Sunday, June 6, 2010
யுத்தம் 59 -நக்கீரன் கோபால்
shockan.blogspot.com
வீரப்பன் எனக்குத் தண்டனை கொடுத்தானா?''
""ஆமாம்.. ராஜ்குமார் கடத்தப்பட்ட சமயத்தில் நீங்க காட்டுக்குப் போனப்ப, உங்களோட செயல்பாடுகள் பிடிக்காம அவன் தண் டிச்சதா எங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்தது.''
""ராஜ்குமார் கடத்தப்பட்டப்ப என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.''
""முதன் முதலா காட்டுக்குள்ளே ராஜ்குமாரை எப்ப சந்தித்தீங்க?''
அடுக்கடுக்கான கேள்வி வந்து விழுந்திச்சி.
""அந்தப் பயணத்தை நான் எப்படி மறக்க முடியும்?''
வீரப்பன், பழைய வீரப்பனாக இல்லை. அவ னுடன் தமிழ் விடுதலை அமைப்பினர் இருந்தார்கள். அதனால்தான், வழக்கமாக போலீசாரையும் வனத்துறையினரையும் கடத்தும் வீரப்பன் இந்த முறை ஒட்டுமொத்த கர்நாடகாவுக்கே சவால் விடும்வகையில், கர்நாடகாவில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அத்தனை பேராலும் மதிக்கப்படும் நடிகர் ராஜ்குமாரையும் அவருடன் இருந்தவர்களையும் திட்டமிட்டுக் கடத்தி யிருக்கிறான். பழைய வீரப்பனாக அவன் கடத்தியிருந்தால், கொஞ்சம் முயற்சியெடுத்து மீட்டுவிடலாம். இப்போது நிலைமையே வேறு. அதனால் இந்த மீட்பு முயற்சி எப்படி இருக்கும் என்று மனசே இல்லாமல் தயக்கத்துடன்தான் காட்டுக்குப் பயணத்தைத் தொடங்கினோம்.
ஈரோடு பகுதியில் தங்கியிருந்தபோது, வீரப்பன் தரப்பிடமிருந்து சிக்னல் கிடைப்பதற்கே காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு, ரொம்பவும் முயற்சிகள் எடுத்து காட்டுக்குள் செல்கிறோம். எங்களை அழைத்துச் செல்லும் வீரப்பன் ஆட்களிடம் நிறைய மாற்றங்கள். முழுவதுமாக பரிசோதனை, வீடியோ, ஃபோட்டோவுக்கு தடை என ராணுவக் கெடுபிடிகளுக்கு இணையாக அவர்களின் நட வடிக்கைகள் இருக்கின்றன. முந்தைய மீட்பு முயற்சியில் இப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. காட்டுக்குள் 10 நாட்கள் இருந்து, வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். ""தோழர் மாறனைக் கேட்டுக்குங்க ஆசிரியரே'' என்கிறான் வீரப்பன். மாறனோ, ""தோழர் வீரப்பனைக் கேட்டுக்குங்க'' என்கிறார். அப்போதே அங்கே என்ன நிலைமை என்பது புரிந்துவிட்டது. ராஜ்குமாரைப் பார்த்து, ""அவர் நலமாக இருக்கிறார்'' என்பதை கர்நாடக மக்களுக்குத் தெரிவித்துவிட்டால் அந்த மாநிலத்தில் வாழ்கின்ற தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும். அதில் மட்டும்தான் என்னுடைய கவனம் இருந்தது.
"ராஜ்குமாரைப் பார்க்க வேண்டும்' என்று நான் சொன்னதும், வீரப்பனும் அவனுடன் இருந்த இயக்கத் தினரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்கள். "என்ன ஆனாலும் எத்தனை நாளானாலும் ராஜ் குமாரைப் பார்த்துவிட்டுத்தான் செல்வது' என்பதில் நானும் தம்பிகளும் உறுதியாக இருந்தோம். வீரப்பன் டீம் எங்கள் உறுதிக்குப் பணிந்தது. ராஜ்குமாரும் அவருடன் கடத்தப்பட்டவர்களும் இருந்த இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். "எங்களைப் பார்த்ததும் ராஜ்குமாருக்கு ரொம்ப நிம்மதி. காட்டி லிருந்து மீட்டுச் செல்லப்படுவோம்' என்ற நம்பிக்கை அப்போதுதான் அவர்களுக்கு வந்தது. பெருமுயற்சி எடுத்து வீரப்பனையும், அவனது தோழர்களையும் கன்வின்ஸ் செய்து ராஜ்குமாரையும் உடனிருந்தவர் களையும் படம் எடுத்துக்கொண்டு, வீரப்பன் தரப்பின் கோரிக்கைகளையும் பெற்றுக்கொண்டு முதல் பயணத்திலிருந்து திரும்பினோம்.
"நாங்கள் கொண்டு வந்த படங்கள் டி.வி. செய்திகளில் ஒளிபரப்பானது. அப்போதுதான், ராஜ்குமார் பத்திரமாக இருக்கிறார்' என்ற நம்பிக்கை கர்நாடக மக்களுக்கு வந்தது. அத்தனை நாட்களாக கடைகள், அரசு அலுவலகங்கள் உள்பட எதுவும் இயங்காமல் இருந்தன. நக்கீரன் கொண்டுவந்து காட்டிய படங்களுக்குப் பிறகுதான், எந்த நேரமும் நம் தமிழர்களுக்கும், கன்னடர்களுக்கும் சண்டை மூட்டி பல உயிர்களை பலி கொண்டு அதன் மூலமாக ரத்தம் குடிக்கக் காத்திருந்த கழுகுகளுக்கும் அரசியல் காட்டேரிகளுக்கும் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்ட தருணம் அது.
அன்று இரவு 11 மணி. ரஜினி என் லைனில் வந்தார்.
""வெல்டன் கோபால்... வெல்டன்... ராஜ்குமார் சார் ஃபோட்டோவைப் பார்த்து கர்நாடக பீப்பிள்ஸ் எல்லோரும் சந்தோஷப்படுறாங்க. அவர் உயிரோடு இருக்காருங்கிற நம்பிக்கை வந்திடிச்சி. ஆனா, ஒரு விஷயம் சீரியஸா இருக்குது. ஒரு நண்பனா அங்கே என்ன ஃபீலிங் இருக்குங்கிறதை நான் உங்ககிட்டே சொல்லியாகணும் கோபால். என் ஃப்ரெண்ட்ஸ், கர்நாடகாவில் இருக்கிற வி.ஐ.பி.க்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை ஃபீல் பண்ணுறாங்க. அதை உங்ககிட்டே சொல்லாம இருக்க முடியாது.''
ரஜினி பீடிகை போடுவதை உணர முடிந்தது.
அவரே தொடர்ந்தார். ""ராஜ்குமாரை வீரப்பன்தான் கடத்தினான்ங்கிறது நீங்க சந்திச்சது மூலம் உறுதி யாயிடிச்சி. அவர் நல்லபடியா இருக்காருங்கிறதும் தெரிஞ்சிடிச்சி. ஆனா, ஒரேயொரு விஷயம் மட்டும் அவங்களுக்கு குழப்பமா இருக்குது.''
""என்னண்ணே குழப்பம்?'' என்று ரஜினியிடம் கேட்டேன்.
""நீங்களும் தமிழர். வீரப்பனும் தமிழர். ராஜ்குமார் கன்னடத்துக்காரர். அதனால, வீரப்பன்கிட்டேயிருந்து நீங்க ராஜ்குமார்சாரை உயிரோட காப்பாத்துவீங்க ளான்னு அவங்க யோசிக்கிறாங்க. இதை உங்க மனசோட வச்சுக்குங்க. உங்க மேலே எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதனாலதான் இந்த நேரத்தில் உங்களைக் கூப்பிட்டு இந்த விஷயத்தை சொன்னேன்.''
""அண்ணே... தமிழனா நான் பிறந்ததை பெருமையா நினைக்கிறேன். வீரப்பனும் தமிழனா பிறந்ததற்கு நான் என்ன பண்ணமுடியும்? நிச்சயமா தமிழர்கள், நம்ம கலைஞர் உள்பட சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவாங்க. உங்க பெங்களூரு ஃப்ரெண்ட்ஸ்கிட்டே நம்பிக்கையா இருக்க சொல்லுங்க'' என்றேன்.
இரண்டாவது முறையாக வீரப்ப னுடன் பேச்சுவார்த்தைக்குப் போன போதும், ராஜ்குமாரை பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.
""இப்ப வேண்டாம். முதலில் எல்லாத் தையும் பேசிடுவோம்'' என்றது வீரப்பன் டீம். அவர்கள் பெரிய கோரிக்கை பட்டியலே வைத்திருந்தார்கள். காவிரி பிரச்சினையி லிருந்து தமிழ்வழிக்கல்வி வரை ஏராளமான அம் சங்கள் இருந்தன. அவை எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே ராஜ் குமாரை நான் சந்திக்க வேண்டியதும் முக்கியமாக இருந்தது. அவருக்கு அவருடைய குடும்பத்தினர் மருந்து, மாத்திரைகளைக் கொடுத் தனுப்பியிருந்தனர். ரஜினியையும் ராஜ்குமாருக்கும், வீரப்பனுக்கும் சில வார்த்தைகள் ஆடியோவில் தனித்தனியாக பேசச் சொல்லி அதையும் கையோடு எடுத்துச் சென்று இருந்தேன். அவைகளை அவரிடம் கொடுத்து, அவர் நலமுடன் இருப்பது கர்நாடக மக்களுக்குத் தெரியவந்தால், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும். அதனால், ராஜ்குமாரை சந்திப்பதில் உறுதியாக இருந்ததால் முதலில் ராஜ்குமாரை பார்க்க அனுமதிக்காத வீரப்பன் குழுவினர் வேறு வழியில்லாமல் எங்களை அங்கே அழைத்துச் சென்றார்கள்.
நான், தம்பிகள் சிவசுப்ரமணியன், சுப்பு மூவரும் செல்கிறோம். ரஜினி சொன்னது என் மனதிலேயே இருந்தது. சிவாவிடம், ""தம்பி... வீடியோவை ஆன் பண்ணியே வச்சுக்குங்க'' என்றேன். அவரும் தயாராக வைத்திருந்தார்.
காட்டில் ராஜ்குமார் இருந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அவரைப் பார்த்ததும் ஒரு நிம்மதி. அவரும் எங்களைப் பார்க்கிறார். இருவருக்கும் 100 அடி இடைவெளி இருக்கும்போது, அவர் எழுந்து எங்களை நோக்கி வருகிறார். நாங்கள் அவரை நெருங்குகிறோம். நான் சட்டென அவர் காலில் விழுந்து தொட்டுக் கும்பிடுகிறேன். அவர் பதற்றத்துடன், என்னைத் தூக்கி அணைத்துக்கொண்டார். இந்தக் காட்சிகளை சிவா வின் வீடியோவும் ஸ்டில் கேமராவும் பதிவு செய்துகொண்டது. ரஜினி சொன்னதை மனதில் வைத்து, நான் செய்த செயல் இது. வயதில் மூத்தவரான ராஜ்குமாருக்கு நான் காட்டும் மரியாதையாகவும், இதன் மூலம் அவரை நிச்சயமாக நாங்கள் பத்திரமாக மீட்டு வருவோம் என்பதை கர்நாடக மக்களுக்கு உணர்த்தும் விதத்திலும் இதனைச் செய்தோம்.
ராஜ்குமார் என்னை அணைத்துக்கொண்டு கண்க ளால் நன்றி சொன்ன நேரத்தில், ""வீடியோவை ஆப் பண்ணு'' என ஒரு குரல் அதட்டலாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் வீரப்பன். அவன் பக்கத்தில் சேத்துக்குளி கோவிந்தன் நின்று கொண்டிருந்தான். என்னைப் பக்கத்தில் அழைத்தான் வீரப்பன்.
""ஆசிரியரே... என்ன வேலை செய்திருக்கே? நீ 2 மாநிலத்து தூதுவர். நீ நடுநிலைமையா இருக்கணும். நாங்க கடத்தி வச்சிருக்கிற ஆள் காலிலே விழுந்தீன்னா, எங்களுக்கு எப்படி நீ நியாயமா நடந்துக்குவே?'' எனக் கோபமாக கத்தினான். கன்னடர் காலில் தமிழர் விழுவதா என்ற கோணத்தில் வீரப்பனுடன் இருந்த இயக்கத்தினர் இதைப் பெரும் விவாதமாக்கி விட்டனர். நான் செய்த செயலால் பேச்சு வார்த்தையே முறிந்துவிட்டதுபோல ஒரே பரபரப்பு. காட்டுக்குள் பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
""கர்நாடக மக்களுக்கு நம்பிக்கை வரணும்ங் கிறதுக்காகத்தான் பெரியவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். இது ஒரு மரியாதை. அவ்வளவு தான்'' -நான் சொன்னதை அவர்கள் ஏற்பதாக இல்லை.
அந்த மரியாதையை கன்னடர்களும் கொடுக்கணும். ""நமக்கு காவிரியிலே தண்ணி கொடுக்குறாங்களா? இத்தனை வருஷமாகியும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியல. அவங்க காலிலே நாம ஏன் விழணும். அதுவும், ஒரு தூதுவனா வந்துட்டு, நீ விழுந்தீன்னா, உன்கிட்டே என்ன பேசமுடியும்? உனக்கு இனி இங்கே வேலை இல்லை. உடனே கிளம்பு'' என்று கத்தினான் வீரப்பன்.
மீட்பு முயற்சி முறிவடைந்தால், கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் கதி...?
தகர்ந்தது ஜெ. போட்ட பொய் வழக்கு!
நக்கீரனைப் பழிவாங்கும் நோக்குடன் அன்றைய ஜெ. அரசின் போலீசாருடன் இணைந்து கர்நாடக போலீசார் நமது நிருபர் சிவசுப்ர மணியத்தை ஆத்தூரில் உள்ள அவ ரது வீட்டின் அருகிலிருந்து கடத்தி கைது செய்து, வீரப்பனைப் பார்க்கச் சென்றபோது காட்டில் பிடித்ததாக முதல் வழக்குப் போட்டதுடன், ஆயுத வழக்கையும் தனியாகப் போட்டனர். முதல் வழக்கிலிருந்து சிவா விடுதலையாகியிருந்த நிலையில், இரண்டாவது வழக்கில் கடந்த 9 ஆண்டுகளாக நிபந்தனை ஜாமீனில் மைசூர் கமிஷனர் அலுவலகத்திலும், ஆத்தூர் காவல்நிலையத்திலும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்த ஆயுத வழக்கு கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நீதிமன்றத்தில் நீதிபதி மல்லப்பாவால் விசாரிக்கப்பட்டு வந்தது. நமது சார்பில் வழக்கறிஞர் மல்லிகார் ஜுனய்யா வாதாடினார். வழக்கறிஞர் பிரகாஷ் மற்றும் சிவகுமார் உடன் இருந்தனர். "சிவா மீது போலீஸ் போட்ட பொய்யான ஆயுத வழக்கு நிரூபிக்கப்படவில்லை' எனக் கூறி கடந்த மே-27 அன்று சிவாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி. உங்கள் நக்கீரனின் சட்டப் போராட்டம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment