விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாரகனின் தந்தை வேலுப்பிள்ளையின் உடல் தகனம் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று இலங்கை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறைக்குச் சென்று வேலுப்பிள்ளையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.நேற்று வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் மக்கள் அஞ்சலிக்காக வேலுப்பிள்ளையின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வேலுப்பிள்ளையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து அவரது உடல் வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் நடைபெற்று, உடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக நேற்று சனிக்கிழமை நண்பகல் முதல் தீருவில் உள்ள குமரப்பா உட்பட பன்னிருவர் மயானத்திற்குச் சமீபமாக உள்ள சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் நேரில் வந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பிரபு ஆகியோர் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம், துரைரத்தினசிங்கம், சிவசக்தி ஆனந்தன், அரியநேத்திரன், கஜேந்திரகுமார், தாமஸ் வில்லியம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்ண சார்பில் பிரதிநிதிகளும் வேலுப்பிள்ளை உடலுக்கு இறுதி மயாதையைச் செலுத்தினர். பிரபாகரன் குடும்பத்தினர் வரவில்லை...இதற்கிடையே, தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அவரது பிள்ளைகள் யாரும் பங்கேற்கவில்லை.
பாதுகாப்பான முறையில் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வதாக ராஜபக்சே அரசு அளித்த உறுதிமொழிகளையும் அவர்கள் நிராகரித்து விட்டனர்.பிரபாகரனின் ரத்த உறவுகளான மனோகரன் டென்மார்க்கிலும், ஜெகதீஸ்வரி இந்தியாவிலும், வினோதினி கனடாவிலும் உள்ளனர். மூன்று பேருமே வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இறுதிச் சடங்குக்காக வந்தால், நிச்சயம் ராஜபக்சே அரசு தங்களைக் கைது செய்து அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் என்பதால் அவர்கள் வரவில்லை என்று தெரிகிறது.இதற்கிடையே, இன்னும் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருக்கும் பிரபாகரனின் மாமியார் ஏரம்புவையும் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாம்.
No comments:
Post a Comment