Monday, June 7, 2010

கோபாலபுரத்தை தானம் தந்த கலைஞர்!



shockan.blogspot.com

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர்-55ஆண்டுகாலமாக தமிழ்த் திரையுலகின் வசனகர்த்தா- அதிக ராயல்டி பெறும் தமிழ்ப் படைப்பாளி எனப் பல பெருமைகளைக் கொண்ட முதல்வர் கலைஞருக்கு சொந்தமாக இருக்கும் சொத்துகள் கோபாலபுரம் வீடும், திருவாரூர் அருகே காட்டூரில் அஞ்சுகம் அம்மாள் கல்லறை அமைந்துள்ள இடமும்தான்.

""இந்த இரண்டும்தான் நான் சம்பாதித்த சொத்துகள்'' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறும் கலைஞர், கோபாலபுரம் வீட்டைத் தனக்கும் தன் மனைவி தயாளுஅம்மாளுக்கும் பிறகு ஏழைகளுக்கான இலவச மருத்துவமனை நடத்துவதற்கு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சொன்னபடி, ஜூன் 2-ந் தேதியன்று, இலவச மருத்துவமனைக்காக கோபாலபுரம் வீட்டை பத்திரப்பதிவு செய்து, முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றதை யொட்டி, நாம் அங்கு இருந்தோம். கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்ற பெயர் சூட்டப்படும் கோபாலபுரம் வீட்டை, மருத்துவமனையாக்கி பராமரிப்பதற்காக அன்னை அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அறக்கட்டளையின் உறுப்பினர்கள் யார் யார் என தெரிந்து கொள்வதில் கட்சிப்பிரமுகர்களும் குடும்ப உறுப்பினர்களும் ஆர்வமாக இருந்தனர். காலை 9.30 மணிக்கு ரிஜிஸ்ட்ரார்கள் வந்திருந்தனர்.

கோபாலபுரம் இல்லத்தின் மாடிக்கு அவர்கள் செல்ல, அங்கே தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வி.சி. குழந்தைசாமி ஆகியோர் கலைஞருடன் பேசிக்கொண்டிருந்தனர்.. தயாளு அம்மாள், மு.க.அழகிரி,அமிர்தம், டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோரும் குழுமியிருந்தனர். "ஸ்டாலின் எங்கே?' என்று கேட்கப்பட்டபோது, அவர் ஒரு திருமணவிழாவில் பங்கேற்றிருப்ப தாகவும் வந்துகொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

பத்திரப்பதிவிற்கான நடவடிக்கைகளை மத்திய சென்னை பதிவுத்துறை துணைத் தலைவர் டி.கே.ஹரிஹரன் தொடங்கினார். குறுகலான இடம் என்பதால் அங்கே திரண்டிருந்த பிரஸ் ஆட்கள் நெருக்கடியை ஏற்படுத்தினர். உடனே கலைஞர், பிரஸ்... பிரஸ் பண்ணாதீங்க என்று சொல்ல, நெருக்கடி மறைந்து கலகலப்பு ஏற் பட்டது. ஒப்பந்தப்பத்திரத்தை முதல்வரின் செயலாளர் சண்முகநாதன் வாசிக்க ஆரம்பித்தார். "கோபாலபுரம் இல்லம் 1955-ஆம் ஆண்டு சரபேஸ்வர அய்யர் என்பவரிடமிருந்து வாங்கப்பட்டது. பின்னர், 1968-ல் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த இல்லத்தை தனது மற்றும் தனது மனைவி திருமதி தயாளுஅம்மாள் காலத்திற்குப்பிறகு ஏழை மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனையாக மாற்றிட இலவசமாக அளிப்பேன் என்று அறிவித்ததை நிறைவேற்றும் வகையில் கலைஞரின் மகன்கள் மூவரும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 2009-ம் ஆண்டு திருப்பி அளித்தனர். தற்போது இந்த மருத்துவமனையினை நிர்வகிக்க கலைஞரின் அன்னையார் பெயரில் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை என்ற அறக்கட்டளை யினை கலைஞர் அவர்கள் நிறுவியுள்ளார்.





சி.கே.ரங்கநாதன், இராம.நாராயணன், கவிப்பேரரசு வைரமுத்து, ஆ.இராசா, எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரை இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் களாக நியமனம் செய்துள்ளார். இந்த மருத்துவமனைக்கு "கலை ஞர் கருணாநிதி மருத்துவமனை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பத்திரப் பதிவு இன்று (2-6-2010) கலைஞரின் இல் லத்தில் நடைபெற்றது.

சண்முகநாதன் படித்ததும், கையெழுத் திடுவதற்குத் தயாராக பேனாவைத் திறந்தார் கலைஞர். அப்போது வழக்கறிஞர் எஸ்.ராமசாமி, ""அய்யா கறுப்புதானே'' என இங்க் பற்றிக் கேட்க, கலைஞர் சட்டென, ""இது கறுப்பு அல்ல, எல்லாம் ஒயிட்'' என்று சொத்து பற்றி சொல்ல, மீண்டும் அந்த இடம் கலகலப்பானது. அதன் பின், பத்திரத்தில் 30 இடங்களில் கையெழுத் திட்டார் கலைஞர். பதிவாளர் ஒரு இடத்தில் கைரேகை வைக்கச் சொல்ல "என் கையெழுத்து மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா' என்று சிரித்தார். தமிழில் கையெழுத்திடும் கலைஞர், தன் கையெழுத்தின் கடைசிப் பகுதியில் இரண்டு புள்ளி களை கீழே வைத்து முடிப்பார். அதனைச் சுட்டிக்காட்டி, ""இது திராவிடநாடு வரைபடம் போல இருக்கும். திருச்சி சிறையில் இருந்தபோது இப்படி கையெழுத்து போட்டுப் பார்த்து பழகினேன்'' என்றார். அனைத்துக் கையெழுத்துகளையும் கலைஞர் போட்டு முடித்தபோது, அங்கிருந்த அறங்காவலர்கள் உள்பட அத்தனை பேரும் கைதட்டினர்.





அறக்கட்டளை உறுப்பினர்களில் குடும்பத்தின ருக்கு இடம் தரப்படவேண்டும் என சிலர் ஆசைப்பட்டி ருக்கிறார்கள். கலைஞர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மு.க.முத்து மருமகனும் கவின்கேர் நிறுவனத்தின் அதிபருமான சி.கே.ரங்கநாதன் இதில் இடம்பெற்றி ருந்தாலும், மாற்றுத்திறனாளிகளுக்காக அவர் நடத்தும் சமூக சேவை அமைப்பின் காரணமாகவே கலைஞர் இடம் தந்திருக்கிறார். மருத்துவமனை சம்பந்தமான அறக்கட்டளை என்பதால் மருத்துவமனை நடத்தும் ஜெகத்ரட்சகனுக்கு அறங்காவலர் பொறுப்பு. நம்பிக்கையாக செயல்படுபவர் என்பதால் ஆ.ராசாவை இடம்பெறச் செய்த கலைஞர், அதே காரணத்துக்காக ராம.நாராயணனுக்கும் இடமளித்துள்ளார். நெருக்கமான இலக்கிய நண்பர் என்பதால் வைரமுத்துவுக்கும் இடம். பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்ட அறக்கட்டளையை உருவாக்கி,அதன் மூலம் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம்.

14 வயதிலிருந்து பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள கலைஞர், தன் 87-வது வயதில் தன்னுடைய இல்லத்தை பொதுநலனுக்காக அளிப்பதை முறைப்படி பதிவு செய்திருக்கிறார். ""கோடியென வந்த சம்பளத்தையும்- குடியிருந்த வீட்டையும்-தமிழுக்காகவும், ஏழையெளி யோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் - தன் அறிவையும் ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித் தவன்-உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துகள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்துகொண்டிருக்கிறான்'' என தன் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையில் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

உண்மைதான். இந்திய அரசியலின் முக்கியத் தலைவர்கள் பலரும் வந்து ஆலோசித்து சென்ற கோபாலபுரம் இல்லத்தை தன் பிறந்தநாள் பரிசாக ஏழைகளுக்கு வழங்கியுள்ள கலைஞர் நூறாண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தும் தமிழக மக்களுடன் இணைந்து நக்கீரனும் வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment