Friday, June 4, 2010

''ஆசிரமம் என்றாலே 'ஆ... சிரமம்'தானா'' என அலறவைக்கும் நிகழ்வுகள்....

''நான் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது என்றால், எனக்கு மகிழ்ச்சியைத் தராதே!'' - ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகளின் பிரசித்தியான வாசகம் இது. ஆனால், இப்போது தனக்கு வந்திருக்கும் துன்பத்தை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டிய சோகம் அவருக்கு!



பெங்களூருவில் இருந்து கனகபுரா செல்லும் சாலையில் தலக்கட்டாபுரா என்ற இடத்தில் இருக்கிறது 'வாழும் கலை' போதிக்கும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகளின் ஆசிரமம். கடந்த 30-ம் தேதி இரவு ரவிசங்கர் சுவாமிகளின் ஆசிரமத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடக்க... ஆசிரம வட்டாரம் அதிர்ந்துகிடக்கிறது!

''கடந்த மே 22-ம் தேதியில் இருந்து வாழும் கலை தொடர்பாக ஓர் ஆன்மிகப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிக்கு கடந்த 30-ம் தேதிதான் நிறைவு விழா. அன்றைக்கும் சுவாமிகளின் சொற்பொழிவு நடந்தது. மாலை ஆறரை மணிவாக்கில் சொற்பொழிவை முடித்து அவர் காரில் ஏறுவதற்காகப் போயிட்டு இருந்தார். அந்த நேரத்தில்தான் 'டுமீல்'னு ஒரு சத்தம்... சுவாமியோட போய்ட்டு இருந்த ஒரு பக்தர் தொடையில் குண்டு பாய்ஞ்சு ரத்தம் சொட்டச் சொட்டக் கீழேகிடந்தார். சுவாமியைப் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக் கொண்டுபோய் காரில் உட்காரவெச்சுட்டாங்க. யாரு சுட்டாங்க... எதுக்காகச் சுட்டாங்கன்னு எந்த விவரமும் தெரியலை. உடனடியா ஆசிரமத்தில் இருந்தவங்களை வெளியேற்றி ஆசிரமத்தை மூடிட்டாங்க!'' என்று பதற்றத்தோடு முடித்தார் அங்கே இருந்த பக்தர் ஒருவர்.

கர்நாடக மாநிலக் காவல் துறை இயக்குநர் அஜய்குமார் சிங், ''ஆசிரமத்தில் இருக்கும் இரண்டு சீடர்களுக்கு இடையில் நீண்ட நாட்களாகப் பிரச்னை இருந்திருக்கு. அதில் ஒரு சீடரைக் கொல்ல நடந்த சதித் திட்டத்தில்தான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கு. சுட்டவன் 600 அடி தூரத்தில் இருந்து சுட்டிருக்கான். மத்தபடி இது ரவிசங்கர் சுவாமிக்கு வைக்கப்பட்ட குறி கிடையாது. புதுசா வெளியில் இருந்து ஒருத்தன் ஆசிரமத்துக்குள் வந்து துப்பாக்கிச் சூடு நடத்த வாய்ப்பே கிடையாது..!'' என்றார் உறுதியாக.

ஸ்ரீஸ்ரீரவிசங்கரோ, ''எங்க ஆசிரமத்தில் உள்ள யாருக்கும் கருத்து வேறுபாடுகளே கிடையாது. கண்டிப்பாக, இது எனக்கு வைக்கப்பட்ட குறிதான். போலீஸார் வழக்கைத் திசை திருப்புவதற்காக ஏதேதோ கதை சொல்கிறார்கள். இதன் பின்னணியை போலீஸ் முழு அக்கறையோடு விசாரிக்க வேண்டும். இதற்காக, முதலமைச்சர் எடியூரப்பாவையும் நான் சந்தித்துப் பேசுவேன்!'' என்கிறார்.

பெங்களூருவில் உள்ள தமிழ் ஆர்வலர்களோ, ''ரவிசங்கர், ஈழத்துக்குச் சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னவர். 'இலங்கைத் தமிழர் விஷயத்தில் இந்திய அரசு தவறு செய்கிறது' என பகிரங்கமாகக் குரல் கொடுத்தவர். இதனால் சிலருடைய கோபத்துக்கு ரவிசங்கர் ஆளானார். இதன் பின்னணியில்கூட துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம்!'' என்கிறார்கள்.

இன்னும் சிலரோ, ''ரவிசங்கருக்கு இப்போது 'ஒய்' பிரிவு பாதுகாப்புதான் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு 'இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, ஆர்வக் கோளாறில் அவருடைய பக்தர்கள் துப்பாக்கிச் சூடு மாதிரியான நாடகத்தை நடத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது. குண்டு பாய்ந்த பக்தர் தற்போது பூரண நலமாக இருப்பது எங்களின் சந்தேகத்தை வலுக்கவைக்கிறது!'' என்கிறார்கள். கர்நாடக மாநில உயர் போலீஸ் வட்டாரத்தில், நிலம் தொடர்பான பிரச்னை ஏதாவது ஆசிரமத்துக்கு உண்டா என்று விசாரிக்கும் வேலையும் நடந்து வருகிறது!

எப்படியோ... ''ஆசிரமம் என்றாலே 'ஆ... சிரமம்'தானா'' என அலறவைக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறதே - அதுவும் திரும்பத் திரும்ப கர்நாடகாவிலேயே?!

No comments:

Post a Comment