Friday, November 20, 2009
சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயற்சி : அரசு மறுப்பு
கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுணுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான 'லங்கா புவத்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்."சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது.அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment