Saturday, June 5, 2010

ஐஃபாவில் ஹிறித்திக்ரோஷன் கலந்து கொள்ளச் சென்றதனால் சென்னையில் அவரது கைற்ஸ் திரைப்படம் இடை நிறுத்தம் ‐ என். டி. ரி.வி.


ஹிந்தி நடிகர் ஹிறித்திக்ரோஷன் கொழும்பில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளச் சென்றதனால், அதனைக் கண்டிக்கும் முகமாக தமிழ் அமைப்பு ஒன்று மேற்கொண்ட அழுத்தங்கள் காரணமாக சென்னை திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த அவரது கைற்ஸ் என்ற திரைப்படம் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்று என். டி. ரி.வி. தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஹிறித்திக் றொஷனும் அவரது இயக்குநரும் தயாரிப்பாளருமான அவரது தந்தை ராகேஷ் றொஷானும்; சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்று கொழும்பு சென்று சேர்ந்ததை இலங்கை சுற்றுலா சபையின் பணிப்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று குற்றம்சாட்டும் இந்தியாவிலுள்ள பல தமிழ் ஆதரவாளர்கள் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கான இடமாக கொழும்பை தெரிவு செய்தமை குறித்து அதிருப்தியடைந்துள்ளார்கள்.

சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பொலிவுட் நடிகர்களின் படங்களை தடை செய்வது குறித்து தென்னிந்திய வர்த்தக திரைப் பட சம்மேளனம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடி இறுதி முடிவு எடுக்க இருக்கிறது.

இந்த வருட விழாவை கொழும்பில் நடத்துவது என்று தெரிவை ஆட்சேபித்து எழுந்த எதிர்ப்பு அலை காரணமாக பெரும் தொகையான நட்சத்திரங்கள் விழாவுக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment