"உலக ஒழுங்கு', "பிராந்திய ஒழுங்கு' என்றெல்லாம் எழுதுகிறீர்களே, அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்று தோழர் ஒருவர் அப்பாவித்தனமாக கேட்டார். அவருக்கு ஓர் சிறு உதாரணத்தை சொன்னேன்.
தமிழர் இன அழித்தல் யுத்தத்திற்கு அரசியற் தலைமை கொடுத்தவர் ராஜபக்சே. களத்தில் கொடும் ராணுவத் தலைமை கொடுத்தவர் சரத் பொன்சேகா. இருவரும் யுத்தம் முடிந்த ஆறு மாதத்திற்குள் எதிரிகளாகி தேர்தல் களத்தில் சந்தித்துக் கொள்கிறார் களல்லவா? இத்தகு விசித்திரமான அரசியல் ரசாயன மாற்றங்களை கொஞ்சம் உற்று உன்னிப்பாக நோக்கினீர்களென்றால் அத்தகு ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும் உலக-பிராந்திய ஒழுங்குகள் உங்களுக்குப் புரியும்.
அல்லது, வெற்றி வெறியில் கொக்கரித்து நின்ற ராஜபக்சே சகோதரர்கள் திடீரென ஒருநாள் வெல வெலத்துப் போய் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்திய ராணுவ உதவியை நாடியதாக பொன்சேகா குற்றம் சாட்டியதையும், இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டதாக வந்த செய்தி களையும் கூர்ந்து ஆய்ந்தீர்க ளென்றால் புரியும், பிராந்திய ஒழுங்கு என்னவென்று.
அதுபோலவே மேலும் சில நண்பர்கள் கேட்பது, ஈழம் மலரும், ஈழம் வரும் என்றெல்லாம் எழுதுகிறீர்களே, இது நடைமுறையில் சாத்தியமா? இல்லை, துவண்டு கிடக்கும் உணர்வாளர்களை சாந்தப்படுத்த வேண்டி எழுது கிறீர்களா? -இப்படி பல கேள்விகள். ஐயமுறும் நண்பர் களுக்கு எனது பதில்:
அர்மீனியா, அசர்பைஜான், பெலாரஸ், எஸ்தோனியா, ஜார்ஜியா, கசக்ஸ்தான், கிரிக்ஸ்தான், லாத்வியா, லித்துவேனியா, மால்டோவா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ் தான், உஸ்பெகிஸ்தான், உக்ரைன், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவ்னியா, குரோஷியா, மாசிடோனியா, செர்பியா மற்றும் மான்டெனேக்ரோ, ஸ்லோ வேனியா, நமீபியா, யெமென், மார்ஷல் தீவுகள், எரித்ரேயா, பலாவ், கிழக்கு திமோர், கொசோவா... என்ன புதிய மொழியில் எழுதுகிறேன் என நினைக்கிறீர்களா? இவை யாவுமே 1990-ம் ஆண்டுக்குப் பின் இப்பூமிப் பந்தில் புதிதாகப் புலர்ந்தெழுந்த நாடுகள். கடந்த இருபது ஆண்டுகளில் மட்டுமே சுமார் 36 நாடுகள் புதிதாக உதயமாகியுள்ளன. தத்தமது தேசியப் பாடல்கள், கொடி கள், சட்டங்கள், நீதி அவைகள், பாராளுமன்றங் களுடன் இன்று இந்நாடுகள் உலகக் குடும்பத்தின் பெருமை மிகு உறுப்பு நாடு களாய் தலைநிமிர்ந்து நிற்கின்றன.
ஆக, கடந்த இருபது ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஆண்டொன்றுக்கு சராசரி இரு புதிய நாடுகள் நம் உலக வரைபடத்தில் உருவாகியிருக்கின்றன.
இந்த யதார்த்த உண்மையில் நின்றுகொண்டுதான், கடந்த 2008-ம் ஆண்டு பெப்ருவரி 17ம் நாள் கடைசியாக உலக சமுதாயத்தால் முழு உரிமைகள் கொண்ட தனிநாடாக ஏற்கப்பட்ட கோசொவா நாட்டு மக்கள் அனுபவித்த இன அழித்தல் துயர் களின் வரலாற்று வரை சாட்சியாகக் கொண்டுதான் எழுதுகிறேன், உலக வரைபடமொன்றும் மாற்றப்படா தன்மை கொண்ட சந்திர மண்டலத்துக் கற்பாறைக் களம் அல்ல.
அது சதா மாறிக் கொண்டே இருக்கும்.இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததும், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்ததும் நம் தலைமுறையினரில் இன்னும் உயிரோடிருக்கிற பலர் பார்த்த அனுபவங்கள். எனில் ஏன் இலங்கையின் இன்றைய நிலப்பரப்பு இரண்டாக பிரிந்து ஈழம் தனியாக மலரக்கூடாது. மலரும். ஒன்றாய் நாம் நின்றால், சுயநலம் அறுத்து தமிழின உணர்வோடும் மானுட அறத்தோடும் உழைத்தால் நிச்சயம் ஈழம் மலரும். வரலாறு தான் நம் நம்பிக்கை. முள்ளி வாய்க்காலின் கூக்குரல்கள் ஓயாது. இறைவன் இருப்பது உண்மையென்றால் ராஜபக்சே கோத்தபய்யா சகோதரர்களை மனித குலத்திற்கெதிராய் குற்றம் புரிந்த பாவிகளாய் வரலாறு விரைவிலேயே அவமானம் செய்யும். அதற்கும் மிகச் சமீபத்திய உதாரணங்கள் பலர் உண்டு.
சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கெதி ராய் இன அழித்தல் குற்றம் செய்த செர்பிய சர்வாதிகாரி சுலொபொதன் மிலொசொவிச் யுத்தக் குற்றவாளியாய் 2006- மார்ச் மாதம் சிறைக் கம்பிகளுக்குள்தான் மன அழுத்தம் தாங்காது மாரடைப்பில் மரணம் கண்டார். இப்போதும் அனைத்துலக நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டு அவ மானத்தின் அடையாளங்களாய் நிற்கிறவர்கள் போஸ்னிய செர்பியத் தலைவர் ரடவன் கரட்சிக், லைபீரிய நாட்டு அதிபர் சார்லஸ் டெய்லர், சூடான் நாட்டு அதிபர் ஒமார் அல் பஷீர்... ஆம் இவர்களைப் போல் ராஜபக்சே-கோத்தபய்யா- பொன்சேகா மூவரும் நிற்க வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். நிகழும். நிகழ்ந்தே தீரும்.
கடந்த இதழில் மேற்சொன்ன இன அழித்தல் மும்மூர்த்திகளையும் போர்க்குற்றவாளிகளாய் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போற்றுத லுக்குரிய மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனல்லவா...? அப்புலத்தில் தேர்ந்த அனுபவம் கொண்ட இவர்களை அணுகி இப்பணியை ஏற்றுச் செய்யும்படி அமர்த்தி அதற்கு ஆகக்கூடிய பெருநிதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா? மானுடம் முற்றிலுமாய் ஒருபோதும் மடிந்தோ, வீழ்ந்தோ போவதில்லை என்ற நம்பிக்கையின் செய்தி அது.
இப்புனிதப் பணியைச் செய்யும் படி அக்குறிப்பிட்ட அமைப்பினை அணுகியவர்களும், அதற்கான பெருநிதிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் யாரெனில் -இலங்கையில் கடமையாற்றி, தமிழர் மீது நிகழ்ந்த -நிகழ்த்தப்பட்ட கொடூரங்களையெல்லாம் கண்டு -ஆனால் நம்மைப்போல் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்ற சில நாடுகளின் வெளியுறவு ராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் உலக அமைப்புகளில் பணிபுரிந்த சில அதிகாரிகள். இவர்களில் சிலர் பணி ஓய்வு பெற்றுவிட்டவர்கள், சிலர் இப்போதும் பிற நாடுகளில் கடமை யாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழருக்கு நடந்ததை பொது மானுடத்திற்கு நேர்ந்த அவலமாகவும், அதை அறிந்தும் கண்டும்கூட தங்களால் தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையை தமது மனசாட்சிகளின் சவாலாகவும் கருதி நீதி தேடும் இப்புனிதப் பணியில் தம்மை அமைதியாக இணைத்துக்கொண்டிருக் கிறார்கள்.
தொடர்ந்தும், அவர்களை நான் விடாது வினவினேன் : ""ஐயா, கேட்பதற்காய் மன்னித் துக்கொள்ளுங்கள். மேற்குலக நாடுகளிலிருந்து புறப்படும் இத்தகைய முயற்சிகள் அனைத்திற்குள்ளும் அரசியல் வியூகங்களும், கணக்குகளும் இல்லாமல் இருக்காது. தயவு செய்து எதுவானாலும் வெளிப்படையாகக் கூறிவிடுங்கள்'' என்று வலியுறுத்திக் கேட்டேன். அதற்கும் அவர்கள் பொறுமையாகப் பதில் தந்தனர்.
""நிச்சயமாக இம் முயற்சியை முன்னின்று செய்யும் எங்களுக்கோ, இதனை செய்யும்படி எம்மைப் பணித்து அதற்கான செலவுகளைச் செய்யும் தனி மனிதர்களுக்கோ பொதுமானுடக் கரிசனையொன்றைத் தவிர்த்து வேறெந்த அரசியல் நோக்கும் இல்லை. அதேவேளை ஒன்றை நீங்கள் அறிய வேண்டும். என்ன வென்றால் மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லையென்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவர் மீதும் உள்ளூர வெறுப்பே கொண்டுள்ளனர். இவர்களை ஆதரித்து ஆட்சி பீடத்தில் நிலைபெறச் செய்யும் அக்கறை எந்த மேற்கு நாட்டுக்கும் இல்லை. ஆதலால் எம் முயற்சிக்கு ஒரு கட்டத்தில் இந்நாடுகள் ஆதரவு தருகின்ற வாய்ப்பும், அதனால் இலங்கை மீதான போர்க்குற்ற நீதி விசாரணை என்றேனும் ஒருநாள் வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகம்'' என்றார்கள். நீதி நிற்கும்! மானுடம் வெல்லும்!
உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன சில விடயங்கள் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானவை. தமிழீழப் போராட்டம் மீது கவிந்த பயங்கரவாதம் என்ற நச்சுத் திரையை நிரந்தரமாய் நீக்கிவிடவும், தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிறுவியும் உதவக்கூடிய ஆலோசனைகள் முதலானதாகவும் மிக முக்கியமாகவும் அவர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டது, மேற்குலகம் இன்று ஒருவகையான குற்றப்பழி உணர்வில் நிற்கிறது. தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தல் பாவத்தில் தமக்கும் மறைமுக பங்கு உண்டு என நினைக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும் -குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என விரும்புகிறது. தயவுசெய்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் உங்கள் தமிழர்களோடு உங்களுக்கு தொடர்பிருந்தால் மேற்குலக நாடுகளின் இக்குற்றப்பழி உணர்வை கனப்படுத்தி தேசிய பாரமாக்கும் செயற்பாடுகளை தாமதமின்றி பெரிய அளவில் மேற்கொள்ளச் சொல்லுங்கள் - என்றனர்.
போருக்கெதிரான பத்திரிகையாளர்கள் இருபதுபேர் இணைந்து ஆக்கி நல்லேர் பதிப்பகம் வெளியிட்ட "ஈழம்-மௌனத்தின் வலி' புத்தகத்தை தற்செயலாக என் மேஜையில் கண்டு, புரட்டிப் பார்க்கலாமா என கேட்டனர். பின்னர் ஆயிரம் ரூபாய் கொடுத்து பத்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டனர். தமிழ் அவர்களுக்குப் புரியாது. ஆனால் அப்பதிவின் பின்புலத்தை எடுத்துச் சொன்னேன். அடுத்தநாள் தொடர்புகொண்டு கூறினார்கள்: இப்புத்தகம் போல் உலகத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களோடு ஆங்கிலத்தில் ஓர் ஆக்கம் செய்து உலகெங்கும் -குறிப்பாக மேற்குலக நாடுகளின் மக்களுக்கு வினியோகிக்கும்படி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்குச் சொல்லுங்கள் என சற்றேறக்குறைய மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். ஆம், உலக மனசாட்சியின் குற்ற உணர்வை பாரமுடையதாக்குங்கள். தமிழருக்கு அநீதி செய்துவிட்டோம் என ஒவ்வொரு நாடும் உணரச் செய்யுங்கள் -என்றனர்.அவ்வாறே தமிழர்கள் இந்நாட் களில் செய்யக்கூடாத சிலவற்றையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment