Monday, June 7, 2010

தாயிடம் குழந்தைகளை மீட்டுக் கொடுத்த...



shockan.blogspot.com

"குழந்தைகள் காப்பகத்திலிருக்கிற என் பொண்ணையும், என் பையனையும் மீட்டுத்தாங்க ' என கதறியழும் வசந்தியின் குரல் யார், யாருக்கோ எட்டியும் தன் கதறலை யாரும் எதிரொலிக் காததால் வசந்தி கடைசியாய் நாடியது நம்மைத்தான்.

கோவை ஒண்டிப்புதூரிலிருக்கும் தாய் வசந்தியை நோக்கி நாம் ஓடோடிப் போன சமயம் கண்ணீரும் கவலையும் பொங்க அமர்ந்திருந்த அந்தத் தாய் தன் இரு குழந்தைகளும் காப்பகத்தில் இருக்கும் கதையை சொல்லத் தொடங்கினார். ""நான் சிவகுமார்னு ஒருத்தர உயிருக்குயிரா காதலிச்சேன். ரெண்டுபேருமே வேற வேற சாதிங்கறதால மத்த வீடுகளைப் போலவே எங்களோட காதலையும் எங்க வீட்டுல ஏத்துக்கல. ஒரு சாயங்கால நேரத்துல வீட்டை விட்டு ஓடிப்போய் நான் அவரைக் கல்யாணம் பண்ணிக் கிட்டேன்.

பெரிசா நாங்க வாழாமப் போனாலும் ஒரு சின்ன வீட்டுல சந்தோஷமா வாழ்ந்தோம். நான் கர்ப்பம் தரிச்சு என் பொண்ணு ஹர்சினிய பெத்தெடுத்தேன். அப்பக்கூட எங்க வீட்டுல யாருமே என்னை வந்து பார்க்கலை. என்னைய வேண்டான்னு வீட்ல இருக்கறவங்க ஒதுக்கி வச்சுட்டாங்க. என் பொண்ணு எல்.கே.ஜி. படிக்கும்போது திரும்பவும் நான் 9 மாசம் கர்ப்பமா இருந்தேன். அப்பதான் என் புருஷன ஒரு திருட்டு வழக்குல போலீஸ் கைது பண்ணிட்டுப் போனாங்க.

வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிறவங்க "கர்த்தரை ஜெபிச்சா உன் பிரச்சினையெல்லாம் சரியாப்போயிரும்'னு சொன்னாங்க. அதன்படியே சர்ச்சுக்கு போக ஆரம்பிச்சேன். பாஸ்டர் டேவிட் டேனியல்ங்கறவரு ஒண்டிப்புதூர்ல கிங் கிட்ஸ் ஸ்கூல்னு வச்சு நடத்திட்டிருக் காரு. அங்க உன் பொண்ணை விட்ரு. அங்கயிருந்தே படிக்கட் டும். உன் புருஷன் வெளிய வர்ற வரைக்குந்தானே, அதுக்கப்புறம் உன் பொண்ண கூப்புட்டுக்க லாம்'னு சொன்னாங்க. மன சொடிஞ்சு போயிருந்த நானும் அதன்படி செஞ்சேன். ஏதோ பாண்டு பேப்பர்ல பாஸ்டர் கையெழுத்து வாங்குனாரு. அழுது கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன்.

வருடங்கள் ஓட... ஓட... சிறையிலிருந்து விடுதலையான புருஷன் என்னைய விட்டுட்டு எங்கயோ போயிட்டான்.

வாரந்தவறாம குழந்தைகளைப் போய் பார்த்துட்டு அவுங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துட்டு வருவேன். இந்த நிலைமையிலதான் இத்தனை வருஷம் கழிச்சு எங்க வீட்டுல இருக்கறவங்களோட மனநிலை மாறுச்சு. என்னைய பெத்தவங்க என்னைய ஏத்துக்கிட்டாங்க. எனக்கும் இப்ப நல்ல வேலை கிடைச்சிருச்சு. என் பொண்ணுக்கு இப்ப 13 வயசு. பெரிய மனுஷி ஆகற வயசு. பையனுக்கு 9 வயசு.

அதனால குழந்தைகளை எடுத்துட்டு வந்து நாமளே வளர்த்துக்கலாம்னு எங்க வீட்ல சொன்னாங்க. ஆசை ஆசையா ஓடிப்போய் குழந்தைகளைக் கேட்டபோது குழந்தைகளைத் தரமாட்டேன்னு சொல்றாரு பாஸ்டர் டேவிட் டேனியல்.

"ஏற்கனவே பாண்டு பேப்பரில் திருப்பி கூப்புட்டுட்டுப் போகும்போது இவங்களுக்கு செலவு ஆன பணத்த குடுப்பேன்னு நீங்களே கையெழுத்து போட்டிருக்கீங்களே'ன்னு பாஸ்டர் சொல்றாரு.

கலெக்டர்கிட்ட குழந்தைகளை மீட்டுத் தரக்கோரி 3 மாசத்துக்கு முன்னால புகார் கொடுத் தேன். எத்தனையோ பேருகிட்ட இதைச் சொல்லியும் முடிவு கிடைக்கலை. எப்படியாவது என் குழந்தை களை மீட்டுத்தாங்க சார்'' என்று அழத் தொடங்கி விட்டார்.

நாம் உடனே மாநகர சட்டம்-ஒழுங்கு டி.சி. நாகராஜனிடம் வசந்தியை கூட்டிக்கொண்டு போய் விஷயத்தை சொன்னோம். வசந்தியைப் பார்த்து பரிதாபப்பட்ட டி.சி. நாகராஜன், பி-7 இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன், எஸ்.ஐ. சரஸ்வதி தலைமையிலான டீமை நம்முடன் அனுப்பி குழந்தைகளை மீட்டுத் தாயிடம் ஒப்படைக்கச் சொன்னார்.

இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் அங்கிருந்தே பாஸ்டரை தொடர்புகொண்டு நாங்கள் குழந்தைகளை மீட்டுக்கொண்டு போவதாகச் சொல்ல... "அது எப்படி? பணத்தை வச்சிட்டு அவுங்க அம்மாவ குழந்தைகளைக் கூப்புட்டுட் டுப் போகச் சொல்லுங்க' என்றவர், "இந்த கேஸ் ஏற்கனவே சமூகநலத்துறையில் இருக்கு. போலீஸ் இதுல தலையிட முடியாது' என்று போனை கட் பண்ணிவிட்டார்.

நாம் உடனே சமூகநலத்துறையின் உயர் அதிகாரி முருகேசனை தொடர்பு கொண்டோம்.

இரண்டு குழந்தைகளையும் இங்கே கூட்டிக்கொண்டு வாருங் கள் என்று அக்கறையோடு அழைத்தவர், உரிய விசாரணையை நடத்தி குழந்தைகளை அம்மா விடம் ஒப்படைக்க பாஸ்டருக்கு உத்தரவிட்டார்.

நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாய் ஹர்சினியும், பரதனும் தாய் வசந்தியிடம் இருக்க... சமூக நலத்துறையினர் ஒப்புதல் அளித்தனர். பரதன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க ஹர்சினியிடம் மட்டும் ஏனோ அழுகைதான் பீறிட்டுக் கொண்டே யிருந்தது.

போலீஸ், சமூக நலத்துறையினர், நாம் என எல்லோரும் ஹர்சினியிடம் விசாரிக்க... "எனக்கு அம்மாவ புடிக்கும். ஆனா நான் விடுதியிலேயே தங்கிப் படிக்கிறேன். எனக்கு இங்கதான் நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்கறாங்க. அவுங்கள விட்டுட்டு என்னால வர முடியாது' என அழுதவளிடம் தாய் வசந்தியோ, ""தங்கம் உனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்கலாம், எனக்கு நீதாண்டி இருக்கறே '' என்று தாய் வசந்தி சொல்லி அழுதபோதும் கூட ஹர்சினி கூட சேர்ந்து அழறாளேயொழிய எது சரி, எது தவறு என முடிவெடுக்க வயதில்லாத அவளின் தீர்க்கமான முடிவு விடுதியில் இருப்பது என்பதுதான்.

பாஸ்டரிடம் பேசிப் பார்த்தோம். ""முடிந்தால் நீங்களே அவளை கன்வின்ஸ் செய்துகொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

காரணம் விசாரித்தபோது... குழந்தைகள் பெயரில் வரும் வெளிநாட்டுப் பணத்தை பாஸ்டர்(!) இழக்க விரும்பாததுதான் என்பது தெரிய வருகிறது.

சின்ன வயதிலேயே அம்மா தன்னை விடுதியில் விட்டுவிட்டுப் போய்விட்டாளே என்ற எண்ணம்கூட இவளை காயப்படுத்தி யிருக்கலாம். ஆனால் என்றைக்காவது ஒருநாள் தன்னைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கை யோடு பரதனை கட்டியணைத்தபடி நம்மை நன்றிக்கரம் கூப்பி தாய் வசந்தி கண்ணீர் மல்க... நாமும் அங்கிருந்து கிளம்பினோம் சொல்ல முடியாத வலியோடு.

No comments:

Post a Comment