ஐந்தாவது நிமிடம் வண்டி மருத்துவமனையை அடைய, மூடப்பட்ட கண்ணாடி கதவுகளுக்கு மறுபுறம் கண்ணைக் கசக்கியபடி வந்த மருத்துவர் கதவுகளைத் திறக்க, பிரசவ பெண்ணை கையில் சுமந்தபடி நிலைமையை விவரிக்கிறார் சீருடை மனிதர். பரபரப்பை புரிந்து கொண்ட மருத்துவர் மள மளவென பிரசவம் பார்க்க "க்குவா க்குவா' அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. ஐந்து நிமிடம் தாமதித்திருந்தாலும் இருவர் உயிரையும் காப்பாற்றியிருக்க முடியாது . "குட் ஜாப் மை டியர் பாய்' மருத்துவர் சீருடை மனிதரின் முதுகை தட்டிக் கொடுக்க, அவர் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். தக்க சமயத்தில் இராணுவ வேகத்தில் மலை ஜாதிப்பெண்ணை காப்பாற்றிய அந்த சீருடை மனிதர் -"பொன்னம்மான்'. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். 1983 இலங்கை ஜூலை படுகொலைக் குப் பின் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவோடு இயக்கத்தினர் 1984-ல் பயிற்சிக்கு வந்த இடம் மேட்டூர் கொளத்தூர் கும்பாரப்பட்டி மலைக்கிராமம்.
பயிற்சிக்கு வந்தாலும் மக்களோடு மக்களாக இணைந்து கிராமத்து சனங்களின் இன்ப -துன்பங்களில் இயக்கத்தினர் பங்கெடுத்த வாழ்க்கை முறையில் நெஞ்சுருகி போன கிராமத்தினர் கும்பாரப்பட்டி என்ற கிராமத்துப் பெயரையே புலியூர் என மாற்றி கடந்த 20 வருடமாக "மாவீரர் நாள்' நிகழ்வையும் நடத்தி அவர்களை நினைத்துப் பார்த்து வரு கின்றனர். இவ்விஷயமறிந்து நவம்பர்-27 மாவீரர் நாளன்றே மதிய நேரத்தில் கொளத்தூர் கும்பாரப்பட்டி மன்னிக்கணும் "புலியூருக்கு' பயணமானோம். தோரணை, தமிழீழ ஆதரவு சுவரொட்டி பிரபாகரன் பேனர்கள் என ஊரே பண்டிகை களை கட்டியிருக்க, "தமிழா தமிழா ஒன்றுபடும் தருணம் இதுதான் ஒன்றுபடு' என ஒலிபெருக்கியில் முழங்கிய இனவுணர்வு பாடல் முறுக்கியபடி நம்மை வரவேற்றது. "பொன்னம்மான்' நினைவு மண்டபம் அருகே பெரியவர் கள், பெண்கள், குழந்தைகள் குழுமியிருக்க. "அய்யா இங்க விடுதலைப்புலிகள் பயிற்சி செய்த இடத்திற்கு போகணும்' எனும்போதே... ""ஓ பொடியன்ங்க மண்ணை பார்க்கணுமா? யெலேய் முத்துசாமி, ராமசாமி நீங்களே கூட்டிப்போய் தம்பிக்கு எடத்தை காட்டுங்க'' என கூட்டு முழக்கமிட, அவர்களோடு பயிற்சி இடத்திற்கு நடந்தோம். 2 கி.மீ. மலைப்பாதையில் நடந்த பின் அகன்று விரிந்த 40 ஏக்கர் சமவெளி. ஆங்காங்கே பெரிய பெரிய தொட்டிகள் கட்டப்பட்டும், சில உடைந்தும் காணப்பட் டன. மறுபக்கம் பெரியளவில் சுவர்கள் 100 அடி இடைவெளியில் எதிரெதிராக கட்டப் பட்டு இருக்க, ஒரு சுவரில் கோலிகுண்டு அளவில் அய்ந்தாறு ஓட்டைகள். நெருங்கிப் பார்த்த நம்மை ""என்ன தம்பி பாக்குறீங்க? அதெல்லாம் புலிகள் துப்பாக்கி பயிற்சி செய்யும்போது சுடப்பட்ட குண்டுகள்'' என்ற ராமசாமி அய்யா, ""இந்த சுவர்கள் தடுப்பரண்கள் அந்த பக்க சுவரிலிருந்து இங்கு சுட்டு பயிற்சி எடுப்பாங்க.
அப்புறம் சுவர் மேல கட்டையால செஞ்ச மனுஷ பொம்மைகளை செஞ்சு மாட்டி இதயப்பகுதியை குறிபார்த்து சுட்டு பயிற்சி எடுப்பாங்க. நாங்கள்லாம் அப்போ வாலிப பட்டாளங்கள், தூரத்தில இருந்து வேடிக்கை பார்ப்போம். ஜெய்சங்கர் படம் பாக்குற மாதிரியிருக்கும்... ஹ்ம் அது ஒரு காலம்... ஆழப் பெருமூச்சுவிட ""1984 சனவரியில இங்க மொதல்ல 140 பேருங்க வந்தாங்க. ஒல்லியா ஆனா உயரமா மிடுக்கா ஒருத்தர் 140 பேருக்கும் கடும் பயிற்சி கொடுப்பாரு. அவர்தான் பொன்னம்மான். அப்போ எங்க ஊருக்கே அவர்தான் ஹீரோ'' என்றபடியே நினைவலைகளை விட்ட முத்துசாமி அய்யா, ""அவர்தான் அந்த டீம் லீடர். முதல் பயிற்சியாளர். காலையில 5 மணிக்கெல்லாம் பொடியன்களை எழுப்பி விட்டுடுவார்.
"இப்பதான் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்'னு மூச்சு பயிற்சி தருவார். அப்புறம் க்ரௌண்ட் எக்ஸசைஸ். சரியா 9 மணிக்கு காலை உணவு. பின் 10 மணிக்கு பயிற்சி. கயிறு ஏறுதல், ஓடுதல், மல்யுத்தம்னு பயிற்சி நடக்கும். மதியம் 1 மணிக்கு சாப்பாடு நேரம். 3 மணி வரை ரெஸ்ட். அந்த நேரத்திலதான் குளிப்பாங்க. பின் 3-லிருந்து 5 வரை அரசியல் வகுப்பு. வெறும் துப்பாக்கி மட்டும் வச்சுக்கிட்டு விடுதலை வாங்கிட முடியாது. அரசியல் இல்லாம எந்த தேச விடுதலை யும் சாத்தியமில்லை. "அரசியலும் ஆயுதமும் தேச விடுதலையின் இரு கண்கள்'னு பொன்னம்மான் அரசியல் வகுப்பெடுப்பாரு. பின்பு 5 டூ 6 ஓய்வு. அந்த நேரத்தில துணி துவைப்பாங்க. பின்பு அதோ மேற்கால தெரியுதே அந்த மலை அங்க போயி சுள்ளி, விறகு பொறுக் கிட்டு வந்து சமையல் செய்து சரியா 8 மணிக்கு சாப்பிடுவாங்க.
இந்த டைம் டேபிள்ல ஒரு நிமிடம்கூட குறையவோ, கூடவோ செய்யாது. எல்லாம் துல்லியமா நடக்கும். அந்தளவு இராணுவ தன்மை யோடு மிடுக்கா இருக்கும். பொன்னம்மான் மிக கண்டிப்பானவர்'' எனும்போதே "அது பயிற்சியின்போதுதான் மற்ற நேரங்களில் அவரைப் போல மெல்லிய உணர்வுள்ளவரை பார்க்க முடியாது' என இடைமறித்த ராமசாமி அய்யா, ""ரொம்ப அன்பானவர் அவர். எங்க கிராமத்து சனங்களோட நெருங்கி தாயா புள்ளையா பழகுவாரு. இங்க பல சாதியினர்கள் இருந்தாலும் நாமெல்லாம் தமிழர்கள். நமக்குள் சாதியே கிடையாது. ஆரிய சதி அது என சொல்லிக் கொடுத்து ஒற்றுமையை வளர்த்தாரு. இப்பவே இது காடுன்னா அப்போ எப்படி இருக்கும்? ரோடு இருக்காது. மின்சார வசதியிருக்காது. ஆனாலும் எந்த நேரத்தில் எந்த பிரச்சனைனாலும் உடனே ஓடோடி வந்துடுவாங்க. அவங்ககிட்ட ஒரேயொரு ஜிப்ஸி ஜீப் இருக்கும். அதுதான் பலநேரம் எங்களுக்கு ஆம்புலன்ஸ். இங்க இப்ப வாலிபர்களாக, இளைஞர்களாக பலர் நம்மோடு இருக்காங்கன்னா அதுக்குக் காரணம் பொடியன்கள்தான். யாருக்கு பிரசவமென்றாலும் ஜிப்ஸியில தூக்கிப் போட்டுக்கிட்டு 18 கி.மீ. தள்ளி இருக்கிற மேட்டூர் மருத்துவமனைக்கு பறந்துடுவாங்க. கடைசி கடைசியா என் கல்யாணத்தை அவங்கதான் நடத்திவச்சு 400 பொடியன்ங்க வந்து சாப்பிட்டுட்டு போனாங்க'' என்க...
""400 பேரா?'' என்றோம். ""ஆமாம் தம்பி மொதல் செட்டுல 140 பேர்கள். அடுத்த செட்டு 200 பேர்கள். அப்புறம் புலவேந்திரன் மாஸ்டர் தலைமையில் 400 பேர்கள் என 1000 பேர்களுக்கு மேல 1989 வரை பயிற்சிக்கு வந்தாங்க. எங்கள அப்படி பாதுகாத்தாங்க. அவங்கள்லாம் இப்ப உசுரோட இருக்காங்களா இல்லையானு தெரியாது. ஆனா எங்க சனங்கள பொறுத்தவரை எல்லைசாமிகளா இருந்தாங்க'' -மேற்கொண்டு பேச முடியாமல் நா தழுதழுக்க... ""ஆமாங்க தம்பி தலைமையே எளிமையின் அடையாளமா இருக்கும்போது பொடியன்கள் இல்லாமலா இருப்பார்கள்'' என்றபடியே நாம் வந்திருப்பது அறிந்து ஆஜராயினர் அவ்வூர் பெரியவர்கள் குட்டபாலனும், மாதுவும். "தலைமையா?' நாம் இழுத்தோம். ""ஆமாங்க தம்பி, தலைவர் பிரபாகரனைத்தான் சொல்றோம்'' என்றவர்கள்... ""ஒவ்வொரு பயிற்சி முடியும்போதும் "தம்பி' வந்துதான் அவங்கள நாட்டுக்கு (ஈழம்) அனுப்பி வைப்பாரு. 1983, ஜூலை படுகொலை ஒவ்வொரு தமிழனின் மனதிற்குள்ளும் கடும்பாதிப்பை ஏற்படுத்தி போராளியாக மாற்றி வந்த நேரம் அப்பொழுதும் "நமது ஆயுதங்கள் எப்பொழுதும் எதிரியின் மீதுதான் இருக்க வேண்டுமே தவிர மக்கள் மீது திரும்பக் கூடாது' என யுத்த கல்வி கொடுத்து அனுப்புவார் "தம்பி'. கேம்ப் முடிந்து போகும் கடைசிநாள் ஆடல், பாடல் என களைகட்டும். ஆடு, கோழி வெட்டி தடபுடலாக விருந்து தரப்படும். "தம்பி'தான் தருவார். ஊர் சனங்களையும் "தம்பி' எங்க விழாவில இணைச்சுக்குவாரு. ரொம்ப எளிமையானவரு.
சாப்பாடு போடும்போது எல்லோரும் போல "தம்பியும்' வரிசையில நின்னுதான் வாங்குவாரு. தன்னோட துணிகளை மட்டுமல்ல, சக பயிற்சியாளர்கள் துணிகளையும் துவைச்சு போடுவாரு. எனும்போதே குட்டபாலன் கண்ணில் நீர் ததும்ப ஆறுதல்படுத்திய மாது ""எங்க கிராம மக்களோட நெருங்கிப் பழகி எங்க பிள்ளைகளுக்கு கல்வி கத்து தருவாங்க. ஓய்வு நேரத்தில் எங்களோட வந்து விவசாயம் பாப்பாங்க. ஒருமுறை மலையில ஆடு மேச்சுகிட்டு இருந்த ஒரு பையனை பாம்பு கடிக்கவும் முதலுதவி செஞ்சு கையால ஆஸ்பத்திரி தூக்கிட்டு போயி உசுர காப்பாத்தினாங்க. இப்படி பல சம்பவம். அதனாலதான் புலவேந்திரன் மாஸ்டர், லூகேஸ் மாஸ்டர், ரோகி மாஸ்டர் திரும்பும்போது ஊரே அழுதது. நாட்டுக்கு திரும்பிய பொன்னம்மான் ஒரு வெடி விபத்துல இறந்தது தெரிஞ்சு இங்க கொளத்தூருல நாங்க 5000 பேர்களுக்கு மேல திரண்டு அழுதுகிட்டே வீரவணக்கம் செஞ்சோம். எங்க ஊரே துக்கமா இருந்தது. அவர் நினைவாதான் இங்க பொன்னம் மான் நினைவு மண்டபம் கட்டி மாவீரர்கள் தினமான நவ. 27-ல் கடந்த 20 வருஷமா வீரவணக்க நிகழ்வை பல எதிர்ப்புகளுக்கு மீறி நடத்தி வர்றோம். மேலும் அவங்களோட நினைவா இங்க பலருக்கு மில்லர், சங்கர், மாலதி, அங்கயர்கண்ணினு பேர் வச்சிருக்கோம். நவ.-27 அன்றே எங்க பையன்களும் பிறந்ததால தம்பி பிரபாகரன்னு பேர் வச்சிருக்கோம்'' என்றனர் குட்டபாலனும் மாதுவும். அதற்குள் மாலையாகிவிட, அவசர அவசரமாக பொன்னம்மான் நினைவு மண்டபம் திரும்பினோம். பெரியவர்கள், சிறுவர்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் திரண்டிருக்க... சரியாக 6.05 மணிக்கு கையில் மெழுகு வர்த்தியுடன் ஊர்மக்கள் வரிசையில் நின்று வீரவணக்கம் செலுத்தினர். பெ.தி.க.வினர் வழிநடத்த மெழுகுவர்த்தி வைத்துவிட்டு திரும்பிய குழந்தைகளிடம் ""குட்டிகளா எதற்காக இந்த நிகழ்வு?'' என்றோம்.
"ஏழைங்களுக்காக, தமிழர்களுக்காக, இறந்துபோன மாமாக்களை நெனச்சு இப்படி செய்றோம்' என சிந்தனை தெளிவோட பேசிய அச்சிறார்களிடம் "பிரபாகரன் இல்லைன்னு சிலபேர் சொல்றாங்களே அவருக்கும் சேர்த்துதான் இப்படி வீரவணக்கம் செய்றீங்களா?' என்றோம்.
"இல்லை இல்லை இந்த காட்டைவிட பயங்கரமா ஒரு காடு அங்க இலங்கையில இருக்காம். அங்கதான் தம்பி மாமா (பிரபாகரன்) மறைஞ்சிருக்காராம். சீக்கிரம் வருவாராம். எங்க தாத்தாங்களாம் சொன்னாங்க' என்றனர் மழலை மொழியில். அதை ரசித்தபடியே திரும்பிய நம் காதுகளில் "விழ விழ எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்' என்ற பாடல் ஒலித்தபடியே இருந்தது.
No comments:
Post a Comment