தாய்லாந்தில் ஆயுதங்களுடன் வந்த சரக்கு விமானம் ஈரானுக்கு செல்லும் நோக்கில் பயணத்தில் ஈடுபடவில்லை. மாறாக, இலங்கை க்குத்தான் அந்த விமானம் சென்று கொண்டிருந்தது என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 12ம் தேதி பாங்காக் விமான நிலையத்தில் அந்த ஆயுதங்களுடன் கூடிய விமானம் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியது. அப்போது விமானத்தில் சோதனையிடப்பட்டது.
அந்த சோதனையின்போது வட கொரியத் தயாரிப்பு ஆயுதங்கள் விமானத்தில் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து விமானம் கிளம்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்இந்த விமானம் ஈரானுக்கு செல்லவிருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த விமானம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள ஐந்து ஊழியர்களுமே தாங்கள் இலங்கை செல்லும் திட்டத்தில்தான் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், பிரபல ஆயுத வியாபாரியான விக்டர் போட் என்பவருக்கு இந்த ஆயுத சப்ளையில் பங்கு இல்லை என்றும், போட்டை தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து ஐந்து ஊழியர்களின் வக்கீலான சோம்சாக் சைதோங் கூறுகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐவரையும் சந்தித்துப் பேசினேன். அப்போது தங்களுக்கு போட்டைத் தெரியாது என்று அவர்கள் தெளிவாகத் தெரிவித்தனர்.
மேலும், தாங்கள் இலங்கை செல்லுமாறே பணிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.இந்த ஐந்து பேரில் நான்கு பேர் கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பெலாரஸைச் சேர்ந்தவர்.இலங்கை செல்லும் வழியில் பாங்காக்கில் எரிபொருள் நிரப்பும் திட்டத்துடனேயே தாங்கள் தரையிறக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றனர்.இந்த விமானத்தை ஹாங்காங்கைச் சேர்ந்த யூனியன் டாப் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் வாடகைக்கு அமர்த்தியுள்ளது.
வட கொரியாவின் பியான்யாங்கிலிருந்து டெஹ்ரானுக்கு எண்ணை தொழிற்சாலைகலுக்கான உதிரி பாகங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக கூறி ஹாங்காங் நிறுவனம் இந்த விமானத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.வழியில் அஜர்பைஜான், உக்ரைன் ஆகிய நாடுகளில் இந்த விமானம் தரையிறங்கியுள்ளது. எனவே இந்த விமானத்தின் போக்கு குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.முன்னதாக இந்த விமானம் குறித்து அமெரிக்கா, தாய்லாந்து அதிகாரிகளை உஷார்படுத்தியது. இதையடுத்தே விமானத்தில் ரெய்டு நடத்தப்பட்டு விமானம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.விமானத்தில் மொத்தம் 35 டன் ஆயுதங்கள் உள்ளன. ராக்கெட் கிரானைடுகள், தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவை இதில் உள்ளன.விமான ஊழியர்கள் வைத்துள்ள ஆவணங்களில் இலங்கையில் உள்ள எண்ணை துரப்பண நிறுவனத்திற்கான உதிரி பாகங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் உள்ள ஆயுதங்களை உண்மையில் எந்த நாடு வாங்கியுள்ளது. இலங்கையா அல்லது ஈரானா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இலங்கைதான் இந்த ஆயுதங்களை வட கொரியாவிடமிருந்து ரகசியமாக வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.அமெரிக்காவின் கழுகுப் பார்வை தங்கள் மீது முழுமையாக நிலை கொண்டிருப்பதால், வெளியில் ஆயுதங்கள் இனி தேவையில்லை என்று கூறிக் கொண்டு ரகசியமாக இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாக ஒரு சந்தேகம் உலவுகிறது.
No comments:
Post a Comment