Friday, June 4, 2010
முதல்வருக்கு 'அ' எழுதக் கற்றுக் கொடுத்தவரின் ஆசை
முதல்வர் கருணாநிதிக்கு 87-வது பிறந்த நாள். போதும் போதும் என்கிற அளவுக்கு வாழ்த்துகளாலும் பரிசுகளாலும் உடன்பிறப்புகள் அவரைக் கொண்டாடும் வேளை யில், ''முதல்வரய்யாவை என் தோளில் தூக்கி வெச்சுக்கிட்டு ஓடணும்!'' என ஆசைப்படுகிறார் பட்டு வண்ணார். கவனிக்க... இவருக்கு 97 வயது!
கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக் காரர் இவர். கருணாநிதியின் வீட்டில் இருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது இவரது வீடு. கருணாநிதியின் தந்தை முத்துவேலரிடம் வேலை பார்த்தவர். கருணாநிதியை பள்ளிக்குக் கொண்டுபோய்விடுவது தொடங்கி, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தவர் பட்டு வண்ணார்.
எழுந்து அமரக்கூட ரொம்பச் சிரமப்படும் பட்டு வண்ணார், ''நான் அய்யாவைப் பார்க்கணும்... அவர்கிட்ட என்னை அழைச்சுட்டுப் போங்க...'' என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
''சின்ன வயசில் இருந்தே அய்யா வீட்டில்தான் கெடய்யா கெடப்பேன். வயலுக்குத் தண்ணி இறைக்க அந்தக் காலத்தில் மோட்டார் எல்லாம் கெடையாது. பொட்டி போட்டுத்தான் இறைக்கணும். கலைஞர் அய்யாவின் அம்மா அஞ்சுகம் ஒருபக்கம் கயித்தப் புடிச்சுக்க... நான் ஒருபக்கம் புடிச்சு தண்ணி இறைப்போம். சின்ன வயசில் தங்கத்தோடு போட்டு, அய்யா ஜம்முன்னு இருப்பார். எங்கே போறதா இருந்தாலும், அவரை என் தோளில் தூக்கிவெச்சுட்டு ஓட்டமும் நடையுமாத்தான் போவேன். அவங்க வீட்டுக்குப் பக்கத்தில் இலந்தை மரத்தில் பழம் பொறுக்கிக் கொடுப்பேன். ரொம்ப விரும்பிச் சாப்பிடுவார். வீட்டு வாசலில் கிடக்கும் மண்ணைக் குவிச்சு, அதில் அவரோட விரலைப் பிடிச்சு அ, ஆ எழுதக் கத்துக்கொடுப்பேன். இன்னிக்கு அவரோட விரல், கடுதாசி, கட்டுரைன்னு என்னென்னமோ எழுதுது. அந்த விரலைப் பழக்கிய பாக்கியமே என்னோட ஜென்மத்துக்குப் போதும்!'' என்றவர் சட்டெனக் கண் கலங்கினார்.
''அவர் எந்தக் காலத்திலும் என்னை மறக்கவே மாட்டார். தேர்தலில் ஜெயிச்சு சொந்த ஊருக்கு வர்றப்ப, 'பட்டு வண்ணார் எப்படி இருக்கார்?'னு மறக்காமக் கேட்பார். ஒரு தடவை அவர் முதலமைச்சராகி திருக்குவளை வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்கிற குளத்தில் நான் துணி துவைச்சுட்டு இருந்தேன். அய்யாவைப் பார்த்து, அரக்கப்பரக்க ஓடினேன். அவ்வளவு கூட்டத்திலேயும் என்னைச் சரியா அடையாளம் கண்டு பக்கத்தில் கூப்பிட்டார். ஒவ்வொரு தடவையும், 'உனக்கு என்னய்யா வேணும்?'னு வாஞ்சையோட கேட்பார். இன்னிக்கு வரைக்கும் அவர்கிட்ட எந்த உதவியும் கேட்டதில்ல... என் ஆசை எல்லாமே அவரைக் கண்ணார ஒரு தடவை பார்க்கணும். அஞ்சு வருஷத்துக்கு முன்னால் கீழே விழுந்து கால் ஒடிஞ்சுபோச்சு. அதனால், அய்யா இங்கே வந்தப்ப, அவரைப் போய்ப் பார்க்க முடியலை. அஞ்சாறு மாசத்துக்கு முன்னால அய்யா இங்கே வந்தப்ப, எம் புள்ளைங்ககிட்டப் போராடி அவர் வீட்டுக்குப் பக்கத்தில் போயிட்டேன். ஆனா, அவர் திருக்குவளைக்குத் வர தாமதமாகிடுச்சு. ரொம்ப நேரம் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாமத் திரும்ப வந்துட்டேன். அப்போ வந்தப்பவும், 'பட்டு வண்ணார் நல்லா இருக்காரா?'ன்னு கேட்டாராம். இப்போ அடிக்கடி மூச்சு திணறுது. நாக்கு வறண்டு சாவு கூப்பிடுற மாதிரி இருக்கு. என் ஆயுசு முடியறதுக்குள்ள அய்யா முகத்தைப் பார்த்திடணும்னு துடியாத் துடிக்கிறேன். அவர்கிட்ட நான் எந்த உதவியும் கேட்கப் போறது இல்லை. நான் வளர்த்த புள்ளையை மறுபடியும் என் தோளில் தூக்கி வெச்சுகிட்டு ஓடணும்னு ஆசையா இருக்கு. அய்யாவோட முகத்தைப் பார்த்து நிம்மதியா ரெண்டு நிமிஷம் அழுதிட்டா, நெறஞ்ச மனசோட கண்ணை மூடுவேன்!'' என நெகிழ்கிறார் இரு கைகளையும் கூப்பியபடி.
பட்டு வண்ணாரின் மனதில் இன்னமும் பட்டுப் போகாமல் இருக்கும் நினைவுகள் முதல்வர் மனதைத் தொட்டுப் பார்க்குமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment