Sunday, June 6, 2010

தமிழனுக்கு எதிரி தமிழனே!


shockan.blogspot.com
""இங்கெ வேறெ மாதிரி யோசிக்கினும்.'' போர் நிறுத்தம் நிறுவிட இந்தியா முன்னெடுத்த முயற்சி தோற்றுப் போனது பற்றி நடேசன் அவர்கள் கூறிய ஒற்றை வாக்கியம் இது. அதற்கு மேல் விரிவாகப் பேச அவர் விரும்பவில்லை. உண்மையில் என்ன நடந்ததென்பதை உரைக்க அவர் இன்று உயிரோடில்லை.

இந்தியாவின் போர் நிறுத்த இடைப்பாட்டைக் காட்டிலும் அமெரிக்காவின் நேரடித் தலையீடு தமிழருக்கு நல்லது என விடுதலைப்புலிகளின் தலைமை கருதியதா? முள்ளிவாய்க்கால் கடைசி அழிவு நடக்கவிடாமல் அமெரிக்கா தடுத்து நிறுத்துமென அவர்கள் உறுதியாக நம்பியிருந்தார்களா? அமெரிக்க முயற்சியை சீர்குலைக்க வேண்டித்தான் இந்தியா திடீரென முன்வருகிறதென ஐயமுற்றார் களா? போர் நிறுத்தம் ஏற்பட்டபின் இந்திய அமைதிப் படையின் காலத்தில் துரோக மிழைத்ததுபோல் ஏதேனும் துரோகத்தை இந்தியா செய்யு மென அஞ்சினார்களா? இல்லை- ""காங்கிரசை நம்பாதீர்கள். பாராளுமன்றத் தேர்தல் முடிகிறவரை தாக்குப்பிடியுங்கள். தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணிதான் வெல்லப்போகிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு அமைவது திண்ணம். காங்கிரஸ் இப்போது போர் நிறுத் தம் பற்றிப் பேசுவது தமிழக வாக்காளர்களை மனதில் கொண்டு மட்டுமே. தேர்தல் முடிந்ததுமே உங்கள் கழுத்தை அறுப்பார்கள். இன்று அவர்கள் சொல்வதை நம்பி போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்டால் இனிமேல் எங்கள் ஆத ரவு உங்களுக்கு இல்லை'' என்றெல்லாம் தமிழகத்திலிருந்து தமிழீழ ஆதரவாளர்களாய் தம்மைக் காட்டி வரும் தலை வர்கள் தந்த அழுத்தத்தால் அவர்கள் குழம்பிப்போனார் களா? எதற்கும் தெளிவான பதில் இல்லை.

சலிப்புற்ற நான் அந்த அமைச்சரின் மகனை தொடர்புகொண்டு "என்ன நடந்தது? ஏன் இந்த முக்கிய முயற்சி வெற்றி பெறவில்லை?' எனக் கேட்டேன். அவரது குரலிலும் வருத்தம் தெரிந்தது.

""வன்னியில் உள்ளவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். புதுடில்லியில் இந்திய அரசு நியமித்திருந்தவ ரோடான தொடர்பை அவர்களாகத்தான் துண்டித்துக் கொண்டார்கள்'' என்றார்.

மீண்டும் நடேசன் அண்ணன் என்னைத் தொடர்பு கொண்டது மே மாதம் முதல் வாரமென்று நினைக்கிறேன். போர் நிறுத்தத்திற்கு புதுடில்லியோடான தொடர்பினை புதுப்பிக்க முடியுமா எனக் கேட்டார். பேசிவிட்டுப் பதில் சொல்வதாக அவருக்குக் கூறினேன். நல்லது நடக்குமென்ற நம்பிக்கை எனக்கு அப்போது இருக்கவில்லை.

எனினும் கடவுளை மன்றாடிக்கொண்டே அந்த அமைச்ச ரின் மகனுக்குத் தொடர்புகொண்டேன். வன்னியிலிருந்து மீண்டும் வந்துள்ள வேண்டுதலை அவரிடம் சொன்னேன். அவர் புதுடில்லியை கேட்டுச் சொல்வதாக அப்போது கூறவில்லை. அவராலேயே அப்போது பதில்கூற முடிந்தது. ""காலம் கடந்துவிட்டது ஃபாதர்... முழுமையான ராணுவ வெற்றிக்கு அருகில் இலங்கை அரசு வந்துவிட்டது. இத் தருணத்தில் இந்தியா சொல்வதற்கு ராஜபக்சே கட்டுப்படு வார் என நான் நினைக்கவில்லை'' என்றார். ""மிகப்பெரிய மனித அழிவு நடந்துவிடும்போல் தெரிகிறதே... தயவுசெய்து ஏதேனும் செய்யுங்களேன்... உங்கள் தந்தையாரிடம் பேசுங்களேன்'' என்று மன்றாடினேன். அவர் சுருக்கமாக கூறிய பதில் மறக்க முடியாதது. ''The Tragedy has already happened பேரழிவு ஏற்கனவே நடந்தாயிற்று.''

இந்தியாவினுடைய திடீர் போர் நிறுத்த முயற்சியில் இதய நேர்மை இருந்ததாகவோ, அப் போர் நிறுத்தம் நியாயமானதும் கௌரவமானது மான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்குமென் றோ நானும் நம்பியிருக்கவில்லைதான். ஆயினும் ராணுவ நோக்கில் புலிகள் மூச்சுவிடவும், தங்கள் அணிகளை சேர்த்துக் கூட்டவும், சுடுபொருள் இருப்புகளை அதிகரித்துக்கொள்ளவும், புதிய வியூகங்கள் வகுக்கவும் அந்தப் போர் நிறுத்த இடைவெளி நிச் சயம் உதவியிருக்கக்கூடும். முல்லைத்தீவு பேரழிவும் தடுக்கப்பட்டிருக் கக்கூடும். ஏதோ காரணங்களுக்காய் வரலாறு தமிழினத்தை சபித்தது.

இடைவெளி தரப்படாத சண்டை சிங்கள ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாயிருந்ததென பலமுறை இங்கு நான் குறிப்பிட்டிருக்கிறேன். நிஜத்தில் கடைசிகட்ட போரின் பதிவுகள் எங்குமே முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்வதற்கான பூரணத் தகவல்களும் என்னிடம் இல்லை. எனினும் தூரத்திலிருந்தே எனது அவதானம், சில உரையாடல்கள், இணையச் செய்திகளின் அடிப்படையில் மாவிலாறு தொடங்கி முள்ளி வாய்க்கால் வரையான கடைசிப் போரை மிகச்சுருக்கமாய் நக்கீரனில் வரலாற்றுப் பதிவாக்க விழைகிறேன்.





2006-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய மாவிலாறு மதகு மூடுதல் - திறத்தல் போர்தான் கடைசிப்போரின் முதற் திருப்புமுனை. ஆனையிறவை வென்ற ஓயாத அலைகளின்போது புலிகளின் அணி கள் காட்டிய எரிமலை ஆவேசம் இப்போதைய சண்டைகளில் இல் லாததை இலங்கை ராணுவம் அவதானித்தது. மாவிலாறை வென்ற தெம்போடு மன்னார்-பூநகரி ஏ-32 நெடுஞ்சாலை பாதை திறப்புக்கான ராணுவப் பயணத்தை 2007 செப்டம்பரில் தொடங்கினர். இன்னொரு புறம் சிங்கள ராணுவத்தின் 56, 57-வது டிவிஷன்கள் வவுனியா கனகராயன்குளம்-மாங்குளம் திசை நோக்கிப் புறப்படத் தயாராயின.

இப்போது கிடைக்கிற தரவுகளின்படி இந்த ராணுவ நட வடிக்கைகளை தொடங்கியபோது ஆனையிறவை மீளக்கைப்பற்றி முல்லைத்தீவுவரை வந்து தமிழீழ விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாக வெற்றிகொள்ள முடியுமென கனவில்கூட இலங்கை அரசு நம்பியிருக்கவில்லை. இந்த ராணுவ நகர்வு மட்டுப்படுத்தப்பட்ட இரண்டு நோக்குகளைக் கொண்டிருந்தன. முதலாவது, புலிகளின் நீண்ட தூர எறிகணை வீச்சுத் திறனை (Long Range Artillery) சுருக்குவது, இரண்டாவது தொந்தர வாகவும் புதிய அச் சுறுத்தலாகவும் மாறிவிட்டிருந்த புலிகளின் விமானப் படைத்திறனை எதிர்கொள்ள ஏதுவாக அவர்களின் விமான ஓடுதளங்களை தேடிக் கண்டு செயற்பட முடியாதபடி சேதப்படுத்துவது. இந்த இரண்டு நோக்குகளோடுதான் மாவிலாறுக்குப் பிந்தைய ராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

பெரும் எடுப்பிலான நகர்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சிங்கள ராணுவத்திற்கு அவர்கள் எதிர் பார்த்ததைவிட பெரிய பலன்களை சாதித்துக் கொடுக்கத் தொடங்கியவர்கள் சிறு குழுக்களாய் அமைந்த, சிறப்புப் பயிற்சிகள் பெற்ற நீண்டதூர ஊடுருவித் தாக் கும் கமாண்டோ அணிகள் (Long Range Penetration Units). கருணம்மானின் உள்ளீடுகளும் அவரது குழு வினரும் இக் கமாண்டோ அணிகளின் வெற்றியில் முக்கிய பங்காற் றினர். தமிழரைக் கொண்டே எப்படி சிங்களம் தமிழரை அழிக்கும் போரில் வெற்றிபெற்றதென்பதை மீண்டும் ஒருமுறை குறிப்பிட விரும்பியே இதனை எழுதினேன்.

மன்னார் சண்டைகளுக்குத் தளபதி பானு தலை மையேற்றிருந்தார். சிங்களப் படைகளை, மூர்க்கன் என்றே அறியப்படும் ஷவேந்திர சில்வா முன்னின்று நடத்தினார். ராணுவத்தின் பூநகரி பாதை திறப்பு திட் டத்தினை முறியடிக்க நாச்சிக்குடா முதல் வன்னேரிக் குளம் வழியாக அக்கராயன்குளம் வரை சுமார் 25 கி.மீ. நீளத்திற்கு விடுதலைப்புலிகள் அமைத்திருந்த தடுப்புச்சுவர் அவர்களின் அசாத்திய ராணுவ முன்தயாரிப்பிற்கு உதாரணமாய் நின்றது. எனினும் இலங்கை விமானப்படையின் கிபிர் (Kifir) விமானங் கள் ஒரே நேரத்தில் இணைந்து நடத்திய அலை, அலை யான குண்டுவீச்சில் வன்னேரிக்குளத்திற்கு மேற்கே கரம்பன்குளம் பகுதியில் சுமார் மூன்று கி.மீ. நீள தடுப்புச்சுவர் உடைக்கப்பட்டது. கேந்திர ரீதியில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட நாச்சிக்குடா ராணுவத்தின் வசம் விழுந்தது.

நாச்சிக்குடா வீழ்ச்சி மேற்கு கடற்பரப்பில் கடற்புலிகளின் மேலாதிக்கத்தை இழக்கச் செய்தது. ஆயுத பரிவர்த்தனை, விநியோகம் மற்றும் இந்தியக் கரையிலிருந்து உணவு, மருந்து, எரிபொருள் கொள்வனவு இதனால் பெரும் நெருக்கடிக்குள்ளானது. 2008 செப்டம்பரில் பூநகரி ராணுவ வசம் விழுந்தது. அங்கிருந்து ஷவேந்திர சில்வாவின் படையணிகள் பரந்தனை இலக்கு வைத்து முழங்காவில் நோக்கி நகரத் தொடங்கின.

இன்னொருபுறம் கனகராயன்குளத்திலிருந்து புறப்பட்ட 56, 57-வது டிவிஷன்கள் ஜெயசிகுறு எதிர் போரின் காலத்தில் புலிகளின் காவியச்சமர்கள் கண்ட மாங்குளம் வந்துவிட்ட னர். அங்கிருந்து மல்லாவி-துணுக்காய் வழி புத்துவெட்டுவானில் மன்னாரைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட 58-வது டிவிஷனோடு இணையும் இலக்குடன் நகரத் தொடங்கின.

தளபதி பால்ராஜ் அவர்களுக்கு இணை யான பெருமைக்குரியவரும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரு மான பிரிகேடியர் தீபன் இரும்புக்கோட்டை போல் - யாழ்குடாவின் சுமார் 50,000 ராணு வத்தினரை முகமாலை பகுதியில் எதிர்கொண்டு வீரச்சமர்கள் பல நடத்தினார். 2008 நவம்பர் 16 தொடங்கி 19-ம் தேதிவரை அவரது அணியினர் நடத்திய ஆவேசத் தாக்குதல்களில் சிங்கள ராணுவத்தின் இரண்டு டிவிஷன்களை நிர்மூலமாக்கினார். கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் பிறந்த -வேலாயுதம்பிள்ளை பகீரத குமார் என்ற இயற்பெயர் கொண்ட பிரிகேடி யர் தீபன் அவர்களின் முகமாலைக் களமுகச் சாதனைகளும், பின்னர் 2009-மார்ச்சில் தேசியத் தலைவரை காத்து நின்று புதுக்குடி யிருப்பு அனந்தபுரம் தென்னந்தோப்பில் அவர் நடத்திய தியாகச் சமரும் உரிய மகத்துவத் துடன் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. பல்முனைகளிலும் பல்லாயிரம் ராணுவத் தினரை எதிர்கொண்டு பரந்தன்- கிளி நொச்சி விழுகின்றவரை முகமாலை யை காத்த பிரிகேடியர் தீபன் தமிழின வரலாற்றின் மிகச்சிறந்த தளபதிகளில் ஒருவராக எதிர்காலத்தில் போற்றப்படு வார். 2009 புத்தாண்டு முதல் வாரத்தில் கிளிநொச்சி-பரந்தன் நிலைகள் விழுந்ததும் தீபன் தன் அணிகளோடு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நோக்கி பின்வாங்கினார்.

பூநகரி விழுந்த பின்னர்தான் கிளி நொச்சி - முல்லைத்தீவு என நகர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிக்கும் எண்ணத்தை சிங் கள ராணுவம் துணிவோடு வளர்த்தது. எம்.கே. நாரா யணன் தலைமையிலான இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பும், சீனாவும் சிங்களத்தின் எண்ணங்களை ஊக்குவித்து உரமிட்டதாகச் சொல்லப்படுகிறது.

பின்னோக்கிப் பார்க்கையில் தன் மிகச் சிறந்த அணிகளை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் மன்னார் களத்தில் இறக்கியிருக்க வேண்டு மென ராணுவ நோக்கர்கள் கருதுகின்றனர். அங்கு மரணஅடி கொடுக்கப்பட்டிருந்தால் ஆனையிறவு -கிளிநொச்சி -முல்லைத்தீவு ஆசை களை சிங்கள ராணுவம் வளர்த்திருக்காது. தளபதி பானு தலைமையில் நின்ற போராளிகளில் ஒரு தொகுதியினர் இயக்கத்திலிருந்து சமாதான காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப் பட்டு, சண்டை தொடங்கியபின் சேர்க்கப்பட்ட வர்கள் எனச் சொல்லப்படுகிறது. அவர்கள் முழு அர்ப்பணத்துடன் சண்டையிடவில்லையென்ற கருத்தும் நிலவுகிறது. பிறிதொரு தகவலின்படி தளபதி பானுவின் செய்தி-தகவல் தொடர்பு பிரிவில் கருணம்மானின் இரண்டு துரோகிகள் ஊடுருவிவிட்டிருந்ததாகவும் தாக்குதல் திட்டங் களையெல்லாம் எதிரிக்கு அவர்கள் உடனுக்குடன் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் துரோகிகள் 2009 ஏப்ரல் இறுதி வாரத்தில் முல்லைத்தீவு சண் டைகளின்போது அடையாளம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட தாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன. பரந் தன்-கிளிநொச்சி விழுந்த காலத்தில் இலங்கை ராணு வத்தின் நீண்டதூர ஊடுருவித் தாக்கும் அணிகள் மணலாறு-நெடுங்கேணி பழம்பாசி வழி ஒட்டிசுட் டான் நோக்கி ஒருமுனையிலும், இன்னொரு முனை யில் அதே ஒட்டிசுட்டான் நோக்கி மாங்குளம், கரிப் பட்ட முறிப்பு வழியாகவும், மூன்றாம் அணியொன்று மணலாறு-அலம்பில்-செம்மலையூடாக முல்லைத்தீவு நோக்கியும் வெற்றிகரமாக ஊடுருவி நகர்ந்தன.

கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய புலிகளின் அணிகள் வட்டக் கட்சியில் நிலைகொண்டன. பரந் தனிலிருந்து முரசுமொட்டை, விசுவமடு வழி முன் நகர்ந்த ராணுவத்தினரை வள்ளிபுனத்தில் புலிகள் இடைமறித்து பெரும் இழப்புகளை ஏற்படுத்தினர். எனினும் மணலாறு, ஒட்டிசுட்டான் பகுதிகளிலிருந்து நகர்ந்த ராணுவத்தினர் முல்லைத்தீவு புதுக்குடியிருப் பில் வெற்றிகரமாக இணைந்தன.

இத்துணை நெருக்கடியான காலகட்டத்திலும் பிரபாகரன் அவர்கள் தனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு காடுகளுக்குள் நகரவில்லை. பெரு மிதம்கொண்ட போராளியாய் களமுனையில் முன் நின்றார். அவரது தலைமையில் ஆனந்தபுரம் தென் னந்தோப்பில் சுமார் 40,000 ராணுவத்தினரை 150 மீட்டர் தூரத்தில் நாற்புறமும் எதிர்கொண்டு அவர் கள் நடத்திய சமருக்கு ஈடாக ஒப்பிட உலக வரலாற் றில் வேறு களங்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment