Tuesday, April 27, 2010

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார் நித்யானந்தா

நித்யானந்தாவுக்கு நெஞ்சுவலி இல்லை என்று அவரை பரிசோதித்த மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை கொடுத்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து அவரிடம் கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.



நீதிமன்றம் அனுமதித்த போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவை கர்நாடக சிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நித்யானந்தாவிடம் முழுமையாக விசாரணை நடத்தவில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், 4 நாட்கள் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கர்நாடக சிஐடி போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் ராம்நகர் நீதிமன்றம் 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.



நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க தமிழகம், கர்நாடகம், ஆந்திர போலீசாரும், கர்நாடக சிஐடி போலீசாரிடம் மனு கொடுத்துள்ளனர். இதனிடையே நித்யானந்தா ரஞ்சிதா சி.டி.யை வெளியிட்ட லெனின் கருப்பன் பெங்களூரு சிஐடி அலுவலகத்தில் நேரடியாக சென்று சாட்சி அளித்து வருகிறார். லெனின் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.



இந்நிலையில் திடீரென நித்யானந்தா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இருதய ஆராய்ச்சி மருத்துவமனையில் நேற்று இரவு அவசர அவரசமாக தீவிர சிகிச்சை பிரிவில் கர்நாடக சிஐடி போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.



இரண்டு நாள் காவல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு நெஞ்சு வலி என நித்யானந்தா கூறியுள்ளது, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதையே காட்டுவதாக கர்நாடக சிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.



இந்நிலையில் இரவு முழுவதும் நித்யானந்தாவை மருத்துவர்கள் பரிசோதித்து வந்தனர். நித்யானந்தாவை பரிசோதனை செய்த பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனை மருத்துவர் மஞ்சுநாத் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில், நித்யானந்தா உடல்நலத்தில் எந்த கோளாறும் இல்லை என்று கூறியுள்ளார்.



நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலியும் இல்லை. காய்ச்சலும் இல்லை. ரத்த அழுத்தமும் இல்லை என்று மருத்துவர் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.



இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட நித்யானந்தா, கர்நாடக சிஐடி போலீசார் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நித்யானந்தா மீதான பாலியல் புகார்கள் தொடர்பாகவும், மோசடி தொடர்பாக புகார்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment