Tuesday, April 27, 2010

பிக் அப் ஆக விட்டால்தானே? - சேரனின் ஆதங்கம்


ல்ல படங்கள் ஓடாமல் போவதற்கு காரணம் அந்தப் படம் பிக் அப் ஆவதற்கு முன்பே தியேட்டர்களிலிருந்து தூக்கப்படுவதுதான் என்கிறார் இயக்குநர் சேரன்.

புதுமுகங்கள் ஈஷ்வர்-தியானா நடித்துள்ள விருந்தாளி என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.

விழாவில், இயக்குநர் சேரன் பேசுகையில், "தமிழ் பட உலகில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கூட சிலசமயம் ஓடுவதில்லை. இதற்கு காரணம், நிறைய பேர் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க தயாராக இல்லை. ஒரு படம், நல்ல கதையம்சம் உள்ள படம் என்ற பேச்சு வெளியே பரவுவதற்குள், கூட்டம் இல்லை என்று அந்த படத்தை தியேட்டரில் இருந்து எடுத்து விடுகிறார்கள். பிக் அப் ஆகும்வரை விட்டால்தானே படங்கள் ஓடும்...

பொக்கிஷம் படம் அப்படித்தான் ஓடாமல் போய்விட்டது. அதே படத்தை இப்போது டி.வி.டி.யில் பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள். இந்த நிலைக்கு காரணம், பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களை 20 தியேட்டர் அல்லது 30 தியேட்டர்களில் திரையிட்டு ஒரே வாரத்தில் காசு பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசைதான்.

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படம் திரைக்கு வந்த ஒரு வாரம் வரை கூட்டம் வரவில்லை. அதற்குள் தியேட்டரில் இருந்து எடுத்து விடுவார்களோ என்று டைரக்டர் கவுதம் கவலைப்பட்டார். நல்ல படம் நிச்சயம் ஓடும் என்று நான்தான் அவருக்கு ஆறுதல் கூறினேன். நல்லவேளையாக அந்த படத்தை தியேட்டரில் இருந்து தூக்கவில்லை. அதன்பிறகு நல்ல படம் என்று கேள்விப்பட்டு, மெதுவாக கூட்டம் வர ஆரம்பித்தது. படமும் வெற்றிபெற்றது.

இந்த நிலை மாற, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

பிரச்சினையை ஆராய குழு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பேசும்போது, சேரன் கோரிக்கைக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

"திரையுலக பிரச்சினைகள் பற்றி பேசி, நல்ல தீர்வு காண்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், நடிகர்-நடிகைகள் ஆகிய அனைத்து தரப்பினரும் பங்கு பெறுவார்கள். அதில் சேரனும் ஒரு உறுப்பினராக சேர்க்கப்படுவார்.

அந்த குழு கூடி, பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது, சேரன் அழைக்கப்படுவார். அங்கே வந்து அவர் தனது கருத்துக்களை கூறலாம். நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்," என்றார்.

விழாவில் நடிகர்கள் கரண், பிரசன்னா, நாசர், பாலாசிங், டைரக்டர்கள் சசி, எழில், பவித்ரன், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், பட அதிபர் டி.சிவா, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் ஆகியோரும் பேசினார்கள்.

விழாவுக்கு வந்தவர்களை, பட அதிபர் ராஜேஷ் கோபிநாத் வரவேற்றார். இயக்குநர் வாட்டர்மேன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை, இயக்குநர்-நடிகர் சிங்கம் புலி தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment