பேரழிவும் அவநம்பிக்கைகளுமாய் சிதைந்து கிடக்கும் ஈழத்தமிழ் மக்களின் இன்றைய துயர்களை பரந்துபட்ட பொதுமக்கள் வெளிக்கு அன்பு நேயத்தோடு எடுத்துச் சொல்லும் மிக முக்கியமான, தனித்துவமான முயற்சியாய் ''ஈழம்: மௌனத்தின் வலி'' என்ற புத்தகம், சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் மே 16, 17, 18 நாட்களில் நடந்த தமிழர் இன அழித்தல் கொடுமைகளின் நெஞ்சடைக்கும் காட்சிகளை புகைப்படமாய் கண்டு நூறு புகழ்பெற்ற மனிதர்கள் இப்புத்தகத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்கள். மனிதம் பட்டுப்போகவில்லையென்ற அறிவித்தலாகவும், மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையாகவும் இப்பதிவுகள் அமைந்துள்ளன. பத்திரிகையாளர்கள் அருந்ததி ராய், அனிதா பிரதாப், நக்கீரன் கோபால், ஆன்மீகப் பெரியோர்களான சத்குரு ஜக்கி வாசுதேவ், பேராயர் சின்னப்பா, திரையுலகின் கமல்ஹாசன், சூர்யா, பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ், சத்யராஜ், சீமான், சேரன், அமீர், பாலாஜி சக்தவேல், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின், கே.வி.ஆனந்த், லிங்குசாமி, ராதா மோகன், கவிஞர்கள் வைரமுத்து, இன்குலாப், அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், பா.விஜய், தபு சங்கர், யுகபாரதி, கலாப்ரியா, கல்யாண்ஜி, ஈரோடு தமிழன்பன், கல்வியாளர்கள் அனந்தகிருஷ்ணன், வசந்தி தேவி என சமூகத்தில் பெயரும் புகழும் பெற்று விளங்கும் நூறுபேர் ஆசிரியர்களாக இருந்து ஆக்கியுள்ள புத்தகம் இது.'போருக்கு எதிரான பத்திரிகையாளர்' என்ற அமைப்பின் இருபது பத்திரிகையாளர்கள், நூறு பேரையும் தொடர்புகொண்டது முதல் புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்ததுவரை முழுப்பணியினையும் உள்ளார்ந்த மனிதநேயப் பிடிப்பிலும் ஆழ்ந்த தமிழுணர்விலும் நின்று செய்துள்ளார்கள். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகம் ஆக்கிய நூறு பேரில் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment