நாமக்கல் மாவட்டத்தில் தகதகவென மின்னும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் அழைக்கின்றன... 'கேரள மணமகள் வேண்டுமா?' திரும்பும் திசை எல்லாம் 'இவ்விட வல்லிய குட்டி உண்டு' என வரவேற் கிறார்கள்.
''இது என்ன பெரிய அதிசயம்? பல வருஷமாவே இது நடக்குதே!'' என்கிறார்கள்.
ஹலோ, கற்பனையை ஓட்ட வேண்டாம். கேரளப் பெண்களை மணம் முடிப்பது இந்தப் பக்கம் ரொம்ப ஈஸி!
லத்துவாடி கிராமத்து விவசாயி நல்லதம்பியைப் பார்த்தோம். ''ஆமாங்க... எனக்கு 48 வயசுங்க. ஊரு ஊராப் பொண்ணு தேடி வயசானதுதான் மிச்சம். அப்புறம்
தான் ஒரு புரோக்கர் மூலமா, கேரளா போனேன். பார்த்தேன்... பிடிச்சுப்போச்சு. டக்குனு கல்யாணம் முடிச்சுக்கிட்டு வந்துட்டேன். இந்தப் பகுதியில நிறைய பேரு இப்படித்தான் கல்யாணம் பண்றாங்க. இப்ப எனக்குக் கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷமாச்சு...'' என்றவர், ''சுனிதா... ஒரு கோஃபி கொண்டு வரூ...'' என்று குரல் கொடுக்க... புரூ காபிக் கோப்பையுடன் தேவதை போல் அழகான ஒரு பெண் நின்றார்... நல்லதம்பியின் மனைவி சுனிதா.
மலையாள வாடை கலந்த தமிழில் பேசினார் சுனிதா. ''ஞான் டென்த் கிளாஸ் வரை படிச்சிருக்கு. எங்க அச்சன் கேரளத்தில் ஒரு 'லோரி டிரைவர்'. எங்கூட பொறந்தது மூன்று பொண் குட்டிங்க. வீட்ல வசதி ரொம்பக் குறைச்சல். கேரளாவில் வரதட்சணை அதிகம். சரியான வரன் அமையலா. அப்புறம்தான் ஒரு புரோக்கர் மூலமா இவரு பெண் பார்க்க வந்தாரு. கல்யாணம் முடிஞ்சு, நல்லாப் பார்த்துக்கிறார். ஓணம், விஷ§ சமயங்களில் எங்ஙள் ஊருக்கு ஜோடியாப் போய் வர்றோம். எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் இங்க வந்து போறாங்க. லத்துவாடி கிராமக் கோயில் திருவிழா இப்ப நடக்கு. எங்க அச்சனும் அம்மாவும் வந்திருக்காங்க. அவங்களுக்கு இந்த ஊர் திருவிழா ரொம்ப பிடிச்சுப்போயி...'' எனத், தன் பெற்றோரையும் அழைத்து அறிமுகப் படுத்தினார்.
சுனிதாவின் அப்பா சுவாரஸ்யமாக நம்மிடம், ''எம் பேரு சுகுமாரன். இது என் மனைவி வல்சா. வந்து நாலுநாளாச்சு. தமிழ் நாட்டுக்கு எம் பொண்ணைக் கொடுத்தது சந்தோஷமா இருக்கு. நான் ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வன். என்னோட மாப் பிள்ளை கவுண்டர் சாதிக்காரர். ஆனாலும் பழக்கத்தில் எங்களுக்குள் இப்போ எந்தப் பாகுபாடும் இல்லை. நல்லமுறையில் எம் பொண்ணு வாழ்க்கை போயிட்டிருக்கு... அதானே முக்கியம். என்னோட சின்னப் பொண்ணுக்கும்கூட இவங்க உறவில்தான் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் முடிச்சிருக்கோம்...'' என்று கவுண்டர் வீட்டு சம்பந்தியாக உருகி உருகிச் சொல்லி முடிக்க... நமக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
அடுத்ததாக, மாணிக்கம்பாளையம் பகுதி விவசாயியான ஆனந்தன், அவரது கேரள மனைவி சுஜா தம்பதியைச் சந்தித்தோம். கன்னமெல்லாம் வெட்கம் பூசி சுஜா நெளிய, ''திருமணம் முடிஞ்சு ஏழு மாசம்தான் ஆச்சு. 35 வயசாகியும் இங்கே பெண் கிடைக்கல. அப்புறம்தான் திருச்சூர் போய், சுஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க பரம்பரையில் இதுதான் முதல் கலப்புத் திருமணம். வாழ்க்கை ரொம்ப ஜாலியா இருக்குங்க'' என்றார் ஆனந்தன். ஓரக் கண்ணில் கணவரைப் பெருமையாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் சுஜா.
அடுத்து, திருமணம் முடிந்து எட்டு வருடங்களான ஒரு முன்னோடித் தம்பதியும் அருகில் இருப்பதைக் கேள்விப் பட்டு, வடகால் புதூர் சென்றோம். கணவர் செங்கோடன், டவுனுக்குப் போயிருக்க... கறவை மாடுகளுக்குத் தீனி போட்டுக்கொண்டு இருந்தார் கீதா. ''என்னோட ஊரு மலப்புரம். இந்த நாமக்கல் பகுதிக்கு மருமகளா வந்த முதல் கேரளப் பெண் நானாத்தான் இருக்கும். இங்க வந்து விவசாய வேலைகள் எல்லாம் நல்லாக் கத்துக்கிட்டேன். அடிக்கடி எங்க நாட்டுக்கும் போயி வர்றேன். எங்க வீட்டுக்காரரு கவுண்டர் சாதி. நான் ஈழவர். அதனால, எல்லாம் ஏதோரு கொழப்பமும் இல்ல...'' என்று ஜம் தமிழில் சிரித்தார் கீதா.
கேரள மணமகள்களை ஏற்பாடு செய்துவரும் கல்யாண புரோக்கர்களில் ஒருவர் முருகரவி. ''இந்தப் பகுதியைச் சேர்ந்த பல ஜோடிகள் கொளுத்தும் நாமக்கல் வெயிலுக்குத் தப்பிக்க குளுகுளு மாமனார் வீடான கேரளாவில் போய் அடைக்கலமாயிட்டாங்க...'' என்ற சம்மர் ஸ்பெஷல் நியூஸ§டன் பேச்சைத் தொடங்கினார். ''நான் 10 வருஷமா கல்யாணத் தரகர் வேலை பண்றேன். முதலில் உள்ளூர் பொண்ணு, மாப்பிள்ளைன்னுதான் எல்லார் மாதிரியும் அலைஞ்சுட்டு இருந்தேன். நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் செய்கிற கவுண்டர் சமூகத்து இளைஞர்களுக்கு இங்கே பெண் பொருத்தமான அந்தஸ்தில் கிடைக்கலைங்க. அதில், பொண்ணு பாத்துப் பாத்தே சலிச்சுப்போய், கல்யாண ஐடியாவைக் கைவிட்டவங்களும் உண்டு.
ஒரு கட்டத்தில், 'எந்த சாதி, மதம் ஊரு, நாடுன்னாலும் பரவாயில்லை. பொண்ணு கிடைச்சாப் போதும்'னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நானும் அந்த சமயத்துல 'கேரளாவில் நிறையப் பெண்கள் வரதட்சணை காரணங்களினால் திருமணம் நடக்காமத் தவிக்கிறாங்க'ன்னு கேள்விப்பட்டேன். அங்கு புரோக்கர் மூலமா, இங்கே உள்ள இளைஞர்களுக்குப் பெண் தேடத் தொடங்கினேன். அது கேரளப் பெண்களுக்கும் உபகாரமா இருந்ததால, மளமளன்னு நிறைய ஜோடி களுக்கு திருமணம் நடக்க ஆரம்பிச்சது.
இதுவரை நான் இப்படி 60 கல்யாணம் செய்து வெச்சிருக்கேன் (அடேங்கப்பா!). எல்லாரும் ஜாம்ஜாம்னு இருக்காங்க. இன்னொரு விஷயம், தமிழ்நாட்டு ஆண் களைக் கல்யாணம் செய்துக்க கேரளப் பெண்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. இப்பக்கூட 40 பெண்கள் ரெடியா இருக்காங்க... சீக்கிரமே ஜோடி சேர்த்துக் கெட்டிமேளம் கொட்டவெச்சிடுவேன், பாருங்க...'' என்று பூரிப்பாகச் சொன்னவரிடம்,
''கேரளா போனா, உடனே கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுமா?'' என்று கேட்டோம்.
''அதான் இல்லை. கேரள மக்கள் ரொம்ப விவரம். மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும் கவலைப்பட மாட்டாங்க. ஆனா, மனை வியை அக்கறையா கவனிச்சுப்பாரா, அசையாச் சொத்து இருக்குதானு பார்க்குறாங்க...'' என்றவர், தொடர்ந்து அந்தத் திருமண நடவடிக் கைகளைப்பற்றி விரிவாகச் சொன்னார் -
''பெண் கேட்டு என்னி டம் வரும் நாமக்கல் மாப் பிள்ளைகளை கேரளா அழைச்சுட்டுப் போய், தகுந்த பெண்களைக் காட்டுவேன். இருவருக்கும் பிடிச்சிருந்தா, தனியா மனம் திறந்து இருவரையும் பேசவெப்போம். ரெண்டு தரப்பும் ஓகே சொன்னாப் போதும்... சாதி, ஜாதகம், படிப்பு, வயசு(?) இப்படி எதுவும் கேரளப் பெண் வீட்டார் கேட்க மாட்டார்கள். ஆனால், நிச்சயத்தாம்பூலம் மாற்றுவதற்குள், மணமகனின் 'மெடிக்கல் சர்டிஃபிகேட்'டை கண்டிப்பாக் கேட்பாங்க. குறிப்பா, ஹெச்.ஐ.வி. நெகட்டிவ் ரிசல்ட் கொடுத்தாகணும். அவங்க கேட்கிற அறிவியல்பூர்வமான ஜாதகம் அது ஒண்ணுதான். அதேபோல் பொருளாதார ஜாதகம் ஸ்ட்ராங்கா இருக்கான்னு சொத்து விவரங்களை உறுதிபடுத்திக்குவாங்க. கல்யாணம் கண்டிப்பா கேரளாவில்தான் நடக்கணும்கிறது அவங்களோட கண்டிஷன். திருமணத்தைப் பதிவு செஞ்சு, திருமணப் பதிவு நகலை காவல் துறை, வருவாய்த் துறை, மகளிர் மேம் பாட்டுத் துறைக்கெல்லாம் பக்காவாக அனுப்பி, பதிவு செஞ்சுட்டுத்தான் புகுந்த வீட்டுக்குப் பெண்ணை அனுப்பிவைப்பாங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையுது. நமக்கு நல்லாப் பொழைப்பு ஓடுது!'' என்று மகிழ்ந்து சிரிக்கிறார் முருகரவி,
''எப்படியோ... சாதி விஷயத்தில் விட்டுத்தராத கவுண்டர் சமூகத்தில் இருந்து, இப்படி பிராக்டிகலாகச் சிந்திக்க ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம். இது காலத்தின் கட்டாயம். வம்சம் விருத்தியடையவும், குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், இதுபோல் சாதி மாறி மட்டுமின்றி, மாநிலம் மாறியும் கல்யாணம் பண்ணிக்கொள்வது ரொம்பவே துணை நிற்கும்!'' என்று அசத்தி முடித்தார்.
இந்தக் கலப்புத் திருமணங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் சமூக சேவகர் கபிலர்மலை சந்திரனைப் பார்த்தோம்.
''வறட்சியான நாமக்கல் மாவட் டத்தில், வரதட்சணை அதிகம் கொடுத்துத்தான் முன்பெல்லாம் பெண் களை திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். ஒரு கட்டத்தில் அதுவே பெண்ணைப் பெற்றவர்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது. அதன் வெளிப்பாடாக, பெண் சிசுக் கொலைகள் இங்கும் அரங்கேறின. அதோடு, வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறியும் ஸ்கேனிங் முறையாலும் 80-களில் பலர் பெண் சிசுக்களைக் கலைத்துவிட்டனர். அதுதான் இப்போது கல்யாண வயதில் இங்கே பெண்கள் இப்போது குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம்.
கவுண்டர் சமுதாயம்தான் என்றில்லை... லாரித் தொழில் அதிகம் உள்ள நாமக்கல்லில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் என்று பரவிவிட்ட தகவலை நம்பி, இங்கு உள்ள பையன்களுக்குப் பெண் கொடுக்கத் தயங்குபவர்களும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளை விரும்பிப் பெற்றுக்கொண்டவர்கள், அவர்களை நன்றாகப் படிக்கவைக்கும் வழக்கம் இங்கு உண்டு. இதனால் நாமக்கல் பெண்கள் பலரும் உயர் கல்வி முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறார்கள். லாரி, விவசாயம் என்று தொழில் செய்துவரும் பல நடுத்தர வாலிபர்களின் அந்தஸ்து இவர்களோடு சரிப்படுவதில்லை. அதுதான், சொத்துப் பத்திரமும் மெடிக்கல் சர்டிபிகேட்டுமாக இளைஞர்கள் கேரளா பக்கம் படையெடுத்துச் செல்கின்றனர்'' சொல்லி முடித்தார் சந்திரன்! எல்லாம் பாரதியார் ஏற்கெனவே கண்ட கனவுதானே... சேர நன்னாட்டிளம் பெண்களுடனே' மாநில பேதம் கடந்து இன்னும் பலர் மணமுடித்து சந்தோஷ வாழ்க்கை வாழக்கடவது!
No comments:
Post a Comment