Friday, January 8, 2010

பொங்கல் படங்கள்: 'வரூம்... ஆனா வராது!'

வடிவேலு படத்தில் 'வரூ..ம்... ஆனா வரா...து!' என்று என்னத்தே கண்ணையா அடிக்கடி இழுப்பாரே... அது தமிழ் சினிமாவுக்குதான் மிகச் சரியாகப் பொருந்தும்.ஒவ்வொரு விசேஷத்தின் போதும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் படங்கள் இவை என்று பெரிய பட்டியலே போடுவார்கள்.
பண்டிகை நாளின் போது அந்தப் பட்டியலில் பெரும்பாலான படங்கள் பின்வாங்கிவிட, நான்கைந்து படங்கள் தேறினாலே பெரிய விஷயமாகிவிடும். அவையும் கூட சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது.
இதற்கு முக்கிய காரணம், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் திட்டமிடல் என்ற விஷயமே இல்லாமலிருப்பதுதான்.
இதைச் சொன்னால், 'படைப்பாளிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடக்காதீர்கள்' என்று டப்பா சென்டிமெண்ட் பேசுவார்கள்!சரி... இந்த பொங்கலுக்கு வரவிருப்பதாக இப்போதைக்கு பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் இவை:
ஆயிரத்தில் ஒருவன்
கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா நடித்து, செல்வராகவன் டைரக்டு செய்த படம். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை, ரூ.32 கோடி செலவில் ரவீந்திரன் தயாரித்து இருக்கிறார்.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாக ரீமாசென், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் வருகிறார்கள். அவர்களுக்கு உதவுகிற போர்ட்டராக கார்த்தி நடித்து இருக்கிறார். இவர்களின் அபூர்வமான 'கண்டுபிடிப்பு' பார்த்திபனாம். அது என்ன கண்டுபிடிப்பு? என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்களாம்.
குட்டிசி
ரஞ்சீவியின் அக்கா மகன் அல்லு அரவிந்த் நடித்து, ஆந்திராவில் வெற்றிபெற்ற ஆர்யா' என்ற தெலுங்கு படத்தை தழுவிய கதை இது. ஒரு கல்லூரி மாணவருக்கும், மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதை அவர்கள் இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை. தனுஷ் - ஸ்ரேயா ஜோடியாக நடிக்க, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்க, ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
கௌபாய் பாணி படம் இது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சாதாரண மனிதனைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் திரைக்கதை.ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா நடித்துள்ளனர். இம்சை அரசன் 23 ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவன் படம் என்பதால், கொஞ்சம் எதிர்பார்ப்புள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.
நாணயம்
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வந்த ஹாலிவுட் படத்தின் ஜெராக்ஸ் காப்பிதான் இந்த நாணயம்.பிரசன்னா, சிபிராஜ், ரம்யா, யாஸ்மின் நடித்து இருக்கிறார்கள். சக்தி, டைரக்டு செய்துள்ளார். கேபிட்டல் பிலிம் நிறுவனம் சார்பில் எஸ்.பி. பி.சரண் தயாரித்துள்ளார். படத்துக்கு வில்லன் சிபிராஜாம். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கும் வில்லனாகி விரட்டிவிடாமல் இருந்தால் சரி!
போர்க்களம்
பொல்லாதவன், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களில் நடித்த கிஷோர், கதாநாயகனாக நடித்துள்ளார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கிஷோர், ஆந்திரப் பெண் ஒருவருக்கு நேரும் பிரச்சினையை ஆந்திராவுக்கே போய் எப்படித் தீர்க்கிறார் என்பது கதை. பண்டி சரோஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த ஐந்து படங்களில் இரண்டு மட்டுமே திரையரங்குகளை உறுதி செய்துள்ளன. மற்றவை 'வரூம்... ஆனா வராது' ரகம்தான். வந்தால் சந்தோஷமாகப் பாருங்கள்!

No comments:

Post a Comment