Tuesday, June 1, 2010

முடிவெடுக்க முடியாமல் ராமதாஸ் திணறல்-மீண்டும் கருணாநிதியை சந்திக்கும் பாமக எம்.எல்.ஏக்கள்


shockan.blogspot.com
ராஜ்யசபா சீட்டை ஒதுக்க திமுக தற்போது தயாராக இல்லை என்ற நிலையில் எந்தவித மாற்றமும் இல்லாததால், திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு வர முடியாமல் டாக்டர் ராமதாஸ் தடுமாறி வருகிறார். மீண்டும் பாமக எம்.எல்.ஏக்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இதுதொடர்பாக பேசவுள்ளதாக ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பாமகவுடன் கூட்டணிக்குத் தயார். ஆனால் ராஜ்யசபா சீட் இப்போது தர முடியாது, அடுத்த தேர்தலில்தான் தரப்படும் என திமுக கூறியுள்ளது. கூட்டணிக்குத் தயார் என்று திமுக கூறியதால் மகிழ்ச்சி அடைந்த பாமக, சீட் கிடையாது என்று கூறியிருப்பது பாமகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அடுத்த தேர்தல் என்றால் 2013 வரை காத்திருக்க வேண்டும் என்பதால் அதுவரை திமுகவை விமர்சித்தோ, கண்டித்தோ பேசாமல் கப்சிப்பென்று அரசியல் நடத்தியாக வேண்டிய நிலை. அதாவது காங்கிரஸ் கட்சியைப் போல எதையும் பேசாமல், வாய்மூடி மெளனியாக இருந்தாக வேண்டும். ஆனால் இதை ராமதாஸ் விரும்பவில்லை.

இதையடுத்து நேற்று தனது கட்சி எம்.எல்.ஏக்களை அனுப்பி முதல்வர் கருணாநிதியை சந்திக்க வைத்தார். அவர்களும் முதல்வருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி விட்டுத்திரும்பினர். ஆனால் ராஜ்யசபா சீட் மற்றும் கூட்டணி தொடர்பாக திமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றம் இல்லை என்று திமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

நேற்று முதல்வரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், இங்கு பேசியவற்றை டாக்டர் ராமதாஸிடம் சொல்வோம். அவர்இறுதிமுடிவு எடுத்து அறிவிப்பார் என்றார்.

நேற்று இரவு மீண்டும் ஜி.கே.மணியை செய்தியாளர்கள் அணுகி,டாக்டர் ராமதாஸ் இறுதி முடிவை எடுத்து விட்டாரா என்று கேட்டனர். அதற்கு மணி பதிலளிக்கையில்,

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பா.ம.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதியை சந்தித்து பேசுவது என்றும், அதன்பிறகு கூட்டணி குறித்த இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி 1-ந்தேதி சென்னை கோபாலபுரத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்தது. சந்திப்பு நீண்டநேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் விவரங்கள் அனைத்தும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் எடுத்து சொல்லப்பட்டது. சொல்லிய பிறகு கூட்டணி குறித்த இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிக்கவில்லை.

மேலும் கட்சி நிர்வாகிகளுடன் இது குறித்து தொடர்ந்து அவர் ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கிறார். மீண்டும் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழு முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசி அதன் அடிப்படையில் கூட்டணி சம்பந்தமான இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்றார்.

பாமக எம்.எல்.ஏக்கள் மீண்டும் எப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசுவார்கள் என்பதை மணி தெரிவிக்கவில்லை.

சீட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கூட்டணியில் சேரலாம் என்ற முடிவுக்கு வருவதா அல்லது சீட் கிடைத்தால் மட்டும் கூட்டணியில் சேருவதா என்ற முடிவுக்கு வர முடியாமல் டாக்டர் ராமதாஸ் திணறி வருவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment