Thursday, June 3, 2010
யுத்தம் 58 -நக்கீரன் கோபால்
shockan.blogspot.com
காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று, வீரப்ப னுடன் நக்கீரனுக்குத் தீவிரவாதத் தொடர்பு என்று பொய்க் குற்றம் சுமத்தி, மேலும் ஒரு பொய் வழக்குப் போடவேண்டும் என்பதுதான் போலீசின் திட்டம். அதற்காகத்தான் போலீசாரை ஃபோட்டோவும் வீடியோவும் எடுத்து வீரப்பனிடம் அடையாளம் காட்டுகிறோம் என்று குற்றம்சாட்டினார் டி.எஸ்.பி.
கோர்ட் உத்தரவில்லாமல் எங்கும் வரமுடியாது என்று டி.எஸ்.பியிடம் சொன்னேன். தங்கள் திட்டப்படி என்னை இயக்க முடியவில்லை என்ற விரக்தியில், சி.பி.சி.ஐ.டியினர் ஆத்திரம், வெளியில் திரண்டிருந்த பத்திரிகை சகோதரர்கள் பக்கம் திரும்பியது. அவர்களை விரட்டிக்கொண்டிருந்தனர் போலீசார்.
எனக்குத் துணையாக வந்த நக்கீரன் நிருபர் தம்பிகளையும், பாதுகாவலர்களையும் நமது வழக்கறிஞர்களையும் போலீஸ் ஃபோட்டோகிராபர் வளைத்து வளைத்து படம் எடுத்துக் கொண்டி ருந்தார்.
""என்னோட வந்தவங்களை எதுக்காக குற்றவாளிகளை படம் பிடிப்பது போல வளைச்சி வளைச்சி படம் எடுக்கு றீங்க?'' என்றேன்.
""நீங்க எங்களை படம் எடுத்து, வீரப்பன்கிட்டே கொடுத்து அடையாளம் காட்டுறீங்கள்ல.. அதுமாதிரிதான். நாங்க இங்க வந்தவங்களை ஃபோட்டோ எடுத்து கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுப் போம்'' என்று பதில் வந்தது.
சிக்க வைக்கும் கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
""பேராசிரியர் கிருஷ்ணசாமியை வீரப்பன் கடத்தினானே, அது பற்றி சொல்லுங்க...'' என சம்பந்தமேயில்லாமல் விசாரிக்க ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம். எங்கே சுற்றி எங்கே வருகிறார்கள் என்பது புரிந்தது.
""சார்... இந்த கடத்தல் வழக்கிலும் எங்களை அபாண்டமா சேர்த்திருக்கீங்க. நாங்க இது சம்பந்தமா ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கியிருக்கோம். இது சம்பந்தமா விசாரிக்கிறதுக்கும் ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்கோம். அதனால நீங்க கேட்கிற கேள்விக்கு எங்ககிட்டே பதிலும் இல்லை.''
டி.எஸ்.பி. நாகராஜன் தன் குரலை உயர்த்தினார். ""கோர்ட் ஸ்டே பற்றியெல்லாம் நீங்க கவலைப்படவேண்டாம் கோபால். கோர்ட் ஆர்டரெல்லாம் எங்களைப் பொறுத்தவரைக்கும் ஒண்ணுமே கிடையாது. இங்கே நாங்க என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கு பதில்சொல்லுங்க'' என சத்தமா அதட்டியபடி, மனரீதியாக டார்ச்சர் தரத் தொடங்கினார்.
""கோபால் உங்க ஷூவை கழட்டுங்க.''
எதற்காக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. செருப்பைக் கழற்றினேன்.
செருப்பினுள்ளும், பேண்ட்டுக்குள்ளும் (உள்ளாடை வரை) ஏதாவது மைக்ரோ டேப்ரிகார்டர் வைத்திருக்கிறேனா என்று போலீசார் சோதித்துப் பார்த்தனர். ""ஒண்ணு மில்லீங்க சார்'' என்று டி.எஸ்.பி.யிடம் தெரிவித்தனர். பொய் வழக்குகளைப் போட்டுவிட்டு, அதை உண்மை என்று நிரூபிப்பதற்காக போலீசார் படுகிறபாட்டைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.
கேள்விகள் மறுபடியும் ராஜ் குமார் கடத்தல் விவகாரத்தை நோக்கித் திரும்பியது.
""ராஜ்குமார் கடத்தப்பட்ட செய்தி உங்களுக்கு எப்ப தெரியும்?''
""நூறு தடவ சொல்லிட்டேன் டி.வி.யில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடும்போதுதான் தெரியும், தெரியும்னு.''
இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமி ரொம்ப வும் ஆவேசமாக, ""காட்டுக்குப்போறது கிரிமினல் குற்றம்'' என்றார்.
""சார்.. என்ன கொடுமைங்க இது, உங்க டி.எஸ்.பி. ஏற்கனவே காட்டுக்குப் போறது குற்றம்னும், பர்மிஷன் வாங்காம போனது தப்புன்னும் சொல்லிட்டாரு. நாங்களா போகலை. இரண்டு மாநில முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் எல்லோரும் முடிவெடுத்து, என்னை வலியுறுத்தி அனுப்பியதாலதான் போனேன். அவங்கதான் காட்டுக்குப் போறதுக்கு உத்தரவாதம் கொடுத்து தூதுவர்னு அரசாணை பிறப்பித்து அனுப்பினாங்க போதுமா?''
""அது ஒண்ணும் அரசாணையல்ல.. வெறும் காகிதம்''- பற்களை நறநறவெனக் கடித்தபடி சொன்னார் டி.எஸ்.பி.
""உங்களுக்கு அது வெறும் காகிதமா தெரியலாம். சட்டத்தை மதிக்கிற எங்களுக்கு அது அரசாணைதான்'' என் றேன் அழுத்தமாக.
""முதலமைச்சர்களும் அதிகாரிகளும் சொன்னாங் கன்னா, நீங்க ஏன் தூதுவரா போனீங்க? உங்களுக்கு வீரப்பன்ங்கிற தீவிரவாதி கிட்டேயிருந்து தேசத்தைக் காப்பாத்துறது முக்கியமா? ராஜ்குமாருங்கிற நடிக ரைக் காப்பாத்துறது முக்கி யமா?''
""தேசம் முக்கியம். அதைக் காப்பாத்துற வேலை யைத்தான் உங்ககிட்டே ஒப்படைச்சிருக்காங்க. அதே நேரத்தில், ஒரு வீரப்பன் கிட்டே சிக்கியிருந்த இந்த தேசத்தின் குடிமகனோட உயிரும் முக்கியம். அதைக் காப்பாத்துற வேலையை எங்ககிட்டே கொடுத்ததால நாங்க போனோம்.''
இன்ஸ்பெக்டர் லட் சுமணசாமி கோபத்தோடு பேச ஆரம்பித்தார். ""வீரப்பனை பெரிய யோக்கியன் மாதிரி பேசுறீங்களே?''
""சார்... நான் வீரப்பனை யோக்கியன்னு எங்கேயும் சொல்லலை. அவன் ஒரு திருந்த நினைத்த கொலைகாரன். நான் ஒரு பத்திரிகைகாரன்னுதான் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கிட்டிருக்கேன். 96-ல் முதன்முறையா அவனைப் பார்க்கும்போது சரண்டர் விஷயமா பேசினான். அப்ப அவன்கிட்டே ஒரு சத்தியம் வாங்கினேன். இனி யாரையும் கொலை செய்யக்கூடாதுங் கிறதுதான் அந்த சத்தியம். அவன் ரொம்ப யோசித்தான். முதலில் முடியாதுன்னுதான் சொன்னான். தான் யாரையும் கொலை பண்ணலைன்னா எல்லோருக்கும் பயம் விட்டுப் போயிடும்னு சொன்னான். நான் விடலை. கொலை செய்ய மாட்டேன்னு உத்தரவாதம் தந்தால்தான் உன்னோட சரண்டர் பற்றி அரசாங்கத்துக்கிட்டே பேச முடியும்னு சொன் னேன். அதற்கப்புறம்தான் வனதேவதை சாட்சியா எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுத் தான். அதாவது, அவங்க எந்த தப்பும் செய்யாத வரைக்கும் நானும் கொலை செய்ய மாட்டேன்னு சத்தியம் செஞ்சான். உங்க போலீஸ் ரெகார்டுபடி, 132 பேரைக் கொலை செய்திருந்த ஒரு கொலைகாரனை, 2 வருசம் எந்தக் கொலையும் செய்யவிடாம, சத்தியத்தின் மூலமா கட்டிப்போட்டு வைத்தது நாங்கதான். இல்லேன்னா, அந்த 2 வருசத்தில், 20, 25 பேரையாவது கொன்னி ருப்பான்.''
""இவ்வளவு தூரம் அவனைப் பற்றி பேசுறீங்களே.. உங்ககிட்டே சத்தியம் செஞ்ச பிறகு, தான் பெத்த குழந்தையையே அவன் கொன்னிருக்கான் தெரியுமா? அதுவும், காட்டுல குழந்தையோட சத்தம் வெளியே கேட்டு, எங்ககிட்டே அவன் மாட்டிக்கக்கூடாதுன்னுதான் அந்தக் குழந்தையைக் கொலை பண்ணியிருக்கான். இதுக்கு என்ன சொல்றீங்க?''
இன்ஸ்பெக்டர் சொன்னதும், இதே தகவலை இதற்கு முன் நண்பர் எல்.ஆர். ஜெகதீசன் என்னிடம் கேட்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அசைடு, இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் பணி யாற்றி தற்போது லண்டன் பி.பி.சி. தமிழோசையின் கரஸ்பான்டண்டாக இருக்கும் பத்திரிகையாளர் எல்.ஆர்.ஜெ, " வீரப்பன் தன்னோட குழந்தையையே கொன்னுட்டதா தகவல் வருதே' என்று ஏற்கனவே கேட்டிருந்தார்.
இப்போது இன்ஸ்பெக்டர் அந்தக் கேள்வியைக் கேட்டதும், ராஜ்குமார் மீட்பு முயற்சியின்போது நான் இதை வீரப்ப னிடமே கேட்டது நினைவுகளில் சுழன்றது.
சட்டச் சிக்கல்கள், நிபந்தனை நெருக்கடிகள் ஆகியவற்றால் ராஜ்குமாரை மீட்கும் முயற்சி நீண்டுகொண்டே போன நேரத்தில், நான்காவது முறையாக மீட்பு பயணத்தை மேற்கொண்டோம். அந்த முயற்சியின் போது ஒரு நாள் இரவில் நான், வீரப்பன், ராஜ்குமார், அவரோட மருமகன், உறவினர் நாகேஷ், உதவியாளர் நாகப்பா எல்லோரும் வரிசையாகப் படுத் திருக்கிறோம். வீரப்பன் என்னிடம் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந் தான்.
நிம்மதி பெருமூச்சுவிட்ட ராஜ் குமார், ""அப்பாடா.. கோபால் வந்துட்டாருன்னா போதும். அப்பதான் இங்கே பேச்சு சத்தமே கேட்குது. நீங்க இரண்டு பேரும் பேசுங்க. நாங்க கேட்கிறோம்'' என்றார்.
வீரப்பன் தன் காட்டு அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். நான் அவனிடம், ""ஏங்க... வனதேவதை சாட்சியா யாரையும் கொல்ல மாட்டேன்னு சொன்னீங்க. நீங்க பெத்த குழந்தை யையே கொன்னுட்டீங்களாமே?'' என்றேன், அவ னிடமிருந்து இல்லை என்ற பதிலை எதிர்பார்த்து.
""ஆமா.. கொன்னேன். அதுக்கு என்ன இப்ப?'' என்றான் அலட்சியமாக. எனக்கு பகீர் என்றது.
""ஆசிரியரே... என் பொண்டாட்டிக்கு மூணாவது பிரசவம். ஏற்கனவே ரெண்டு பொட்ட புள்ளைங்க. மூணாவது பிரசவத்திலும் பொட்ட புள்ளதான் பொறந்திருக்குன்னு பிரசவம் பார்த்த மருத்துவச்சி வந்து சொன்னா. "சரி.. சரி.. முடிச்சிடு'ன்னு சொல்லிட்டேன்''.
""என்னங்க இத்தனை சாதாரணமா சொல்றீங்க. மலைகிராமத்தில் உள்ள பெண்களுக்கெல்லாம் மரியாதை கொடுக்குறீங்க. உங்களுக்குப் பிறந்த பொம்பளை புள்ளையை கொன்னிருக்கீங்களே?''
""மூணாவது புள்ளையையும் பொம்பள புள்ளையா பெத்து பாரு. அப்பதான் உனக்கும் அது தெரியும்'' என்றவன், ராஜ்குமார் பக்கம் திரும்பி, ""என்னங்க நான் சொல்றது சரிதானே?'' என்றான். ராஜ்குமார் சிரிக்கிறார்.
""பெரியவரே சிரிக்கிறாரு பாரு. அப்ப நான் செஞ்சது சரிதான்'' என்றான் வீரப்பன். இந்த சம்பவம்தான் என் நினைவுக்கு வந்தது. மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் வீரப்பன் அதை கொலைசெய்யச் சொல்ல, போலீசோ தங்களுக்குப் பயந்து அவன் கொலை செய்ததாக கதை கட்டியிருந்தது. உண்மை என்ன என்பதை நான் போலீசிடம் சொன்னேன்.
""காட்டிலே உனக்கு வீரப்பன் தண்டனை கொடுத்தானாமே?'' என்றார் இன்ஸ்பெக்டர்.
""என்ன தண்டனை?''
(யுத்தம் தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment