கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றார்.
சுமார் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் சரத் பொன்சேகாவை தோற்கடித்தார்.இதன்மூலம் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ராஜபக்சே.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தது. கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர் இரவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.இதில் ஆரம்பத்திலிருந்தே ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். தமிழர் பகுதிகளில் பொன்சேகாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தாலும் அவர் ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பின் தங்கியிருந்தார்.இறுதியில் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான ரூபவாகினி அறிவித்துள்ளது.
இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வாக்கு வித்தியாசத்திலும் ராஜபக்சே வென்றுள்ளார்.பொன்சேகா வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தோல்வியுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.வட கிழக்கில் பொன்சேகாவுக்கு கூடுதலான வாக்குகளும், தெற்கில் ராஜபக்சேவுக்கு கூடுதலாகவும் வாக்குகள் கிடைத்துள்ளன.
கடந்த 2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே 50.29 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கே 48.43 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இம்முறை சுமார் 60சதவீத வாக்குகளை ராஜபக்சே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment