பரபரப்பான உச்சத்தில் இருக்கிறது 26-ந்தேதி நடக்கும் இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல்.
இந்த தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசம் இருக்கும் நிலையில், போரின் வெற்றியை தனதாக்கிக் கொள்ளும் தீராத ஆசையில், முன்கூட்டியே நடத்துகிறார் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (ஆளும் கட்சி கூட்டணி) சார்பில் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சேவும், இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே உருவாக்கிய "தேசிய சுதந்திர கூட்டமை'ப்பின் (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) சார்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும், பிரதான வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.
ஜனநாயக கோட்பாடுகளை சிறிதும் மதிக்காமல் ஈழத் தமிழினத்தை கொன்றழித்து, உலகமே அதிர்ச்சியடையும் வகையில் மனித பேரவலத்தை தமிழீழத்தில் நடத்திக் காட்டியவர்களான இந்த நண்பர்கள் இரண்டுபேரும் (ராஜபக்சே, சரத் பொன்சேகா) தற்போது எதிரிகளாக நின்று தேர்தலை சந்திக்கின்றனர்.
தேர்தல் களத்தில் ராஜபக்சேவும், சரத்பொன்சேகாவும் சம பலத்துடனேயே மோதுகிற சூழல் காணப்படுகிற நிலையில், இவர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்தியாக தமிழர்களின் 15 சதவீத வாக்குகள் இருப்பதாகவே தேர்தல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இதனால் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து களத்தில் குதித்திருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தைச் சேர்ந்தவருமான சிவாஜிலிங்கம். ஆனால், இவருக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்க மறுத்து, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு' என்பது இந்த தேர்தலில் குறிப்பிடத் தக்கது.
""2008-ல் எடுக்கப் பட்ட வாக்காளர் பட்டிய லின் அடிப்படையில் நடக் கிறது இந்தத் தேர்தல். அதன்படி ஒட்டுமொத்த இலங்கையின் வாக்காளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர். இதில் தமிழ் வாக்காளர்கள் (வடகிழக்கு, மலையகம், மேல் மாகாணம்) எண்ணிக்கை 15 சதவீதம்.
அதாவது, 21 லட்சத்து 13 ஆயிரத்து 275 பேர்'' என்கிறது இலங்கை தேர்தல் ஆணையம்.மேலும், ""ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களான ராஜபக்சேவிற் கும் சரத்திற்கும்தான் போட்டி. இலங்கைத் தேர்தல் நடைமுறைகளின்படி, பதிவாகிற வாக்குகளில் யார் அதிகம் வாங்கு கிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்க முடியாது. மாறாக, பதிவாகிற வாக்குகளில் 50 சதவீதத் திற்கும் அதிகமாக யார் பெறுகிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவர்.
50 சதவீதத் திற்கும் அதிகமான வாக்குகளை ஒருவர் வாங்கிவிட்டால் வெற்றியை உடனடி அறிவிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.அதேசமயம், பிரதான வேட்பாளர் கள் இருவருமே 50 சதவீதத்திற்கும் குறைவாக முதல் இரண்டு இடங்களை பிடிக்கிற போதுதான் சிக்கல்.
, இரண்டாவது விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைத்துள்ளதை வைத்துதான் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும்.
அதாவது, இந்தத் தேர்தலில் ஒருவர் இரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். முதல் வாக்கினை ராஜபக்சே வுக்கும் இரண்டாவது வாக்கினை சரத் திற்கும் ஒருவர் போடலாம். அல்லது முதல் வாக்கு சரத்துக்கும் இரண்டாவது வாக்கு ராஜ பக்சேவுக் கும் பதிவாகலாம். அல்லது முதல் வாக்கு இவர்களில் ஒருவருக்கும் 2-வது வாக்கு இவர்கள் அல்லாத வேறு ஒருவருக்கும் ஒருவரின் ஓட்டு பதிவாகலாம்.
அந்த வகையில், முதல் ரவுண்டில் ராஜபக்சேவுக்கு 49 சதவீதமும் சரத்திற்கு 48 சதவீதமும் வாக்குகள் பதிவாகி யிருக்கும் பட்சத்தில்... இருவருக்கும் கிடைத்துள்ள இரண் டாவது விருப்ப வாக்குகள்தான் யார் வெற்றி பெற்றவர் என்பதை முடிவு செய்யும். இதுதான் இங்குள்ள தேர்தல் நடைமுறை.2005-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே 50.23 சதவீதமும் ரணில் விக்ரமசிங்கே 49.3 சதவீதமும் முதல் ரவுண்டில் வாக்குகள் வாங்கியிருந்தனர். முதல் ரவுண்டிலேயே 50 சதவீதத்தை ராஜபக்சே தாண்டியிருந்ததால் அவரது வெற்றியை உடனே அறிவிக்க முடிந்தது.
ஆனால், தற்போதைய தேர்தலில் அந்த சூழல் இருப்பதாக தெரியவில்லை. காரணம், யாரும் 50 சதவீதத்தை கடக்க முடியாத நிலையே இருக்கிறது. அதனால், ""இரண்டாவது விருப்ப வாக்குகள்'' என்கிற நிலையை நோக்கியே தற்போதைய இறுதி கள நிலவரம் போய்க் கொண்டிருக்கிறது!'' என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.யுத்தத்தின் வெற்றியால் கிடைத்த இமேஜ் மூலம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடலாமென்றும் கண்களுக்கு எட்டிய தூரத்தில்தான் தமது வெற்றி இருக்கிறது என்றும் கணக்கிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முன்வந்துள்ள ராஜபக்சேவிற்கு, சரத் பொன்சேகாவின் திடீர் அரசியல் பிரவேசமும் எதிர்க்கட்சிகளின் "பொது வேட்பாளர்' என்கிற கான்ஸெப்ட்டும் மிகப் பெரிய தடையாக பூதாகரமாகிவிட்டது. இந்த சூழலில் இரு தரப்புமே... சிங்களர் மற்றும் தமிழர்களின் வாக்குகளில் அதிகபட்ச வாக்குகளை பெற்று விட, இறுதிக்கட்ட மாயாஜாலங்களை காட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இரண்டு தரப்பினரும் "முதல் ரவுண்டிலேயே வெற்றி பெறுவோம்' என்று மார்தட்டுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை களத்தில் இறக்கியுள்ள ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலை வர்கள், ""2005-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 1 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஜபக்சேவிடம் தோற்றுப் போனார் ரணில். தேர்தலை புறக்கணிக்காமல் தமிழர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் ராஜபக்சே ஜெயித்திருக்கவே முடியாது. அந்த தேர்தலில் எங்களிடம் கூட்டணி பலமே கிடையாது. ராஜபக்சேவிடம் கூட்டணி பலம் வலிமையா இருந்தது. கூட்டணி பலமே இல் லாமல், 1 சதவீத வித்தியாசத் தில்தான் தோற்றார் ரணில். ஆனால், இந்த முறை அப்படி அல்ல, ரணில் உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அசுர பலம் கொண்டதாக இருக்கிறது.குறிப்பாக, கடந்த தேர்தலில் ராஜபக்சேவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்த ஜே.வி.பி. (சிங்கள பேரினவாத கட்சி) தற்போது எங்க கூட்டணியில் இருக்கிறது. மேலும் ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியை பிளவுபடுத்தி தனிக்கட்சி கண்டுள்ள மங்கள சமரவீராவும், 2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 7 சதவீத வாக்கு களைப் பெற்ற தமிழ்த்தேசிய கூட் டமைப்பும், அதே தேர்தலில் போட்டி யிட்டு 9 எம்.பி.க்களை பிடித்த ஜாதிக ஹெல உறுமய கட்சியும், 5 எம்.பி.க்களை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், மேல் மாகாணத்தில் தமிழர்களின் ஆதரவு பெற்ற மனோகணேசன் எம்.பி.யின் ஜனநாயக மக்கள் முன்னணியும் சரத்தை ஆதரித்து எங்க கூட்டணியில் இருக்கின்றன.
மெகா கூட்டணியாக நாங்கள் இருக்கிறோம். தவிர, அதிகார துஷ்ய பிரயோகம், ஊழல் முறைகேடுகள், குடும்ப அரசியல், ராணுவத்தின் தியாகத்தை கேவலப்படுத்தியது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு என்பவை ராஜபக்சேவிற்கு எதிராக இருக்கிறது. மேலும், சரத் பொன்சேகாவை காட்டிலும் ராஜபக்சே மீதுதான் தமிழர்களின் வெறுப்புகள் அதிகரித்து கிடக்கிறது. அதேபோல, எந்த கட்சியையும் சாராதவர் என்கிற இமேஜ் சரத்திற்கு இருப்பதும் கூடுதல் பலம். அதனால், எந்த அரசியல் கண் ணோட்டத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் முதல் ரவுண்டிலேயே சரத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விடும்'' என்கின்றனர் மிகுந்த நம்பிக்கையுடன்.ஆனால், இந்த விபரங்களையெல்லாம் மறுத்துப் பேசுகின்ற ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சியினரோ,
""ஒரு தேர்தலில் கூட்டணி பலம் மட்டுமே வெற்றியை தீர் மானிப்பதில்லை. சிங்களவர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் யார் பெறுகிறார் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. அந்த வகையில், 30 வருட காலம் சிங்கள வர்களை அச்சுறுத்திக் கொண்டி ருந்த ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சிங் களவர்க்கு நிம்மதியை ஏற்படுத்தித் தந்திருப்பது ராஜபக்சேதான். அது மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளிடம் இலங்கையின் இறையாண்மையை யும் தனித்தன்மையையும் அடகு வைக்காமல் ஆட்சி செய்த ராஜ பக்சேவிற்குத்தான் சிங்கள மக்க ளிடம் ஆதரவு அதிகம் உள்ளது. சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகள் ராஜபக்சேவிற்கு கிடைக்கும் என்பதால், இரண்டாவது விருப்ப வாக்கிற்கு அவசியமே இருக்காது. நாங்கள் எடுத்துள்ள கருத்துக் கணிப்பும் இதனைத்தான் கூறுகிறது. மேலும், 15 சதவீதம் உள்ள தமிழர் களின் வாக்குகள் ஒரே இடத்தில் குவிந்துவிடும் என்பதெல்லாம் ஏற் பதற்கல்ல. வட பிரதேச தமிழர்கள் (யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்) வேண்டுமானால் ராஜபக்சேவிற்கு எதிராக இருக்கலாம். மற்றபடி தென்னிலங்கை, மத்திய இலங்கை, கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களில் கணிசமானவர்கள் ராஜபக்சேவை ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மேலும், தமிழர்களில் ராஜபக்சேவை எதிர்ப்பவர்கள் சரத்தை ஆதரிப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. போரின் விளைவுகளுக்கு சரத்தும் காரணம் என்பதை தமிழர்கள் உணராதவர்கள் அல்ல.
அதனால், இருவருக்கும் இல்லாமல் தேர்தலை பெரும்பான்மை தமிழர்கள் புறக்கணித்தாலும் அது எங்களுக்கு பலம்தான். ஆக, ராஜபக்சேதான் மீண்டும் ஜனாதிபதி. இது உறுதி செய்யப்பட்ட விஷயம்!'' என்று விவரிக்கின்றனர்.இரு தரப்பும் இப்படி தங்களின் வெற்றி குறித்து விவரித்தாலும், தமிழர்களின் 15 சதவீத வாக்குகள் எந்த பக்கம் சிதறும் என்றே அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.
அவர்களிடம் நாம் பேசியபோது, ""போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் "எந்த ஒரு சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் கிடைத்துவிடப் போவதில்லை. தமிழின விரோத நடவடிக்கைகளையே கடைபிடிக்கப் போகிறார்கள். அப்படியான நிலையில் இவர்களுக்கேன் ஓட்டுப்போட வேண்டும்? இரண்டு சிங்களவனும் அடித்துக்கொள் ளட்டும், தேர்தலை புறக்கணிப்போம். அதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதிலடி' என்று நினைக்கின்றனர். மற்ற பகுதிகளில் உள்ள தமிழர்களோ, "ராஜபக்சே மீண்டும் ஜனாதிபதியானால் ஒட்டுமொத்த இலங்கையும் சிங்கள ராணுவமயமாக்கிவிடுவார்.
சரத்தை ஆதரித்தால், அட்லீஸ்ட் ராணுவமயமாக்கலாவது நிறுத்தப்படும். ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கலாம்' என்றே கருதுகிறார்கள்.
அதனால், தமிழர்களின் வாக்குகள் சிதறுகிற நிலையில், ராஜபக்சேவை விட சரத்திற்கே தமிழர்களின் வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது'' என்கின்றனர்.ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் கொழும்பு தமிழ் எம்.பி.யும் சரத்தை ஆதரிப்பவரு மான மனோகணேசன் ""இந்தத் தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிப்பது என்பதைவிட, யார் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில்தான் தெளிவாக இருக்க வேண்டும். அந்தவகையில், இன்றைய ஆட்சித் தலைமையை (ராஜபக்சே) தூக்கியெறிய வேண்டியதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. தமிழ் மக்களை கொன்றவரும் (சரத்) கொல்ல ஏவியவரும் (ராஜபக்சே) எதிர் எதிராக நிற்கின்றனர். கொன்றவனைவிட ஏவியவன்தான் கொடூரமானவன். அதனால் ஏவியவன் இருக்க அம்பை நோவதால் பயனில்லை. ஏவிய ராஜபக்சேவின் தலையைக் கொய்ய...
இந்தத் தேர்தலை தமிழர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை கள நிலவரப்படி ஒரு தமிழரோ, சிறுபான்மையினரோ ஜனாதிபதியாகும் வாய்ப்பே கிடையாது. ஒரு சிங்களவர்தான் ஆட்சிக்கு வரமுடியும். தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேர்தலைப் புறக்கணித்தாலும் இதுதான் யதார்த்தமான நிலை. அப்படிப்பட்ட சூழலில், தேர்தலைப் புறக்கணித்து ராஜபக்சேவின் வெற்றிக்கு தமிழர்கள் மீண்டும் வித்திட்டுவிடக்கூடாது. தமிழினத்தின் முதல் பொது எதிரி ராஜபக்சே தான்.
அவரை ஆட்சி அதிகாரத்திலிருந்து துரத்துவதுதான் தமிழர்களின் கடமையாக இருக்க வேண்டும். நிச்சயம் தமிழர்கள் அதனை செய்துகாட்டுவார்கள்'' என்கின்றார் மிக உறுதியாக!ஆக, இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் "நண்பர்கள் இருவரும் கடுமையாக சம பலத்துடன் மோதிக்கொள்கிற சூழலே இறுதிக்கட்டம் வரையிலும் எதிரொலித் துக்கொண்டிருக்கிற நிலையில், ஓரிரு சதவீதத்தில் ராஜபக்சேவை விட சரத்பொன்சேகா முன்னணியில் இருப்ப தாகவே இறுதிக் களநிலவரம் கூறுகிறது. இதனைத் தடுக்க, கடைசிகட்ட பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார் ராஜபக்சே.
No comments:
Post a Comment