மாணவர்களின் ஸ்காலர்ஷிப் தொகையை ஆசிரியர்களே கொள்ளையடிக்கிறார்கள்’ என ஏகத்துக்கும் பெற்றோர் தரப்பில் இருந்து புகார்கள் வர... விசாரணையில் இறங்கினோம்.
புகார்க்குரல் எழுப்பும் மாணவர்கள் தரப்பில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கௌசல்யா, அஸ்வினி, ரேகா, சங்கீதப்பிரியா ஆகியோரைச் சந்தித்தோம்.
குமுறலோடு பேசிய அவர்கள் ""தலித் சமூகத்தைச் சேர்ந்த நாங்க இப்ப கல்லூரியில் சேர்ந்திருக்கோம். இதுக்கு முன்ன வி.டி.எஸ்.மேனிலைப்பள்ளியில் படிச்சோம். ப்ளஸ்-1, ப்ளஸ்-2 படிச்ச எங்களுக்கு அரசாங்கம் கல்வி உதவித்தொகை வழங்கியது. வருஷத்துக்கு 1,500 ரூபா வீதம் தந்த இந்த உதவித்தொகையை அந்தப் பள்ளி நிர்வாகம்... இவ்வளவு நாள் ஆகியும் எங்களுக்குத் தரலை.
அந்த பள்ளியில் ஸ்காலர்ஷிப் விவகாரத்தை கவனிக்கிற வெங்கடேசனிடம் போய்க் கேட்டால்... "ஹெச்.எம்.மை போய்ப் பாருங்க'ன்னாரு. ஹெச்.எம். ஆனந்தனைக் கேட்டால்... "இது என் வேலையில்லை. போய் ஆபீஸ் ரூமில் கேளுங்க'ன்னு துரத்தறார். அரசாங்கம் எங்களுக்குக் கொடுத்த கல்வி உதவித்தொகையை வாங்க 4 வருசமா அலையா அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். கொடுக்கமாட்டேங் கறாங்க''’என்றார்கள் ஆதங்கமாய்.
டேனிஷ் மிஷன் பள்ளியில் கடந்த ஆண்டு ப்ளஸ்-2 முடித்து வெளியே வந்திருக்கும் மாணவி கௌசல்யாவோ ""நானும் ப்ளஸ்-1 படிக்கும் போதே கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிச்சேன். இந்த ரெண்டு வருஷ உதவித்தொகையையும் கொடுக்க மாட் டேங்கறாங்க.. 2 வாரத்துக்கு முன்ன மார்க் ஷீட் வாங்கப் போனப்பகூட கேட்டேன். அரசாங்கம் இன்னும் அனுப்பலைன்னு சொல்றாங்க. அங்க படிச்ச பாதிப் பேருக்கு மட்டும் கொடுத்துட்டு மீதிப் பேருக்கான பணத்தை கொடுக்காம அமுக்கிட் டாங்க''’என்கிறார் கவலையாய்.
தலித் விடுதலை இயக்க நிறுவனர் ஞானசேகரனோ ""திருவண்ணாமலையில் இருக்கும் இந்தப் பள்ளிகள் மட்டுமல்ல... தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளில் இந்த நிலைமை இருக்கு. இது தொடர்பா நாங்க ஆதி திராவிட நலத்துறையில் கேட்டப்ப.. "பள்ளிகள் சரியா விண்ணப்பம் அனுப்பறதில்லை'ன்னு சொல் றாங்க. பள்ளிகள்ட்ட கேட்டா...
"நாங்க அப்ளிகேஷன் அனுப்பறோம். அவங்கதான் பணம் அனுப்பலை'ன்னு மழுப்பறாங்க. இந்த ரெண்டு தரப்பு சொல்றதுமே பொய். அரசாங்கம் ஒதுக்கும் உதவித் தொகையை பள்ளிகள்ல இருக்கும் சில நந்திகள்தான் வழிமறிச்சி.. தானே எடுத்துக்குது. இதே டேனிஷ் பள்ளியில் இருக்கும் ஒரு ஆசிரியர்... மாணவர்களைப் போல போலியாக் கையெழுத்து போட் டுட்டு.. உதவித்தொகைப் பணத்தை எடுத் திருக்காரு. அதற்கான ஆதாரம் எங்கக்கிட்ட இருக்கு. இது பற்றி அதிகாரிகள் தரப்பிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை''’என்றார் எரிச்சலாய்.
இந்த விவகாரம் குறித்து வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த னிடம் நாம் கேட்டபோது ‘""ஸ்காலர்ஷிப்பில் பிரச்சினை வருதுன்னு தெரிஞ்சதால்.. கடந்த ரெண்டு வருசமா நானே மாணவர்களைக் கூப்பிட்டு உதவித் தொகையைத் தர ஆரம்பிச் சிருக்கேன். 2006-2007-ல் 40 மாணவர்களுக்கான உதவித் தொகை வரலை. அதற் கான ரெக்கார்டுகளைக் காட்டச் சொல்றேன் பாருங்க’’என்றவர்'' கிளரிக்கல் செக்ஷனைச் சேர்ந் தவர்களைக் கூப்பிட்டு... பைல் களை நம்மிடம் காட்டும் படி சொன்னார்.
அங்கிருந்தவர்கள் ஒருமணி நேரத்துக்கு மேலும் தேடிக் கொண்டே இருந்தனர்.
ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அலுவலர் கண்ணை யாவோ, ""டேனிஷ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பை அங்க இருக்கும் ஆசிரியரே திருடியது எங்க விசாரணையில் தெரியவந்திருக்கு. அவங்க விநியோகிக்காம வச்சிருந்த 24,500 ரூபாயை நாங்க திருப்பி வாங்கிட்டோம். அதை நாங்களே சம்பந்தப்பட்ட மாணவர்கள்ட்ட கொடுக்கப்போறோம். தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வி.டி.எஸ். மேல் நிலைப்பள்ளிக்கான உதவித் தொகையை நாங்க பள்ளிக்கு அனுப்பிட்டோம். அதே சமயம் அந்தப் பள்ளி குறித்த புகார்கள் எதுவும் எங்களுக்கு வரலை''’என்றார் உறுதியாக.
நிறைவாக நாம் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடமும் இந்த கல்வி உதவித்தொகை மோசடி குறித்துக் கேட்டோம். மாவட்ட ஆட்சியரோ
""டேனிஷ் பள்ளி ஆசிரியர் கில்பர்ட் தனசேகரன்... மாணவர்களின் கல்வி உதவித் தொகையை 3 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி கேட் டிருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் அவரைக் கைது செய்து... அவரிடமிருந்து பணத்தை ரெக்கவரி செய்து... சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பிரித்துக் கொடுப்போம். மற்ற பள்ளிகளின் நிலவரம் குறித்தும் விசாரணை நடந்துகொண்டிருக் கிறது''’என்கிறார் நம்மிடம்.
மாணவர்களின் கல்வி உதவித் தொகையில் கைவைக்கும் இப்படிப்பட்ட திருட்டு ஆசிரியர்களைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
No comments:
Post a Comment