Sunday, December 6, 2009

விதி முறைகளை தளர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை: புழல் அகதி முகாமில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விதிமுறைகளை தளர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையை அடுத்த புழல் அகதிகள் முகாமில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா நடந்தது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு புழல் அகதிகள் முகாம்களில் உள்ள 440 குடும்பங்களுக்கு தமிழக அரசின் இலவச கலர் டி.வி.க்களையும், மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து நீண்டகாலமாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வகையில் தமிழக முதல்வர் கருணாநிதி ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு பலஉதவிகள் வழங்கப்பட்டுள்ளது.ரூ.100 கோடி ஒதுக்கீடுகுறிப்பாக ரூ.4 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரத்தில் வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளும், ரூ.1 கோடி மதிப்பில் இலவச காப்பீடு திட்டமும், மூவளூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டத்தில் 1,200 பெண்களுக்கு ரூ.2 கோடியே 40 லட்சம் ரூபாயும், விளையாட்டு சாதனங்களாக ரூ.4 லட்சத்து ஆயிரம் ரூபாயும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் ரூ.8 லட்சத்து 7 ஆயிரமும், குடியிருப்புகளை பழுது பார்க்க குடிநீர் வசதி, கழிவறை கட்ட, பழைய கழிவறைகளை புதுப்பிக்க, புதிய கால்வாய்களை அமைக்க, கால்வாய்களை பழுது பார்க்க, சாலைகளை அமைக்க, புதிய மின்கம்பங்கள் இணைப்புகள் அமைக்க ரூ.45 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரமும், கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.54 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரம் என ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசின் சார்பில் உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை உபகரணங்கள், 3 சக்கர சைக்கிள்கள் ஈமச்சடங்கு தொகை ரூ.2,500 ஆக உயர்த்தியுள்ளது, முகாம்களில் பணக்கொடை வழங்கும் போது இல்லாதவர்களுக்கு அவர்கள் வந்தவுடன் பணத்தொகை வழங்கும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஓட்டுனர் உரிமம்இதேபோல் ஓட்டுநர் உரிமம் வழங்க அனைத்து விதிமுறைகளையும் தளர்த்தி உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புழல் முகாமில் தற்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுநீர் அகற்றப்பட்டு விளையாட்டு மைதானங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 25 கழிவறைகளை சுத்தம் செய்து 4 கழிவறைகளுக்கு கதவுகள் போடப்பட்டுள்ளன. 440 குடும்பங்களுக்கு வண்ணத்தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு திருமண உதவிதொகையும், 2 பேருக்கு ஈமச்சடங்கு நிதியும், இங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சாதனை திட்டமான இலவச மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.21/2 லட்சத்தில் புதிய ரேஷன் கடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய குடியிருப்புகளை கட்ட ரூ.8 கோடி மதிப்பீடு செய்து அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு எப்போதும் துணையிருக்கும்.இவ்வாறு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிகுமார், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. இ.ஏ.பி.சிவாஜி, பொன்னேரி ஆர்.டி.ஓ.குமார், அம்பத்தூர் தாசில்தார் ராமச்சந்திரன், புழல் பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன், மாதவரம் நகரமன்றத்துணைத்தலைவர் எஸ்.சுதர்சனம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் து.திருநாவுக்கரசு மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment