Sunday, April 18, 2010

காக்கிகளின் கண் முன்னே மக்களின்...

shockan.blogspot.com
""ஹலோ... ஏழாயிரம் பண்ணை போலீஸ் ஸ்டேஷனா? நான் கார்த்திக் பேசறேன். இங்க மஞ்சளோடைப்பட்டில ஊரே கம்பு, அரிவாளோட என்னையும், முத்துரவியையும், அன்ன பாக்கியத் தையும் கொல்லத் துடிச்சிக்கிட்டிருக்கு. உசிருக்குப் பயந்து வீட்ட பூட்டிக்கிட்டு நாங்க உள்ள ஒளிஞ்சிட்டிருக்கோம். ஆனா, மக்கள்லாம் வீட்டுக் கதவ உடைச்சுக்கிட்டிருக்காங்க. நீங்க விருட்டுன்னு கிளம்பி வந்தா எங்கள காப்பாத்திடலாம். வாங்க சார்...''

பதற்றத்தோடு கார்த்திக் பேசியதைக் கேட்டு, நான்கு காக்கிகளோடு அரக்கப் பரக்க கிளம்பி, அடுத்த 20 நிமிடங்களில் அந்த இரவு நேரத்திலும் அந்த வீட்டுக்குப் போனார் ஸ்பெஷல் எஸ்.ஐ. வேலாயுதம். அங்கு நின்ற மக்களோ,

""இது ஊரு விவகாரம். மூச்சுக்காட்டாம திரும்பிப் போயிருங்க. அப்புறம் உங்களுக்கும் வெட்டு விழும்'' என்று அரிவாளைத் தூக்கி யிருக்கிறார்கள். இந்தக் களேபரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மூவரையும் இழுத்துப்போட்டு முத்து ரவியையும், கார்த்திக்கையும் வெறிதீரும் அளவுக்கு வெட்டியிருக்கிறார்கள். "வேண் டாண்டா... வெட்டாதீங்கடா...' என்று குரல் கொடுத்த போலீஸ் மீதே கற்களை எறிய "என்னமும் பண்ணிட்டுப் போங்கடா' என்று அங்கிருந்து உயிர் தப்பி ஓடி வந்திருக்கிறார்கள் காக்கிகள்.

பிறகென்ன?

முத்துரவியும், கார்த்திக்கும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடக்க... கிராமத்தினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, கண்ணில் சிக்கிய 6 பேரை கைது செய்து மற்றவர்களைத் தேட ஆரம்பித் திருக்கிறது போலீஸ்.

விருதுநகர் மாவட்டம் மஞ்ச ளோடைப் பட்டியில் மொத்த ஆண் களும் தலைமறைவாகிவிட, ஆங்காங்கே நின்ற பெண்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

""அந்த முத்துரவி ரொம்ப மோசமானவன், பக்கத்து ஊருக்காரன். இது எஸ்.சி. கிராமம்ங்கிறதால சாதித் திமிரோட இங்க வந்து, தொடைக்கு மேல வேட்டியத் தூக்கிக் கட்டிக்கிட்டு "நீ வர்றியா? நீ வர்றியா?'னு பொம்பளைகள வம்புக்கிழுப்பான். முள்ளு வெட்டுற அந்தப் பயகூட கள்ளத் தொடர்புல இருக்குறவ எங்க ஊரு அன்னபாக்கியம். அவ வீட்டுக்கு வந்து போற சாக்குலதான் ஊரயே மிரட்டிக்கிட்டிருந்தான். அவ புருஷனைக்கூட அவன்தான் கொன்னான். அப்புறம் ரெண்டு, மூணு கொலைகள் பண்ணிருக்கான். ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டைன்னு பக்கத் துல உள்ள பெரிய ஊருகளுக்கு நாங்க போக முடியாது. அங்க பார்த்த இடத்துல அடிப்பான், அவனைக் கண்டு ஊரே நடுங்குச்சு. இதெல்லாம் போலீசுக்கும் தெரியும்.

அவன்கிட்டயிருந்து மக்கள காப்பாத்த போலீஸ் முன்வரல. இப்படித்தான் முள்ளு வெட்டுற காண்ட்ராக்ட் எடுக்கிற பிரச்சினைல எங்க ஊருக்காரன் ஒருத்தனை மிரட்டிக்கிட்டிருந்தான் முத்துரவி. இதுக்கெல்லாம் ஒரு முடிவு பண்ணணும்னுதான் ஊரே திரண்டு நின்னு முத்துரவியையும் அவன் கூட்டாளி கார்த்திக்கையும் வெட்டிக் கூறு போட்டுச்சு. போலீஸ் கேசுதான பார்த்துக்குவோம். இப்பதான் நிம்மதி'' என்றார்கள் சாதாரணமாக.

அதே கிராமத்தில் அன்னபாக்கியத் தைச் சந்தித்தோம்...

""ஒண்ணுன்னா ரெண்டுன்னு பேசுற ஊரு இது. என்னையும் தப்பாத்தான் பேசுது. அன்னைக்கு ஒரு வழக்குக்காக இங்க வந்த முத்துரவியும், கார்த்திக்கையும் போலீஸ் கண்ணு முன்னாலயே வெட்டிச் சாச்சிட்டாங்க. எனக்கும் கால்ல வெட்டு விழுந்துருச்சு. தண்ணியடிச்சிட்டு செத்துப் போனான் என் புருஷன். யாரும் கொல்லல. என் நாலு புள்ள மேல சத்தியமா சொல்லுறேன்... நான் நல்லவ'' என்று ஒப்பாரி வைத்தாள் அன்னபாக்கியம்.

"நடந்த கொலையை போலீஸே வேடிக்கை பார்த்ததாமே...?'

ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலாயுதத்திடம் கேட்டோம்.

""அந்த ஊரு மக்கள் அப்ப ரொம்ப ஆவேசமா இருந்தாங்க. உங்க வேலையப் பார்த்துட்டுப் போங்கன்னு எங்களையே விரட்டுனாங்க. எங்க பேச்சுக்கு யாரும் செவி சாய்க்கல. நாங்க எவ்வளவோ தடுத்தும் முடியல'' என்றார் பரிதாபமாக.

போலீஸ் துப்பாக்கிதான் ரவுடிகளை என்கவுண்ட்டரில் சாய்க்கும் அதே காரியத்தை மக்களே செய்திருக்கிறார்கள் மஞ்சளோடைப் பட்டியில்.

No comments:

Post a Comment