ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ,நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் தெரிவிக்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம். முபீன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ள அவர் தான் தெரிவித்த கருத்து அந்த ஊடகத்தில் திரிபுபடுத்தப்டப்டிருந்ததாகவும் கூறினார்.
“இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் நாடு சொந்தமானது என்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்” என்றும் தனது உரையில் குறிப்பிட்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் .இதனைத் தான் அரசியல் யாப்பும் உறுதிப்படுத்துகின்றது.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு, வடக்கு கிழக்கு மக்கள் ஏனைய மக்கள் போல சம அந்தஸ்துடன் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. அதாவது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பினையும் உரிமையையும் உறுதிப்படுத்துவது” என்றும் குறிப்பிட்டார்.
1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை,குருக்கள் மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை போன்ற சம்பவங்களையும் தனது உரையில் நினைவுபடுத்திய ஜெனரல் சரத் பொன்சேகா தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.
குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் பின் கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட, பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கல்முனை செல்லும் வழியில் ஆரையம்பதி கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய முன்றலில் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளை அசைத்து தமது ஆதரவை வெளிப்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment