கார்த்திகை 27 வருகிறது. தமிழீழக் கனவு சுமந்து களமாடிக் காவியமாகிய முப்பத்து ஏழாயிரத் திற்கும் மேலான மாவீரர்களையும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் தமிழுலகம் வணங்கிப் பணியும் நாள். ஈழத்திற்கான இறுதிப்போருக்கு நம்மையெல்லாம் அழைக்கின்ற நாள். தூர விலகி நிற்பதற்கு இதுவரையும் நூறு காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் மே-17 முள்ளிவாய்க்கால் இன அழித்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின் நாம் விலகி நிற்பதை நியாயப்படுத்த எக்காரணமும் இல்லை.
லட்சோப லட்சம் தமிழ் மக்களின் வீடு, வாசல்களை தரைமட்டமாக்கி, ஆடு, மாடுகள் போல் அடித்துத் துரத்தி உணவு, மருந்து, குடிநீர் மறுத்து குழந்தைகள், பெண்க ளென்றுகூட கருணை காட்டும் மனமின்றி வன்கொலைகள் புரிந்து, வயதுப் பிள்ளைகளோடு பெற்றவர்களையும் நிர்வாணமாய் கரங்களுயர்த்தி நடக்க வைத்து, ஒரேநாளில் இருபதாயிரம்பேரை படுகொலை செய்து, நூற்றுக் கணக்கானவர்களை உயிரோடும் புதைக்க முடிந்த கொடுங்கோலர்களோடு மானமுள்ள எந்தத் தமிழனுக்கும் சமரசம் இல்லை, நீதி கிடைக்கும்வரை, ஈழம் மலரும்வரை நாம் ஓய்வதுமில்லை.
எல்லாவகையிலும் வேதனையுற்று நிற்கிறோம். ஆனால் ஒடுங்கிப் போகவில்லை. மனக்கலக்கம் அடைந்து நிற்கிறோம், ஆனால் மனம் உடையவில்லை -உறுதி தளரவில்லை, வீழ்த்தப்பட்டு நிற்கிறோம், ஆனால் முற்றிலுமாய் அழிந்து போகவில்லை. இந்த நம்பிக்கையோடே அடிபணியமாட்டோம், அறப்போர் தொடரும் எனச் சங்கநாதம் முழங்கி உலகத் தமிழர்கள் மாவீரர்களையும், உயிர் நீத்த மக்களையும் வணங்க அணிவகுக்கிறார்கள்.
நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்ட ஈழத்துப் புறநானூற்றுக் கதைகளில் ஒன்று இது. தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம். அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி. அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது. தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள். கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய். அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.
ஒன்றா, இரண்டா... தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் முப்பத்தேழாயிரத்திற்கும் மேல். அவர்களது முடிவிலா கனவாம் தமிழீழ நாள்தான் கார்த்திகை 27. இவ் ஆண்டின் அப்புனித நாள் முற்றிலும் புதியதோர் காலச்சூழலில் வருகிறது.
முக்கியமானதொரு அறிக்கையினை இம்மாதம் கடந்த 8-ம் தேதியிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டிருந்தது. முள்ளி வாய்க்கால் மே-17 ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப்பின் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தலைமை பற்றின தெளிவானதும் வெளிப்படையானதுமான தோற்றப்பாடு இன்னும் நமக்குக் கிட்டவில்லையென்றாலும்- அந்த அறிக்கையின் இரண்டு கருத்துகள் கவனத்திற்குரியவை யாய் இருந்தன.
முதலானது, ""முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வீரமிகு ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரழிவினை தவிர்ப்பதற்காக மௌனிக்கப்பட்டது. இன்றைய சூழலில் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும் -குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது - என்ற பகுதி.
இரண்டாவது, அரசியல் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஈழம் அமைக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை உலகளவில் துரிதமாய் நிறுவும் பணியில், புலம்பெயர் ஈழமக்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமையவேண்டுமென்ற அறிவுறுத்தலும், அவ்வாறு அமைவதானது மக்கள் பங்களிப்புகளை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும் உதவக்கூடியதாக அமையும் -என்ற அறிவுறுத்தல்.
இந்தியத் தமிழர்களாகிய நாம் ஏன் ஈழ விடுதலை முயற்சியில் இணைகிறோம் -இணையும் வரலாற்றுக் கடமையில் இருக்கிறோமென்றால் அங்கு அம்மக்கள் அழிக்கப்பட்டமைக்கு ஒரே காரணம் அவர்கள் நாமும் பேசுகின்ற தமிழ்மொழியின் மக்களாயும், அதன்வழி "தமிழர்' என்ற இனத்தவராயுமிருந்ததால். எந்த அடிப்படையில் அடக்குமுறை நிகழ்கிறதோ, அதே அடிப்படையில்தான் எதிர்ப்பதிலும் அமையுமென்ற வகையில் தமிழ்மொழி- இன- தேசிய அடிப்படையில் நின்று சிங்களப் பேரினவாதத்தையும் அதன் துணையாளர்களையும் நாம் எதிர்கொள்கிறோம். இரண்டு அங்கு நிகழ்ந்தது இன அழித்தல்; நடந்தேறிய கொடூர போர்க்குற்றங்கள் ஒன்றிரண்டல்ல; நடந்தவற்றை முறைப்படி பதிவு செய்யும் மிகக் குறைந்தபட்ச நீதிகூட இன்னும் நடக்கவில்லை. இன அழித்தலும் போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள். தமிழரென்ற அடையாளத்தையும் கடந்து மனிதர்கள் என்ற அடிப்படையில் சிங்களப் பேரினவாதத்தையும் அதன் துணையாளர்களையும் நீதித் தணிக்கைக்கும் தண்டனைக்கும் உட்படுத்துவது நம் மானுடக் கடமையாகவும் ஆகிறது.
இன்றைய நிலையில் முதலாகவும், விரைந்தும் யாவரும் ஒன்றாய் இணைந்தும் செய்யவேண்டியது முள்ளிவாய்க்காலுக்குப் பின் மிஞ்சிய மக்களை வதை முகாம்களிலிருந்தும், உலகை ஏமாற்ற அவர்களை வவுனியாவிலிருந்து விடுவித்துவிட்டு மன்னாரிலும் பிற பகுதிகளிலும் அடைத்து வைக்கும் மோசடியிலிருந்தும், ஊர் திரும்பியபின் யாருமறியாமல் இளவயதுப் பிள்ளைகளை தீர்த்துக்கட்டும் கொடுமையினின்றும் மக்களைக் காப்பது. மக்கள் இன்றி ஈழம் எதற்கு? விழிப்புணர்வுடன் உலகத்தமிழர் நடத்தும் இடைவிடா இயங்குதலால் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் உலகநாடுகள், அமைப்புகளால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். அவ்வாறே ஆங்காங்கு கொண்டு அனாதைகளாய் இறக்கிவிடப்படும் நம் மக்கள் மீண்டுமொரு வாழ்வைத் தொடங்குவதற்கான திட்டமிடப்பட்ட பொருண்மிய உதவிகள் செய்தல்.
இரண்டாமது முதலானதற்கு இணையானது. ஒருவகையில் அத னிலும் முக்கியமானது, அடிப்படை யானது. தமிழீழ தாயகம் என்ற நில அலகு காப்பாற்றப்படுதலே அது. யாழ்குடா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ராஜபக்சே-கோத்தபய்யா திட்டப்படி சிங்களக் குடியேற்றங்கள் நடந்தால் -நடப்பது அனுமதிக்கப்பட்டால் ஈழம் என்ற கருதுகோளே இல்லாது போய்விடும். தமிழர் நிலத்தை அபகரித்து சிங்களமயப் படுத்துவதொன்றும் சிங்களப் பேரினவாதத்திற்குப் புதிதல்ல. தமிழீழத்தின் தலைநகரம்- இதயம் என வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இதயத்தில் வணங்கிய திருகோணமலை மாவட்டத்தில் 1827-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 81.8% பேர் தமிழர்கள். 1.3% பேரே சிங்களவர். எஞ்சிய 16.9% பேர் தமிழ் பேசிய இசுலாமிய மக்கள். இதே மாவட்டத்தில் 1981 கணக்கெடுப்பின்போது 81.8 சதமாயிருந்த தமிழர் 36.4 சதமாகச் சுருங்கிவிட்டனர்; 1.3 சதமாயிருந்த சிங்களவர் 36.4 சதமாக விரிந்தனர். இன்று கணக்கெடுத்தால் சிங்களவர் திருகோண மலை நிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் வியப்பதற்கில்லை. இந்த ஆபத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நிகழுமேயானால் ஈழத்தை நாம் மறந்தேவிடலாம். கோத்தபய்யா திட்டப்படி இவ்விரு மாவட்டங்களிலும் நெறி செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் விரைவில் தொடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகத் தமிழ் மக்கள் முன் நிற்கும் மிகவும் அடிப்படையான சவால் இதுதான். இதனைத் தடுத்து நிறுத்தும் வலு நிலையில் தமிழர்கள் நாம் இன்று இல்லை. இலங்கைக்குள், ஒருமித்த தமிழ் அரசியல் வலுப்பட்டு, அது உலகத்தமிழ் மக்களின் ஒருமித்த வலுவோடு இணைந்து இரண்டுமாய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு உருவாக்கும் தீரா அழுத்தத்தின் மூலமாகவே அதைத் தடுத்து நிறுத்த முடியும். அனைவரும் இணைந்து நின்றால் மட்டுமே இது சாத்தியம். அதைவிடுத்து வள்ளுவப் பெருந்தகை சொல்வதுபோல், "பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையுமாய்' தமிழர் நாம் இப்போதுமிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.ஈழம் மலர வேறென்ன நிகழவேண்டும்?
No comments:
Post a Comment