சிறிலங்கா அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத, மனிதஉரிமை ஆர்வலர் ஒருவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘சிறிலங்கா – சாட்சிகள் இல்லாத போர்’ [War Without Witness] என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அத்தளம் தெரிவித்துள்ளதாவது:
இராணுவப் புலனாய்வுத்துறையினரின் திட்டத்தின்படி முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாரிய முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படும்.
இந்தத் தாக்குதலுக்கு தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் சிலரைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்படும் போது அதை முறியடிப்பது என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவத்தினர், தடுப்பு முகாமில் உள்ள முன்னாள் போராளிகளையும், தாக்குதல் நடத்தியவர்களையும் கொலை செய்து விடுவர்.
முன்னாள் போராளிகளை மீட்கும் நோக்குடன் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலை தாம் முறியடித்த போதே, அனைத்து முன்னாள் போராளிகளும் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறி நியாயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசஅதிபர் தேர்தல் அடுத்த மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் இந்தப் படுகொலைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரிய படுகொலையாக அமையும் என்றும் அந்த மனித உரிமை ஆர்வலர் எச்சரித்துள்ளார்.
சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் பத்தாயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment