Thursday, April 15, 2010

விடிஞ்சா கல்யாணம்! ஓடும் மணமகள்கள்!


shockan.blogspot.com
விருத்தாசலத்தில் உள்ள அந்தத் திருமண மண்டபம் கோலாகலமாய்க் களைகட்டியிருந்தது. காரணம் கடலூர் மாவட்ட கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணனுக்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமுதாவுக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஒரு பக்கம் திருமண விருந்துத் தயாரிப்பு வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க.. இன்னொருபுறம் நாதஸ்வர தவில் கச்சேரிகளைகட்டியது. உறவினர்கள் வந்தவண்ணம் இருக்க... முகூர்த்த நேரம் நெருங்கும் போது திடீர் பரபரப்பு.

தாலி கட்டவேண்டிய மாப்பிள்ளை திடீர் என காணாமல் போக... விக்கித்துப்போனார் மணக்கோலத்தில் இருந்த அமுதா. மாப்பிள்ளை வீட்டார் கைபிசைய.. பெண்வீட்டார் அதிர்ச்சியில் உறைய... மணவிழா நிறுத்தப்பட்டது. சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்தவர்கள் பாதியில் கைகழுவினர். கூட்டம் சங்கடத்தோடு கலைந்தது. பெண்தரப்பு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு ... சோகத்தில் மூழ்கியது.

விழுப்புரம் வருவாய்த்துறை ஊழியரின் மகன் பிரேம். இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த லதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜாதகப் பொருத்தம் ஓஹோன்னு இருக்கு என ஜோஸியர் சொன்னதை சொல்லிச்சொல்லி பெருமைப்பட்டனர் இருதரப்பினரும். அழைப்பிதழ் அடித்து விநியோகிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு முதல்வாரம் திடீரென மணமகள் தன் காதலனுடன் தலைமறைவாகிவிட்டாள். அதிர்ச்சியில் உறைந்துபோன மாப்பிள்ளை வீட்டார்... அவசர கதியில் ஒரு பெண்ணை உறவுத்தரப்பிலேயே தேடிப்பிடித்து... அதே முகூர்த்தத்தில் கல்யாணத்தை நடத்திவிட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டார்கள்.

கடலூரில் நம் நண்பர் இல்லத் திருமணம். முதல்நாள் இரவே ஆஜரான நமக்கு... அதிர்ச்சி. காரணம்... மண்டப வாசலில் மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் ஃபிளக்ஸ் போர்டுகளை... மாப்பிள்ளை வீட்டாரே அகற்றிக்கொண்டி ருந்தனர். எனினும் திரு மண ஏற்பாடு நடந்த படியே இருந்தது. என்ன பிரச் சினை என இறுக்கமான முகத்தோடு இருந்த நம் நண்பரிடம் விசாரித்தபோது.. ""அந்த அநியாயத்தை ஏன் கேக்கறீங்க. நம்ம பையனுக்கு தகுந்தபடி பட்டதாரிப்பெண்ணா பார்த்து... பேசி முடிவு செஞ்சுதான் கல்யாண ஏற்பாட்டையே செஞ்சோம். இந்த நிலையில் நேத்து வெளியே போன மணமகள் அவ வீட்டுக்கு போன் பண்ணி என்னைத் தேடாதீங்க. நான் எனக்குப்பிடிச்சவரோட போறேன்னு தகவல் சொல்லியிருக்கா. இதை பெண்வீட்டுதரப்பு தயங்கித்தயங்கி எங்களுக்குத் தெரிவிச்சிது. என்ன பண்றதுன்னு திகைச்சுப் போன நாங்க... அவசரமா ஒரு பெண்ணைத் தேடிப்பிடிச்சோம். பையனுக்கு இணையா பட்டப்படிப்பு படிக்கலைன்னாலும் 10-வது பாஸ் பண்ணியிருக்கு. பையனும் ஓ.கே. பண்ணிட்டான். அதான் மணமகளை மாத்தி கல்யாணத்தை நடத்திக்கிட்டு இருக்கோம். ஃபிளக்ஸ் போர்டில் ஓடிப்போன பெண்ணின் படத்தை போட்டு வாழ்த்தி இருந்தாங்க. அது நெருடலா இருந்ததால்... அத அகற்றிட்டோம்'' என்றார் சங்கடமாய்.

-இப்படிப்பட்ட ஓடிப்போகும் சம்பவங்களுக்கு மத்தியில் கொஞ்சம் வித்தியாசமான ஓடல் சம்பவம் இது....

விழுப்புரம் மாவட்ட திருக்கோவிலூர் அருகே இருக்கும் கிராமத்து இளைஞர் ராஜா. இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சாந்திக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. பத்திரிகை அடித்து... கல்யாண நாளும் நெருங்க... முதல்நாள் தடபுடலாக பெண் அழைப்பு வைபவம் நடந்தது. அடுத்த கொஞ்ச நேரத்தில் மணப்பெண்ணைக் காணவில்லை. பதறிபோன இரு தரப்பும் இரவோடு இரவாக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட... போலீஸ் தீவிரமாக விசாரித்து அந்தப் பெண்ணின் காதலனைத் தூக்கி வந்தது. அவனோ ""மணமகளான என் காதலி வீட்டைவிட்டு ஓடிவருகிறேன் என தகவல் கொடுத்தாள். நான் என் நண்பன் ஒருவனை போய் அழைத்து வா என்றேன். இன்னும் வந்து சேரவே இல்லை'' என்று கைபிசைந்தான்.

எங்கெங்கோ தேடியும் கிடைக்காத அவள்... மூன்றாம்நாள்தான் அந்த காதலனின் நண்பனோடு வந்தாள். நண்பனோ போலீஸுக்கு பயந்து அவளை தனியாக தங்க வைத்திருந்ததாக சொல்ல...

மணமகன் ""இப்படிப்பட்ட பெண்ணே எனக்கு வேண்டாம். வேறு பெண்ணைப் பார்த்துக்கொள்கிறேன். அவள் தன் காதலனுடனே வாழட்டும்'' என்று கைகூப்பிவிட்டுக் கிளம்பினான்.

காதலனோ ""என் நண்பனோடு மூன்று இரவுகள் தங்கியிருந்த இவளை எந்த நம்பிக்கையில் நான் ஏற்றுக்கொள்ள முடியும்? எனக்கு இவள் வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டான்.

""சரி நீயே இவளை ஏற்றுக்கொள்'' என நண்பனிடம் காக்கி கள் சொல்ல... ""உதவி செய்யப்போன என் தலையிலேயே இவளைக் கட்டப்பார்க்கிறீர்களா?'' என்றபடி அங்கிருந்து நழுவினான்.

அவளது பெற்றோரும் ""இப்படிப்பட்ட பெண் எங்களுக்கு தேவை இல்லை'' என அங்கேயே கைகழுவிச்செல்ல... திகைத்துபோன காக்கிகள் அவளை காப்பகத்தில் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டார்கள்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு திருமணமும்... சிறுத்தைகள் திருமா தலைமையில் ஒரு திருமணமும் ஏற்பாடான நிலையில் மணமகள் கள் ஓடிப்போய்விட்டார்கள். திகைத்துப்போன மாப்பிள்ளைகள் தரப்பு... மணமகள்களின் தங்கைகளையே மணமகள்களாக ஆக்கி திருமணத்தை முடித்துவிட்டனர்.

இத்தகைய ஓடல்களால் பெற்றோர் தரப்பு அடையும் அவமானம், சங்கடம், பரிதவிப்புகள் ஏன் மணமக்களுக்குப் புரிவதில்லை.? இத்தகைய சங்கடங்களுக்குத் தீர்வுதான் என்ன?

திட்டக்குடி ஓம்சக்தி ஆப்செட் உரிமையாளர்களான ராஜகுரு- விஜயகுமாரி தம்பதிகளோ ""இப்படி ஓடிப்போகும் இளசுகளால் இன்னும் பாதிப்புகள் அதிகம். குறிப்பா... கல்யாணம் ரெடியான நிலையில் மாப்பிள்ளை ஓடிப்போனால்... பொண்ணோட நடத்தை சரியில்லை போலிருக்கு. அதான் ஓடிப்போய்ட்டான்னு சிலர் அவதூறு கிளப்புவாங்க. அதனால் அந்தப் பொண்ணுக்கு அடுத்த மாப்பிள்ளையைத் தேடிப்பிடிக்கிறது சிரமமான விசயமா ஆய்டுது. அதுவே மணமகள் ஓடிப்போனா... பையன் நடத்தை சரியில்லை.... அவனுக்கு ஏதேதோ வியாதியெல்லாம் வந்துருச்சாம். அது தெரிஞ்சதாலதான் பொண்ணு ஓடிப்போய்ட்டா என்பார்கள். அந்தப் பையனுக்கு அடுத்த பெண் கிடைப்பதும் இதனால் சிக்கலா ஆகுது.

இப்படி இளசுகள் தறிக் கெட்டு ஓடக் காரணமே... கூட்டுக் குடும்பமுறை சிதைஞ்சதால தான். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி... இப்படி நிறையபேர் இருந்தா.. வீடு கலகலப்பா இருக்கும். அவங்க பிள்ளைகளுக்கு அக்கறையா நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுப்பாங்க. அவங்க மனசுக்கு வடிகாலா இருந்து வழிகாட்டு வாங்க. இந்த நிலைபோய்... இப்ப... சின்னச் சின்ன குடும்பமா எல்லோரும் சிதைஞ்சாச்சு. வீட்டில் இருக்கும் அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போய்ட்டா... பிள்ளைகள் பாசத்துக்கு பரிதவிக்கும். அப்ப அதுக்குக் கிடைக்கும் பிரண்ட்ஷிப்பை உண்மையானதா நம்பும். அப்புறம் காதல் கத்தரிக்காயெல்லாம் முளைக்கும். இது வாழ்க்கையை குப்புறப்போட்டுடும். பெத்தவங்களை சங்கடத்தில் கைபிசைய வைக்கும். இப்ப இருக்கும் பிள்ளைகள் கல்வியில் வளர்ற மாதிரி... ஒழுக்கத்திலும் உயர்ந்து நிக்கணும். அதுக்கு உரிய கல்வி முறையை... நாம் அவங்களுக்குப் போதிக்கணும்'' என்கிறார்கள் விரிவாகவே.

திருவெண்ணெய்நல்லூர் பாரதமாதா சேவாதள சங்கத்தின் மூலம் பெண்களுக்குத் தையல் பயிற்சி கொடுத்துவரும் தமிழழகன்-ஞானம் தம்பதிகளிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது ""எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கல்யாணம் ஏற்பாடான நிலையில் மகள் ஓடிப்போய்விட்டாள். மாப்பிள்ளை வீட்டுக்கு என்ன பதில் சொல்றதுன்னு துடிச்சிப்போன அந்தப் பெண்ணின் அம்மா அப்பாவும் அண்ணனும் விஷம் குடிச்சி செத்துட்டாங்க. அதை எங்களால் காலத்துக்கும் மறக்கவே முடியாது. காதலுக்கு நாங்கள் எதிரிகள் கிடையாது. காதல் திருமணங் களை நாங்க வரவேற்கிறோம். அதே சமயம்... காதலிக்கிற வங்க போராடி அதில் ஜெயிக் கணும். அதைவிட்டுட்டு மணவறைவரை வந்துட்டு ஓடிப்போறதுதான் தப்பு. அதுதான் எல்லோரையும் காயப்படுத்துது'' என்கிறார்கள் வருத்தம் இழையோட.

கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோவை பாலு நம்மிடம் ""இப்ப இருக்கும் டி.வி.மீடியாக்கள் காதலை தவறா கற்பிதம் பண்ணுது. அதை நம்பி... அத்தகைய காதல் நதியில் பலர் இறங்குறாங்க. அவங்கள்ல கரையேறி வர்றவங்க சிலர்தான். பலர் அதிலேயே மூழ்கிப்போய்டறாங்க'' என்கிறார் கவலையாய்.

காதலை மதித்து காதலிப்பவர்களை பாதுகாப்பாக சேர்த்துவைக்க உரிய சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என வலியுறுத்தும் பெரம்ப லூர் பெரியவர் நெடுஞ்செழியன் ""திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் ஓடுகிறவர்களைக் கடுமையாகத் தண்டிக்கிற சட்டங்களும் வேண்டும்'' என்கிறார் அழுத்தமாய்.

""கண்டதே காட்சி: கொண்டதே கோலம்னு நினைச்சமாதிரி நடக்கறாங்க. முதல்ல சமூகத் துக்கு ஒழுக்கத்தைப் போதிக்கச்சொல்லுங்க. பிறகு மத்ததைப் பார்க்கலாம்'' -இது ராமநத்தம் ஓய்வுபெற்ற ஆசிரியர் பிச்சுமணியின் காட்டம்.

ஜோதிடப்பொருத்தம் பார்த்த ஜோடிகளே ஓடிப்போவது எப்படி? இந்தக் கேள்வியை நாம் ஜோதிடத்தில் பட்டப்படிப்பு படித்த விநாயகநந்தல் ராஜுவிடம் கேட்டபோது ""சரியான ஜோஸியர்களா இருந்தா... இந்த இரண்டு பேருக்கும் திருமணம் நடக்காது. மணமகன் ஓடிப்போய்டுவான்னு நல்லா தெரியும். அரைகுறை ஜோதிடர்களுக்குத்தான் இதெல்லாம் தெரியாது. ஜோதிடப் பொருத்தம் பார்க்கும் போதே மணமக்களின் லட்சணம் தெரிஞ்சிடும்'' என அடித்துசொல்லும் ராஜு...

""சரியா கணிக்கப்படாத ஜாகத்தை நம்பி பலன் சொல்லும்போது மட்டும் தவறுகள் நேரலாம்'' என்கிறார் பின்வாசலைத் திறந்தபடி.

""எது எப்படியோ... ஓடிப்போக முடிவெடுக்கும் காதல் ஜோடிகளே... உங்கள் காதல் மராத்தானை திருமண ஏற்பாட்டுக்கு முன்னதாகவே வைத்துக்கொள்ளுங்கள். கடைசிவரை அமைதி காத்து... கடைசிநேரத்தில் கழுத்தை அறுக்காதீர்கள்'' என வேண்டு கோள் வைக்கிறார் சமூகநல ஆர்வலரான எஸ்.கே.ராமன்.

இதையே நாம் வழிமொழிகிறோம்.

No comments:

Post a Comment