Sunday, April 18, 2010

தி.மு.க. மேடையில் சூப்பர் ஸ்டார்!


shockan.blogspot.com
எல்லோரையும் ஆச்சரியப்படவைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி. மதுரையில் மு.க. அழகிரியின் பிறந்தநாள் விழாவும் செம்மொழி கருத்தரங்கமும் சேர்ந்து கொண்டாடப்பட, அதில் தலைமை உரை நிகழ்த்து பவராக பட்டிமன்றப் புகழ் சாலமன் பாப்பையா கலந்துகொண்டதுதான் ஆச்சரியத்திற்கு காரணம். பொங்கல், தீபாவளி, சித்திரைத் திருநாள், சுதந்திர தினம் என எந்த நாளாக இருந்தாலும் டி.வி. சேனல் களில் ஒளிபரப்பாகும் சினிமா நிகழ்ச்சிகளைத் தாண்டி, நடுத்தர வர்க்கத்தால் ரசித்துப் பார்க்கப்படுவது பாப்பை யாவின் பட்டிமன்றம்தான். பட்டிமன்ற சூப்பர் ஸ்டார் என மக்களால் அழைக் கப்படும் சாலமன் பாப்பையா, தி.மு.க மேடை யில் ஏறியிருப்பது பற்றி மதுரை உ.பி.க்களிடம் விசாரித்தோம்.

''தென்மாவட்டங்களில் 40-க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களை நடத்தும்படி எங்க கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆட்சியின் சாதனைகளையும் பட்ஜெட்டையும் விளக்கி கூட்டங்கள் நடத்த முடிவு செய்து, எங்க கட்சியின் ஸ்டார் பேச்சாளர் வெற்றி கொண்டானை தென்மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் புக் செய்திருந்தார்கள். ஆனா, கலைஞருக்குப் பிறகு தலைவர் பதவிக்கான தகுதியும் திறமையும் யாருக்குமில்லைன்னு அழகிரியண்ணன் கொடுத்த பேட்டிக்கு கவுன்ட்டர் பேட்டியா , ஸ்டாலின் தான் தலைவர்னு வெற்றிகொண்டான் பேட்டி கொடுத்ததால், அவர் சம்பந்தப்பட்ட பொதுக்கூட்டங்களையெல்லாம் கேன்சல் செய்யணும்னும், இனி யாரும் அவரைக் கூப்பிடக்கூடாதுன்னும் அழகிரியண்ணன் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.

அதுபோல ஸ்டாலின் தரப்பிலிருந்தும் வெற்றிகொண்டான்கிட்டே, "நீங்க தென் மாவட்டங்களுக்குப் போகவேணாம். உங்க ளைத் தாக்கக்கூடும். வீணா ரிஸ்க் வேணாம்'னு சொல்லிட்டாங்க. வெற்றி கொண்டான் பேசுற கூட்டங்கள் கேன்ச லானதால், அதற்கு சமமா யாரைப் போட் டால் பொதுமக்களையும் தொண்டர்களையும் ஈர்க்கமுடியும்னு அழகிரியண்ணன் யோசிச் சாரு. சாலமன் பாப்பையாவை புடிச்சிட்டாரு. இனி 40 கூட்டங்களிலும் அவர்தான் பேசப்போறாரு'' என்கிறார்கள் உற்சாகமாக.

கலைஞர் டி.வி தொடங்கப்பட்ட போதே பாப்பையாவை அங்கே நிகழ்ச்சி நடத்த அழைத்திருந்தார் அழகிரி. சன் டி.வியுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி வெளியே வரமுடியாது என்ற நிலைமையை விளக்கிய பாப்பையா, உரிய நேரத்தில் நல்ல முடிவைச் சொல்றேன் என்று சொல்லி யிருந்தார். அதை மனதில் வைத்திருந்த அழகிரி, இப்போது வெற்றிகொண்டானுக்குப் பதிலாக சாலமன் பாப்பையாவை பயன்படுத்தலாம் என முடிவு செய்து, முதல் நிகழ்ச்சியை நடத்தி விட்டார்.

கட்சி மேடைகளில் தொடர்ந்து பேசுவதற்கு சாலமன் பாப் பையா எப்படி ஒப்புக்கொண்டார் என மதுரை தி.மு.க.வினரிடம் விசாரித்தோம். ""அந்த அசைன் மென்ட் மதுரை மாநகர் மா.செ. தளபதிகிட்டே ஒப்படைக்கப்பட்டது. அவரோடு புறநகர் மா.செ. மூர்த்தி, மதுரை மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஜெயராம் ஆகியோரும் பாப்பையாவை சந்தித்து, வெற்றிகொண்டான் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதையும், அதற்குப் பதில் நீங்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும் சொல்லி யிருக்காங்க. கட்சிக் கூட்டம்னதும் சாலமன் பாப்பையா கொஞ்சம் தயங்கியிருக்காரு. "அழகிரி பிறந்தநாள் விழா, நலத்திட்டங்கள்னு சொல்றீங்க. அதோடு, செம்மொழி கருத்தரங்கத்தையும் சேர்த்துப் போட்டுக்குங்க. 40 என்ன 400 கூட்டங்களுக்கு வர்றேன்'னு சொன்னதோடு, "செம்மொழி மாநாடு நடத்தும் கலைஞர் அய்யாவோடும் மேடையில் ஏறத் தயாரா இருக்கேன்'னு சொல்லியிருக்கிறார். இதை யடுத்துதான், 15-ந் தேதியன்னைக்கு முதல் கூட்டம் நடத்துவதுன்னு கட்சி நடைமுறைப்படி மா.செ., இளைஞரணி அமைப்பாளர் ஒப்புதலோடு பாப்பையாவின் முதல் கூட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது.

தான் மட்டும் பேசினால் கட்சி சாயம் படிந்துவிடும் என்பதால் பொதுவான பேச்சாளர்களை சேர்த்துப் போடுங்கன்னு சாலமன் பாப்பையா சொல்ல, குன்றக்குடி அடிகளார், சுப.வீ, பா.விஜய் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துக்குற விஷயத்தை மா.செ. சொல்லி யிருக்கிறார். பாப்பையாவுக்கு சந்தோஷம்'' என்றார்கள் மதுரை மாவட்ட தி.மு.கவினர்.

இந்த கூட்டத்தில் சாலமன் பாப்பையா கலந்துகொள்வதற்கான காரணம் பற்றி அவரது தரப்பினர் இன்னொரு தகவலையும் சொன்னார்கள். ""மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில், கடைசிவரை பிஷப்புக்கு அழகிரி ஆதரவுக்கரம் நீட்டவில்லை. தற்போது கல்லூரி நிர்வாகம் பாப்பையா ஆதரவாளர்கள் வசம்தான் வந்திருக்கிறது. இதைத் தக்கவைத்துக்கொள்ள அழகிரியின் ஆதரவு தேவை. கூட்டத்துக்கு ஒப்புக்கொள்ள அதுவும் ஒரு காரணம்'' என்றனர்.

சாலமன் பாப்பையா என்ன சொல்கிறார் என்பதையறிய அவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். ""நான் பேசணும்னு மதுரைக்காரர் விருப்பப் படுறாரு. எனக்கு பட்டிமன்றம் புக்கிங் நிறைய இருக்குது. அதனால், கட்சிக் கூட்டம்னு தொடர்ந்து போக முடியாது. மதுரையிலயும் மதுரையைச் சுற்றி நடக்கிற கூட்டங்களிலும் கலந்துக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன்'' என்றவரிடம், வெற்றிகொண்டானுக்குப் போட்டியாக உங்களை களமிறக்குகிறார்களே என்றதும், ""தி.மு.க பேச்சாளர்கள் யாருக்கும் நான் எதிரான ஆள் இல்லை. அரசியல் ரீதியான ஆதரவு-எதிர்ப்புன்னு எந்த வம்பையும் இழுத்துக்கிறவும் விரும்பலை. நான் கட்சி அரசியலில் ஈடுபடுகிறவனில்லை. தமிழ் வளர்ச்சிக்காகப் பேசுறேன்'' என்றார் தெளிவாக.

அழகிரி ஆதரவாளர்கள் சாலமன் பாப்பையாவை தொடர்ந்து மேடைகளில் ஏற்றாமல் விட்டுவிடவா போகிறார்கள்?

No comments:

Post a Comment