சென்னையில் ஆண்களும், பெண்களும் சகஜமாக பேசி பழகுவது அதிகரித்து வருகிறது. கள்ளம்கபடம் இல்லாமல் இந்த நட்பு நீடித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி. அதே வேளையில் நட்பாக பழகும் பெண்ணிடம் சில்மிஷ வேலைகள் செய்ய ஆரம்பித்தால் பெண்ணின் பாடு திண்டாட்டம்தான்.
அந்த வகையில் சில வக்கிர மனம் படைத்த வாலிபர்கள் தங்களுடன் நட்புடன் பழகும் குடும்ப பெண்களிடம் நைசாக பேசி செல்போன் காமிரா முலம் படம் எடுத்துக் கொள்கிறார்கள். பின்னர் அந்த படத்தை பப்ளிக் இணைய தளங்களில் சேர்த்து விடுகின்றனர். பெரும்பாலான பெண்களின் படத்துடன் அவர்களது செல்போன் நம்பர்களையும் போட்டு விடுகின்றனர்.போதாகுறைக்கு அந்த படத்திற்கு அருகில் நான் சென்னையில் இருக்கிறேன். உல்லாசத்திற்கு தயார் என்ற அறிவிப்பு ஆங்கிலத்தில் மின்னுகிறது. இதை பார்த்து சபல ஆசாமிகள் பலர் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை வரை செல்ல நேரிடுகிறது. இத்தகைய விபரீதங்களை தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர்கிரைம் போலீசார் இத்தகைய நபர்களை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் திருவான்மியூரைச் சேர்ந்த பாமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் பொறியியல் கல்லூரி மாணவி. இவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
அதில் யாரோ மர்ம ஆசாமி நான் கல்லுரியில் இருந்து சுற்றுலா சென்ற போது எடுத்த படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டு தன்னுடைய செல்போன் நம்பரை குறிப்பிட்டு உல்லாசத்துக்கு தயார் என்ற ஆபாச வாசகத்தோடு பரப்பி விட்டுள்ளான்.இதனால் எனக்கு நிறைய பேர் போன் செய்து தொல்லை செய்கின்றனர். இண்டர்நெட்டில் பரப்பப்பட்ட எனது படங்களை அழித்து, பரப்பி விட்ட மர்ம ஆசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் அதிரடியாக துப்பு துலக்கினர்.
பாமாவின் படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டது அவருடன் கல்லூரியில் படிக்கும் நெருங்கிய நண்பர். அவர் மீது ஒருதலையாக காதல் கொண்டு இது போன்ற வக்கிர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த மாணவரை பிடித்து எச்சரித்தனர்.
புகார்தாரர் பாமா கேட்டுக்கொண்டதால் மாணவரின் எதிர்கால வாழ்க்கை நலன் கருதி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதே போல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணின் படத்தை உடன் வேலை பார்க்கும் ஊழியரே இண்டர்நெட்டில் பரப்பி விட்டதாக சிக்கினார். பக்கத்து வீட்டு பெண்ணின் படத்தை இது போல் பரப்பிய மற்றொரு மாணவரும் பிடிபட்டார். இதுவரை சென்னையில் 2 மாணவர்கள் உள்பட 6 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.
இதுகுறித்து சைபர்கிரைம் உதவி போலீஸ் கமிஷனர் சுதாகர் கூறியதாவது:-
இண்டர்நெட் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களை தடுப்பதில் போலீசார் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடும்ப பெண்களின் படத்தை செல்போன் நம்பர்களுடன் வெளியிட்டு தவறான வகையில் அவதூறு பரப்பும் நபர்கள் தப்ப முடியாது. கடந்த 2 வருடத்தில் இதுபோன்று 6 புகார்கள் வந்தது.இதில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் சிக்கினர். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பெண்கள் விருப்பப்படியே அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகிறோம். புகார்தாரர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படுகிறது. சமீபத்தில் கூட மாணவியின் படத்தை அவதூறாக பரப்பிய கல்லூரி மாணவர் சிக்கினார்.
எனவே இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் முறைபடி புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment