ஈழ அகதிகள் 75 பேர் மலேசிய கடற்பகுதியில் கப்பலில் தத்தளித்ததையும்... அந்நாட்டு ராணுவத்துக்கு பயந்து அவர்கள் கடலில் குதித்து தற்கொலை முயற்சியில் இறங்கியபோது... அவர்களை நமது நக்கீரன், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி மூலம் சமாதானப்படுத்தியதையும்... ’ஈழ அகதிகளின் தற்கொலையைத் தடுத்த நக்கீரன்’ என்ற தலைப்பில் ஆக்ஷன் ரிப்போர்ட்டாகத் தந்திருந்தோம்.
தீவிரவாதிகளைப் போல் அவர்களை விலங்குபோட்டுக் கைதுசெய்த மலேசிய போலீஸ்.... மனிதாபிமானமே இல்லாமல்... குழந்தைகளைத் தனியாகவும் ஆண்களைத் தனியாகவும், பெண்களைத் தனியாகவும் அடைத்து வைத்து வதைத்து வருவதையும்... அவர்கள் அடைக்கலம் கேட்டு தமிழக முதல்வரின் கருணையை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் கூட அதே கட்டுரையில் நாம் விவரித்திருந்தோம்.
நமது செய்திக் கட்டுரைக்குப் பின் உலகத் தமிழ் அமைப்புகள் பலவும் கொதித்தெழுந்து... "அந்த அப்பாவி ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது.... அவர்களை ஏற்றுக் கொள்ளும் நாட்டிற்கு அவர்களை பத்திரமாக அனுப்பிவைக்கவேண்டும்' எனத் தொடர்ந்து வலியுறுத்தத் தொடங்கின. ஆனால்... மலேசிய அரசோ இந்த விசயத்தில் இறுக்கத்தையே காட்டியது.
கோலாலம்பூர் சிறையிலிருக்கும் அகதிகளின் சார்பாக நம்மிடம் பேசிய கண்ணனும் ராஜா வும் ""சொந்த பூமியில் வதைமுகாமில் அடை பட்டிருந்த நாங்க.. சிங்கள அரசின் கொடுமை களைத் தாங்க முடியாம... எங்க குழந்தை களையாவது ஏதாவது ஒரு நாட்டில் வச்சி காப்பாத்தலாம்ங்கிற எண்ணத்தோட... அங்கிருந்து தப்பிவந்தோம். எங்க போதாத நேரம் மலேசிய அரசாங்கத்திடம் கைதிகளா மாட்டிக்கிட்டு அல்லல் படறோம். எங்க குழந்தை குட்டிகளைப் பிரிச்சி அடைச்சிவச்சதால்.. அதுங்க என்ன நிலையில் இருக்குன்னு தெரியாம தவிச்சிப்போய் இருக் கோம். மனவேதனை தாங்காத நிலையில் எங்கக்கூட இருக்கும் அமலதீபன், ராஜேஷ், சுரேஷ் ஆகியோர் நெஞ்சுவலியால் துடிச்சிக்கிட்டு இருக்காங்க. யாருக்கும் எந்தவித சிகிச்சையும் தரலை.மரணத்தின் நுனியில் நாங்க அல்லாடிக்கிட்டு இருக்கோம்''’என்றபடி தேம்பினார்கள்.
இந்த நிலையில் "எங்கள் மனைவி, குழந்தைகளை எங்களுடன் தங்க அனுமதியுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அறியும்வரை நாங்கள் உணவு உண்ணமாட்டோம்'’’ என அவர்களில் 61 ஆண்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் 7 நாள்வரை நீண்டது. மயங்கி விழுந்தவர்களை மட்டும் தூக்கிச்சென்று சிகிச்சை கொடுத்தது போலீஸ். இதை யறிந்த நாம் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி உட்பட பலரிடமும் பேசி னோம். ராமசாமி ஐ.நா.அதிகாரி களிடம் பேசினார். இருந்தும் முன் னேற்றத் தகவல்கள் இல்லை.
இந்த நிலையில் நமது வேண்டுகோளை ஏற்று மலேசிய மாற்று செயலணித் தலைவர் கலைவாணர்... மலேசிய பிரதமரின் அந்தரங்க காரியதரிசியையும் மலேசிய ஆணையர் அப்துல் ரகுமானையும் சந்தித்து ஈழ அகதிகளின் பரிதாப நிலை குறித்து விளக்கினார்.
இந்த நிலையில் 4-ந் தேதி நம்மைத் தொடர்புகொண்ட ஈழ அகதி கண்ணன் ""பிரதமரின் காரியதரிசியை சந்தித்த பிறகு நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது. எங்கள் குழந்தை குட்டிகளுடன் எங்களை செல்லில் பேச அனுமதித்தார்கள். இதைத் தொடர்ந்து எங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டிருக் கிறோம். எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் படியும்... இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்றும் கலைவாணர் கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு லட்சம் கையெழுத்தோடு பிரதமரை சந்திக்க இருக்கிறார். நக்கீரன் எடுத்த முயற்சியால்தான் இவ்வளவும். நக்கீரனுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்''’என்றார் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்.
மலேசியாவில் தவித்துவரும் ஈழ அகதிகளை தாயுள்ளத்தோடு காப்பாற்றிடவேண்டும் என தி.மு.க. தனது உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறது.
எனவே... மலேசிய சிறையில் அடைபட்டிருக்கும் ஈழ அகதி களுக்கு விரைவில் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை உலகத் தமிழர்கள் மத்தியில் மலர்ந்திருக்கிறது..
No comments:
Post a Comment