தேசியத் தலைவர் உரை நிகழ்த்த வருவாரா இல்லையா என்ற ஏக்கங்களை சுமந்தபடி மக்கள் மாவீரர்களை அஞ்சலிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத் தமிழினத்திற்கு மட்டுமல்ல உலகத் தமிழினத்திற்கே மானமும் மரியாதையும் கொடுத்த மாவீரர்நாள் இன்று. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் மாவீரர்நாள் உரை நிகழ்த்த, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அதற்கு விளக்கம் கொடுக்க, உலகம் முழுவதும் மக்கள் அந்த நாளை உணர்வுபூர்வமாகக் கொண்டாட, விமானப்படை மாவீரர் சமாதிகளுக்கு மலர்மாரி தூவ தமிழன் வான் முகட்டைத் தொட்ட வண்ண மயமான காலம் மாவீரர்நாள் கண்களில் இன்று பவனி போகிறது.
தேசியத் தலைவர் உரை நிகழ்த்த வருவாரா இல்லையா என்ற ஏக்கங்களை சுமந்தபடி மக்கள் மாவீரர்களை அஞ்சலிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மாவீரர் நாளன்று விளக்கை தலைவர் ஏற்றி வைத்தமைக்கு ஒரு குறியீடு இருந்தது. மக்கள் உள்ளங்களில் விடுதலையின் உண்மை ஒளி பரவவேண்டும் என்பதே அதன் குறியீடாகும். கடந்த மே மாதம் உலகம் முழுவதும் தமிழர் ஓரணியில் திரண்டபோது அவர்கள் உள்ளங்களில் எல்லாம் ஒளி பிறந்துவிட்டதை எல்லோரும் கண்டோம். ஒளி வரும்வரை நான் போராடுவேன் ஒளி வந்த பின்னர் நான் அங்கு தேவையில்லை, அந்த ஒளியின் வழியே மக்கள் நடந்து செல்வார்கள் என்று 2007ம் ஆண்டு மாவீரர்நாள் உரையில் வே.பிரபாகரன் கூறினார். மாவீரர்களின் ஒளி வழி காட்டுகிறது, அதன் வழி நான் நடக்கிறேன் என்று அதை அழுத்தமாகவும் தெரிவித்தார்.
இன்று ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் பாதை தெரிகிறது. சிறீலங்கா அரசு, இந்திய அரசு, உலக சமுதாயம் யாவும் எங்கே இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. இனியோர் அரசியல் பாதையை தெளிவான முறையில் வகுப்பதற்கு ஏற்ற அத்தனை சிரமங்களையும் மாவீரர்கள் சுமந்துவிட்டார்கள். முள் நிறைந்த பகுதியெல்லாம் நடந்து தமது உயிரைக் கொடுத்து, மக்கள் இனி எங்கெல்லாம் போகக் கூடாது என்பதற்காக தமது உயிரால் வழிகாட்டி, உயிரில் ஒளிகாட்டி சென்றுள்ளார்கள்.
அம்மா உன் கையால் ஒரு கிண்ணம் பால் குடிக்க வந்திருக்கிறேன்… கடைசியாக கரும்புலி மில்லர் தாயிடம் கூறிய வார்த்ததை இது…
என்னை தண்ணீரைக் குடிக்கச் சொல்லி களங்கப்படுத்தாதேயுங்கோ… இது தண்ணீரையும் குடிக்க மறுத்து திலீபன் சொன்ன கடைசி வசனம்.
ஒருவன் பாலைக் குடித்து உடலை எரித்தான் மற்றவன் தண்ணீரும் குடிக்காமல் உடலை எரித்தான்.
தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைப்பார்கள் மற்றவர்கள் ஆனால் மாவீரன் கேணல் கிட்டுவோ பேயகள் உலாவும் நடுக்கடலில் நெருப்பேற்றி வீரமரணமடைந்தான். இந்து சமுத்திரத்தின் நடுவிலேயே தீ உயிர்த் தீ மூட்டினான்.
மரங்கள் மூடிய மாங்குளத்து வீதியிலே ஒரு மரக்கன்றை நட்டு தேசத்தைக் காப்பாற்றுங்கள் என்று சிறுவர்களிடம் கூறிவிட்டு தீயானான் கரும்புலி போர்க்.
தனது வளர்ப்புத் தந்தையை சந்தித்த இடத்திலேயே மறுபடியும் வந்து உயிர் விடைபெற்றான் கரும்புலி காந்தரூபன்.
இப்படியாக ஒவ்வொரு மாவீரனுக்கும் ஒவ்வொரு புதுமை வரலாறு எழுதக்கூடியவாறு பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தேசத்திற்காக உயிர் கொடுத்தார்கள்.
இந்தப்போராட்டத்தில் ஆயுதம் ஏந்தியவர்களை மட்டும் மாவீரராகக் கருதிவிட முடியாத நிலை வன்னியில் ஏற்பட்ட இறுதிப் போரில் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகக் கலந்தார்கள், பலர் உயிருடன் புதைந்தார்கள், பலர் உதிரம் ஓடஓட மடிந்தார்கள். மரணத்திற்கு வரைவிலக்கணம் கூற முடியாத கொடுமைகளை சந்தித்தார்கள். செவ்விந்தியர்கள் அவர்கள் மண்ணில் எரிக்கப்பட்டு அத்தனை உடமைகளும் அபகரிக்கப்பட்ட காட்சி அரங்கேறியது. அங்கு மடிந்த அத்தனைபேருமே மாவீரர்கள்தான்.
இத்தனை காட்சிகளுக்குப் பிறகும் தலைவர் வந்து மாவீரர்நாளில் அடுத்த கட்டம்பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்பது யதார்த்தமான கேள்வி. ஆகவேதான் இம்முறை மாவீரர்நாளின் அடுத்த பக்கத்திற்குள் போகிறோம். ஈழத் தமிழினத்திற்கான வரலாற்றையும், அது போக வேண்டிய பாதையையும் மாவீரர்கள் எழுதிவிட்டார்கள். அதில் பயணிக்க வேண்டியதே காலத்தின் பாதையாக உள்ளது. மாவீரர்களின் ஒளி நிச்சயம் நமக்கு வழி காட்டும்.
மாவீரர்களின் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும் ஒரு காலத்திற்குள் இன்றிலிருந்து போகிறோம். ஆமாம்… மணியடிக்கும் ஓசை கேட்கிறது! இது மாவீரர்நாள்.
No comments:
Post a Comment