோம். எங்க பார்க்கவ சமூகத் துக்கு ஒரு அரசியல் கட்சி ஆரம் பிப்பது தேவையானது. அதனால்தான் எங்கள் பகுதியில் இருக்கும் எங்கள் சமூக மக்களைத் திரட்டிக்கொண்டு இங்கே வந்திருக்கிறேன்''’என்றார் உற்சாகமாக.





""எல்லாத்திலுமே அரசியல்வாதி கள் தலையீடு இருக்கு. தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையையும் எங்களால் சமாளிக்க முடியலை. அதனால்தான் நாங்க அரசியலில் தஞ்சமடைய வேண்டியிருக்கு''’-இது கூடுவாஞ்சேரி சரஸ்வதி.

புதுக்கோட்டை முத்தப்பனோ ""எம்.ஜி.ஆரின் விசுவாசியான நான் அ.தி.மு.க.வில் இத்தனை காலமாய் இருந்தேன். அந்தக் கட்சி இனி தேறாது. அதனால் எங்கள் சமூகக்கட்சியான இங்கு வந்துவிட்டேன். இனி என் தலைவர் பாரி அய்யாதான்''’என்றார் உற்சாகமாக.

பரமக்குடியில் இருந்து வந்திருந்த கல்லூரி மாணவர்களான சதீஷ், வின்சென்ட், ஜோசப் ஆகியோர் “""எங்க சமூகத்துக்கு பச்சைமுத்து மாதிரி ஒருத்தர் தலைமை தாங்கி வழிநடத்துவது பெருமைக்குரியது. அதே சமயம் தேர்தல்னு வந்தா... நாங்க ஜாதி பார்த்து ஓட்டுப்போடமாட்டோம்''’ என்றார்கள் தெளிவாக.

கள்ளக்குறிச்சி பகுதியில் பாரி சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லும் சுப்பிரமணி... தங்கள் பகுதியில் இருந்து 20 பேருந்துகளில் ஆட்களைத் திரட்டி வந்திருப்பதாகச் சொல்லி பூரித்தார்.

தன்னை தி.மு.க.காரர் என அறிமுகப்படுத்தி கொண்ட நாமக்கல் சௌந்தர்ராஜன்... "இந்த இந்திய ஜன நாயக கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும்' என தன் விருப்பத்தையும் தெரிவித்தார். தேவகோட்டைக் காரரான ஆரோக்கியதாஸோ, ""நான் ஆசிரியரா வேலை பார்க்கிறேன். படித்தவர்கள் ஜாதி பார்க்கமாட்டாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா நாங்க அப்படியில்லை. ஜாதியை சொல்லிக்கொள்வதில் தப்பே இல்லை. எங்க ஊர்ல இருக்கும் பணக்காரர்கள் எல்லோரும் நிறைய பணத்தைக் கொடுத்து இந்தக் கட்சியில் சேர்ந்திருக்கோம். சந்தோசமா இருக்கு''’’என்றார் புன்னகை வழிய.

கல்வி நிறுவனங்களை நிறுவி... பெரிய அளவில் வளர்ந்திருக்கும் பச்சைமுத்து... இப்போது தனக்கென ஒரு அரசியல் கட்சியையும் தொடங்கியிருக்கிறார். கட்சி முயற்சியில் அவர் பாஸாகி இருக்கிறாரா? என்று பார்த்தால்... அந்தக் கட்சியில் இருப்பவர்களிடம் அரசியல்கட்சி என்பதையும் தாண்டி... தாங்கள் இன்ன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வே மிகுந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

இதே திருச்சியில் ஏற்கனவே மிகப்பெரிய மாநாட்டை நடத்திய முத்தரையர் சங்கத்தினர்... பார்க்கவ குலத்தினரின் அரசியல் அவதாரத்தைப் பார்த்து... தாங்களும் அரசியல் அவதாரம் எடுக்கும் வியூகத்தில் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment