மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ் வேளையில், மாவீரர் தின உரை வருமா இல்லை வராதா என்ற ஏக்கத்துடன் உலகத் தமிழர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஒருபுறம் மாற்றுக் கருத்து உள்ளவர்களும், அரசுடன் சேர்ந்து இயங்குபவர்களும் மாவீரர் தின உரை இம்முறை வெளிவராவிட்டால் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டு விட்டது என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை பரப்புரையாக மேற்கொள்ள காத்திருக்கின்றனர். மறு முனையில் இலங்கை அரசானது தாமே ஒரு பொய்யான மாவீரர் தின உரையை நிகழ்த்தி, அதில் தேசிய தலைவருக்கும் ஈகைச் சுடர் ஏற்றி அதை வெளியிட்டு, புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்ச முயல்வதாகச் செய்திகள் கசிந்திருக்கின்றன.
குறிப்பாக இணையத்தள உரிமையாளர்கள், இந்த விடையத்தில் மிகவும் அவதானமாகச் செயல்படுவது நல்லது. மாவீரர் தின அறிக்கை என, எவராலும் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அவை இலங்கை புலனாய்வுத் துறைமூலமாக வெளியிடப்படலாம். இச் சந்தர்ப்பத்தில் பொறுமைகாத்து நிதானாமாகச் செயல்படுவது நல்லது.
எது எவ்வாறு இருப்பினும் மாவீரர் தின உரை என்பது எமது தேசிய தலைவரால் வாசிக்கப்படும் ஒரு உன்னதமான உயிரோட்டமுள்ள உரை. ஒரு பேரழிவை எமது இனம் சந்தித்துள்ளவேளை, எமது ஆயுதப்போராட்டம் தற்காலிகமாக மௌனித்துள்ள இவ் வேளை நாம் தேசிய தலைவர் அவர்களின் உரையை எதிர்பார்த்திருப்பது முறையல்ல. ஏன் எனில் வழமையாக நவம்பர் மாதம் என்றாலே இலங்கை அரசு கதிகலங்கி இருக்கும். மாவீரர் மாதத்தில் பல பாரிய தாக்குதல்கள் இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் எதிராகவும் நடைபெறும். அவ்வாறு தாக்குதல்கள் வெற்றியாக முடிந்த தறுவாயில் தேசிய தலைவர் மாவீரர் நாள் உரையாற்றுவது வழக்கம்.
அதனால் இன்னும் ஒரு பாரிய வெற்றி, அது அரசியலாக இருக்கலாம் இல்லை ஆயுதப் போராட்ட வெற்றியாக இருக்கலாம் அப்படி ஒரு வெற்றியை நாம் அடைந்த பின்னரே அவர் உரை வெளிவரும் என்பதை புலிகளை நன்கு விளங்கிக்கொண்டவர்கள் அறிவார்கள். அதுவே அவர் உரைக்கும் பெருமை சேர்க்கும், தமிழினம் தலை நிமிரும் உரையாகவும் அமையும்.
உரை வரும் வராது என்ற வாதப் பிரதிவாதங்களை முதலில் நாம் நிறுத்திவிட்டு எமது மாவீரச் செல்வங்களின் கல்லறை நோக்கி அணிதிரளுவோம். உங்கள் நாடுகளில் எங்கெங்கு மாவீரர் நினைவு தினம் நடக்கின்றதோ அங்கே சென்று அவர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றுவோம். எமது போராட்டத்திற்கு உரம்சேர்ப்போம், உறுதியுடன் போராடுவோம் என மாவீரர் முன் நின்று அவர்கள் கனவு நினைவாக உழைப்போம் என சபதம் எடுத்துக்கொள்வோம்.
இதுவே எம் மனதைத் தூய்மைஆக்குவதோடு சரியான முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்கும் . எமது மாவீரச் செல்வங்களின் உருவப்படத்தை ஒரு முறை பார்த்தால் சஞ்சலங்கள் தீரும். எமது ஏக்கம் தீரும். ஒவ்வொரு மாவீரனும் மண்ணில் விழும்போது நாளை பிறக்கும் தமிழீழம் என்ற லட்சியக் கனவுடன் கண்மூடி இருப்பான்.. அவர்கள் கண்மூடும் போது கண்ட கனவை நாம் நிஜமாக்குவோம்.
No comments:
Post a Comment