Friday, June 4, 2010

ஆபாச நடனம்தான் தமிழ்க் கலையா? கொதிக்கிறார் ராஜா




ராஜா... இப்போது உக்கிரத்தின் உச்சத்தில்!


''இசையும் கலையும் உலகமயமாகிடுச்சுன்னு சொல்றாங்க. இசையும் இசைக்கான கருவிகளும் உலகமயமாகலாம். அந்த இசையை உருவாக்கும் சக்தியின் இடம் எது? அது உள்ளுக்குள் ஆன்மாவில் இருக்கிறது. அந்தச் சக்தியை யாராலும் உலகமயமாக்க முடியாது'' - கண்மணிகள் உருள்கின்றன.

'ஜா டே ஜடுத்தி' என்ற இந்திப் படத்துக்கு இளையராஜாதான் இசை. இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான விஸ்வாஸ் பாட்டீல் எழுதி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற கதை இது. இந்தப் படம், மாறி வரும் கிராமிய நடனக் கலைகளைப்பற்றியது. இதற்காக மகாராஷ்டிராவின் பூர்வீக இசை மற்றும் நடனக் கலைகள்பற்றி ஆறு நாட்கள் பயணம் செய்து நேரடிய£க அறிந்து வந்திருக்கிறார் ராஜா.

''பாரம்பரியக் கலை வடிவங்களை எப்படிக் காப்பாற்றுவது என மராட்டிய மக்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இசையும் நடனமும் இணைந்த கலவையில் தங்களின் பண்பாடு, கலாசாரம், வீரம், சோகம், பக்தி என அத்தனை உணர்ச்சிகளையும் அழகாகச் சொல்கிறார்கள். அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை ஒட்டியே இருக்கின்றன. ஆதிகாலத்தின் போர் முறையைச் சொல்லும் நடனம் என்னை பிரமிக்கச் செய்தது. போரின்போது மனித சக்தி அதிகம் செலவாகாமல், போர் புரிய வேண்டும். அதேபோல அதிக சக்தி செலவாகாமல், ஆனால் பார்க்க மிக எனர்ஜியான நடனம் ஆடினார்கள். கத்தியைச் சுழற்றி வீசி ஆடுபவர் நடுவில் இருக்கிறார். அவரைச் சுற்றி நான்கு பேர்... ஒருவரின் முழங்காலில் வெங்காயம், இன்னொருவரின் உள்ளங்கையில் உருளைக்கிழக்கு, சாய்ந்து படுத்திருக்கும் ஒருவரின் கழுத்தில் வாழைப்பழம். என்ன நடக்கப் போகிறது என்று ஆவலாகப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, ரிதமிக்காக ஆடிக்கொண்டே கண் இமைக்கும் நேரத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் மூன்றையும் துண்டு துண்டாக வாளால் வெட்டுகிறார். வாள் சுழற்றும் வேகத்தில் உடல் மீது லேசாகப் பட்டாலும் ஆறு மாதங்களுக்கு எழ முடியாது. அப்படி ஒருவேகம், வீச்சு. இந்த எனர்ஜியை 'குளோப லைஸ்' பண்ண முடியுமா?

சதாரா செல்லும் நெடுஞ்சாலையில் மாமரங்கள் நிறைந்த ஒரு தோப்பில், பழங்காலத்து நடனக் கலைகளை ஆடிக்கொண்டு இருக்கிறது ஒரு குழு. நவீன யுகத்தின் பாதிப்பு சிறிதும் இல்லாமல் ஆர்மோனியம், டோல்கி, லசிம் போன்ற பாரம்பரிய இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட சினிமா இசையின் பாதிப்பு இல்லாமல் ஆடுகிறார்கள். அவர்கள் அனைவரும் சத்ரபதி சிவாஜியின் வாரிசுகள். கலைக்காகவே தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.

என் பயணத்தின் இறுதி நாளில் பாலே நடனம் போன்ற ஒன்றைக் கண்டேன். நிகழ்ச்சி ஒரு மேடையில்தான் நடந்தது. ஆனால், கேரளப் படகுப் போட்டி முதல், மீனவனின் நடனம் வரை அனைத்தையும் அப்படியே கண் முன்னால் கொண்டுவந்தது, கலை ரசனையின் உச்சம். மகாராஷ்டிராவின் ஒரு குக்கிராமத்தில் இந்தக் கலையை நிகழ்த்துபவர் யார் என விசாரித்தால், மும்பைப் பல்கலைக்கழகம் ஒன்றின் தொல்லியல் துறைத் தலைவர். அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஏன் நம் ஆட்களுக்கு வரவில்லை?

மேல் நாட்டில் பாலே டான்ஸ், ஓபராய், சிம்பொனி, பாப், ஜாஸ் என அந்த நாட்டுக் கலைகள் எல்லாம் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஏனெனில், அவை அவர்களுக்குக் கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டு இருக்கிறது. அங்கு 87 சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா இன்னும் இயங்கி வருகிறது. ஆனால், நம் தமிழ்க் கலைகளின் நிலைமை?

மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், பா¬வக் கூத்து, உடுக்குப் பாட்டு, கும்மிப் பாட்டு என நம்மிடம் 300 வகையான கிராமியக் கலைகள் இருந்தன. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக 50 கலைகள் மட்டும் ஒரு சிலரின் சொந்த முயற்சியில் உயிர் வாழ்கின்றன. நலிந்துபோன கலைகளைக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றுபவர்கள், தங்கள் பிள்ளைகளாவது வேறு நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்றுதான் ஏங்குகிறார்கள். அந்த அளவுக்கு வருமானம் இல்லை. இந்த மாதிரியான கலைகளுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லவும் நம்மிடம் போதுமான ஆற்றலும் திறமையும் இருக்கிறது. ஆனால் யாரும் செய்வது இல்லை. நம் ஊரில் என்ன நடக்கிறது? பிரமாண்ட மேடைகள் அமைத்து, அதில் அரைகுறை ஆடை அணிந்த சினிமா நடிகைகளை அழைத்து ஆடவிடுகிறார்கள். சினிமா விழாவில் அப்படி நடந்தால்கூடப் பரவாயில்லை. மற்ற விழாக்களிலும் இந்த ஆபாச நடனம் நடந்தால் நம் பாரம்பரியக் கலைகள் எப்படி வளரும்?

இந்தியில் 'சாணக்கியா' என்ற மிகப் புகழ்பெற்ற தொடரின் இயக்குநர் சந்திரபிரகாஷ், 'சிலப்பதிகாரம் கதையை இந்தியில் எடுக்கப்போகிறேன். அதைப்பற்றிய ஆராய்ச்சி நூல்களைக் கொடுத்து உதவுங்கள்' என்று என்னைக் கேட்டார். 'என்னை விட, எல்லோரையும்விட சிலப்பதிகாரம் பற்றி அதிகம் தெரிந்தவர் முதல்வர் கருணாநிதிதான்' என்று சொல்லி முதல்வரைச் சந்திக்கச் சொன்னேன். ஓர் இந்திக்காரர் சிலப்பதிகாரத்தின் மீது ஆர்வம் காட்டுகிறார். ஆனால், நாம் மறந்துவிட்டோம்.

நான் திருவாசகம் இசை உருவாக்குவதற்கு முன்பு தமிழகக் கலைகளை மையமாகவைத்து இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. பொருளாதாரமும் நேரமும் ஒத்துழைக்கவில்லை. தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைக் காப்பாற்ற வேண்டும். அவை ஆயிரமாயிரம் ஆண்டு தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள்!''

No comments:

Post a Comment