தமிழகம் தழுவிய அளவில் நாம் மேற்கொண்ட கள ஆய்வில் ஆண்களின் வாக்குகளும் பெண்களின் வாக்குகளும் ஒரேவிதமாகப் பதிவாவதில்லை என்பது தெரியவருகிறது. ஆண்களிடம் சில கட்சிகளும், பெண்களிடம் சில கட்சிகளும் கூடுதல் செல்வாக்கைப் பெற்றுள்ளன. இந்த இடைவெளி அதிகளவில் இல்லை என்றாலும், தேர்தல் நாளில் வாக்குப்பதிவின்போது ஆண்கள் அதிகளவில் வாக்களிக்கிறார்களா, பெண்கள் அதிகளவில் வாக்களிக்கிறார்களா என்பதைப் பொறுத்து தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் நிகழும் என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்யமுடிந்தது.
மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு ஆண்கள் எந்த அளவு ஆதரவாக உள்ளார்கள், பெண்கள் எந்தளவு ஆதரவாக உள்ளார்கள் என்பது வரைபடங்களின் மூலமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் வாக்குகளில் 36% தி.மு.கவுக்கு கிடைக்கிறது. அ.தி.மு.கவுக்கு 31% கிடைக்கிறது. அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அன்றாடம் பத்திரிகை படிப்போர், புதிய தொழில் வாய்ப்புகள் பெற்றோர் உள்ளிட்டோரின் ஆதரவே தி.மு.க.வை ஆண்கள் மத்தியில் முதலிடத்தில் நிறுத்துவதற்கு காரணமாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தனக்குரிய பங்களிப்பைச் செய்யவில்லை என்ற எண்ணம் ஆண்களிடம் உள்ளது. காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் ஆண்களில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மீது அபிமானம் கொண்டவர் களைவிட சோனியா-ராகுல் போன்ற மேலிடத்து தலைவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களே அதிகம். நகர்ப் புறங்களில் தி.மு.க-அ.தி.மு.க இரண்டையும் விரும்பாத இளைஞர்கள், கிராமப்புறங்களில் சினிமாவசப்பட்ட இளைஞர்கள் ஆகியோரிடம் விஜயகாந்த்துக்கு ஆதரவு உள்ளது. பா.ம.க.வுக்கு அதன் சமுதாய வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் ஆதரவு உள்ளது. விடு தலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லிம் கட்சிகள், சாதி சார்ந்த கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவு மற்ற வை என்ற பொதுவான பிரிவுக்குள் அடங்குகிற அளவிலேயே உள்ளன.
பெண்கள் வாக்குகளில் அ.தி.மு.கவே 37% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜெய லலிதாவின் தலைமையை ஆதரிக்கும் பெண்களாலும், எம்.ஜி.ஆர். கட்சி என்ற அடிப்படையில் இரட்டை இலைக்கு ஆதரவளிக்கும் பெண்களாலும் இந்த நிலவரம் தொடர்கிறது. தி.மு.க அரசின் இலவச கலர் டி.வி., இலவச கேஸ் அடுப்பு, கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாத நிதியுதவி, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி எனப் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கடந்த 4 ஆண்டுகளில் பெண்களிடம் தி.மு.க.வுக்கு செல்வாக்கை உயர்த்தியுள்ளது.
அ.தி.மு.க.வுக்கும் தி.மு.கவுக்கும் பெண்கள் ஆதரவில் இருந்த இடைவெளியை இந்தத் திட்டங்கள் பெருமளவு குறைத்துள்ளன. தேர்தல் நேரத்தில், தி.மு.க.வுக்கான பெண்களின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதை நமது ஆய்வின் போது கணிக்க முடிந்தது. சோனியா காந்தியின் தலைமையும் ராகுலின் வசீகரமும் காங்கிரசுக்கு ஆண்களை விட பெண்களிடம் கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தருகிறது. விஜயாகாந்த்துக்கு கிராமப்புற பெண்களிடம் உள்ள ஆதரவு நகர்ப்புறத்துப் பெண்களிடம் இல்லை. பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள், புதியதமிழகம், முஸ்லிம் அமைப்பு கள் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் பெண்கள் அந்தந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்களே. மற்றவை என்பதில் ஆண்களைவிட பெண் களின் சதவீதம் கூடுதலாக உள்ளது. இதில், எந்தக் கட்சிக்கு வாக்கு என்று முடிவெடுக் காதவர்களும் முடிவைத் தெரிவிக்காத பெண்களும் அடக்கம்.
No comments:
Post a Comment