வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு தொடர்பாக நடிகர் விஜய்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் விஜய்க்கு நிலம் ஒதுக்கியதில் எந்த முறைகேடும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடிகர் விஜய்க்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்தாவது,
கொரட்டூரில் நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியத்தால் நிலம் ஒதுக்கப் பட்டதில் முறைகேடு இருப்பதாக கூறி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விஜய்க்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு எதுவும் இல்லையென்று வீட்டு வசதி வாரியம் விளக்கமளித்தது. இதனை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: 2002 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரிய ஏலத்தில் கே.கே.நகரில் எனக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த நிலம் ஒப்படைக்கப்படவில்லை. இதனையடுத்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் எனக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்று வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையிலேயே பாடியில் 5 கிரவுண்டு நிலமும், கொரட்டூரில் 3 கிரவுண்டு நிலமும் வழங்கப்பட்டது. சட்டப்பூர்வமாகவே நிலம் வழங்கப் பட்டிருக்கிறது.
என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை வாங்கவில்லை; இதில் முறைகேடு எதுவும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இதனை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment