குருஷேத்திர யுத்தத்தில் சீறி வந்த அம்புகளைப்போல வருகின்றன ஸ்பெக்ட் ரம் கணைகள். சளைக்காமல் எதிர் கொண்டு வருகிறார் மத்திய அமைச்சர் ஆ.ராசா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லையென்பதை விளக்கி, புகார்க் கணைகளை கேடயத்தில் தடுப்பதுபோல தடுத்து, முனை மழுங்கச் செய்துவந்த ஆ.ராசா இப்போது பா.ஜ.க. ஆட்சியில்தான் ஊழல் என்று பதில் கணைகளையும் ஏவத் தொடங்கிவிட்டார். விறுவிறுப்படைந்திருக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. நடவடிக்கைக் குப்பின் ஆ.ராசா அளிக்கும் விரிவான முதல் பேட்டி...
உங்களை நோக்கியே உதைக்கப்பட்டு வந்த பந்தை, பா.ஜ.க பக்கம் உதைத்துத் தள்ளி யிருக்கிறீர்களே... இந்த புதிய வியூகத்தின் பின்னணி என்ன?
ஆ.ராசா : பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி சுமத்துகின்ற குற்றச்சாட்டு என்னவென்றால் 2001-ல் என்ன விலைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டதோ அதே விலைக்கு இப்போதும் நிர்ணயித்திருக் கிறார்கள். அதன் மீது அலைவரிசை ஒதுக் கீடு நடந்ததன் மூலம் அரசுக்கு 60 ஆயி ரம்கோடி ரூபாய் அளவுக்கு நட்டம் என்கிறார். இதற்கு நான் பலமுறை பதில் சொல்லி யிருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருவதால் இதற்குள் நான் விரிவாகப் போகமுடியாது. ஆனால், ஒன்றை மீண்டும் வலியுறுத்திச் சொல் கிறேன். 2001-ம் ஆண்டு ட்ராய் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக்கட்டணம், அதே ட்ராய் நிறுவனத்தால்தான் மறுபரிசீலனையோ மறுமதிப்பீடோ செய்யப்படவேண்டும். 2007-ம் ஆண்டு புதிய பரிந்துரைகளை வழங்கிய ட்ராய் நிறுவனம், அதனுடைய பரிந்துரைகளை 2001-ம் ஆண்டு கட்டணத்தை உயர்த்தப் பரிந்துரைக்க வில்லை. எனவேதான், அதற்குப்பின்னிட்டு பிரமோத்மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் ஆகிய எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் இதே நுழைவுக் கட்டணத்தில்தான் தொடர்ந்து உரிமங்களை வழங்கி வந்தனர். அருண்ஜெட்லியைப் பொறுத்தவரை, அவருடைய அரசியல் மூளையும் சட்ட மூளையும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், இதே அருண்ஜெட்லிதான் புதிய உரிமங்கள் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் புதிதாக உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றின் சார்பில் வழக்கறிஞராக ஆஜராகி, அரசு கடைப்பிடித்த நெறிமுறைகள்- விதிமுறைகளின்படி வழங்கப்பட்ட உரிமத்தை தனது ஆணித்தரமான வாதத்தால் நிலைநிறுத்தி, சென்ற ஆண்டில் வெற்றியும் பெற்றிருக் கிறார். அதே அருண்ஜெட்லி இப்போது உரிமம் வழங்குவது முறைகேடு என்றால் அருண் ஜெட்லியினுடைய சட்ட அறிவுக்கும் அரசியல் அறிவுக்கும் நடக்கிற மோதலால் ஏற்படும் காயங்களுக்கு நான் வைத்தியம் பார்க்க முடியாது.
பா.ஜ.க தரப்பில் இதை அரசியலாக்குவதாகச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் நீங்களும் பா.ஜ.க ஆட்சியில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அரசியலாக்குகிறீர்களே?
ஆ.ராசா : உங்கள் கேள்வியின் சாரத்திற்கு வருகிறேன். சுமார் 350 MHz (மெகாஹெட்ஸ்) அளவுக்கான அலைக்கற்றை என்னுடைய காலத்தில் புதிய உரிமதாரர்களுக்கு, போட்டியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ட்ராய் நிறுவனத்தின் பரிந்துரையுடனும், பிரதமரின் ஆலோசனையுடனும் இந்தியாவினுடைய தலைமை வழக்கறிஞரின் சட்ட ஒப்புதலுடனும் நான் வழங்கியதால், அருண்ஜெட்லி குறிப் பிடுவதைப்போலஅரசுக்கு 60ஆயிரம் கோடி ரூபாய் இழப்பென்றால், எந்த நெறிமுறைகளையும் பின்பற்றாமல் , அமைச்சர் என்கிற அதிகார வரம்பில் மட்டுமே முடிவுகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் 250 MHz அலைவரிசையை தனியார் நிறுவனங்களுக்கு அள்ளித் தந்திருக்கிறார்கள் பா.ஜ.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜனும் அருண் ஷோரியும். இதனால் அரசுக்கு ஏற்பட்டிருக்கின்ற இழப்பு எவ்வளவு என்றுதான் நான் கேட்கிறேன். நக்கீரன் : 250 MHz எந்த முறையில் பா.ஜ.க ஆட்சியில் வழங்கப்பட்டது என்பதையும் அதனால் ஏற்பட்ட இழப்பையும் விரிவாக விளக்க முடியுமா? ஆ.ராசா : உரிமம் பெற்ற ஒரு நிறுவனம் தன்னுடைய சேவையைத் தொடங்குவதற்கு 4.4 MHz் அலைவரிசைதான் அடிப்படையில் வழங்கப் படவேண்டிய அலைவரிசை அளவாகும். 4.4 MHzமேல் எத்தனை அலைவரிசை வழங்கினாலும் அது, அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கூடுதல் ஸ்பெக்ட்ரமாகும். இந்தக் கூடுதல் ஸ்பெக்ட்ரமை வழங்குவது குறித்து, அப்போது அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் எந்த கூடுதல் கட்ட ணமும் வசூலிக்காமல் தனியார் நிறுவனங் களுக்கு 6.2 MHz வரையும் அதற்குப் பின்பு 8 MHz், 10 MHz வரையிலும் வழங்கியிருக்கிறார். இதே முறையில்தான் அருண்ஷோரியும் வழங்கினார். தங்களது பிதுரார்ஜித சொத்தைப் போல அலைக் கற்றையை எடுத்து, கோடிகோடியாக இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கிற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியவர்கள்தான் இவர்கள்.தங்கள் சொந்த சொத்தாக அலைக் கற்றையைப் பாவித் தவர்கள் தான், விதிமுறைகளைக் கடைப்பிடித்து, ஸ்பெக்ட்ரம் இருப்பை முதலில் கண்டுபிடித்து புதிய நிறுவனங்களுக்கு வழங்கி ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தி அதனால் செல்போன் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கட்டணக் குறைப்புக்கு வழி வகுத்த, என்னுடைய செயலைக் குற்றம் சாட்டுகிறார்கள். இதுமட்டுமல்ல, அருண்ஷோரி அமைச்ச ராக இருந்தபோதுதான், தனியார் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்திவந்த, ஸ்பெக்ட்ரம் கட்டணத்தில் (ரெவின்யூ ஷேர்) 2% குறைத்து ஆண்டொன்றுக்கு சுமார் 900 கோடி ரூபாயை ரத்து செய்திருக்கிறார். அதேபோல 900 MHz பேண்டு என்று சொல்லப்படும் தொகுப்பிலிருந்து கூடுதல் அலைவரிசையை எந்த நிறுவனத்திற்கும் வழங்கக்கூடாது என்பது 2002 பிப்ரவரியில் அன்றைய அரசு எடுத்த முடிவு. இந்த முடிவை மீறி தனியார் நிறுவனங்களுக்கு அவற்றின் இலாபத்தை அதிகரிப்பதற்காக இந்த 900 MHz அலைவரிசையை வழங்கிய ஆட்சிதான் இவர்களின் ஆட்சி. இதனால் பயன்பெற்ற தனியார் நிறுவனங்கள் எவை? அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? இவற்றையெல்லாம் கேட்டுத் தான் நான் தோராயமாக 1 லட்சத்து 60 ஆயிரம் என்று குறிப்பிட்டேன்.
பா.ஜ.க ஆட்சியின் ஊழல்கள் பற்றி இப்போது சொல்வது ஏன் என்று கேட்கிறாரே விஜயகாந்த்?
ஆ.ராசா : இதுவரை நான் எடுத்த முடிவுகளில் தவறு இருப்பதாகவும் பிரதமரோடு கலந்து பேசி எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வந்த எதிர்க்கட்சிகள் இப்போது ஐம்பதாயிரம் கோடி என்றும், அறுபதாயிரம் கோடி என்றும், இந்தியாவிலேயே நடந்த மிகப்பெரிய ஊழல் என்றும் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இயற்கையாக என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ஒவ்வொரு அமைச்சர்கள் இருந்த காலத்திலும் எப்படி அலைக்கற்றை வழங்கப்பட்டது , எவ்விதம் வழங்கியிருக் கிறார்கள் என்று கோப்புகளை நான் ஆய்வு செய்தபோது, இந்த அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது. அவர்கள் போட்ட ஒவ்வொரு உத்தரவையும் எடுத்துப் படிக்கிறபோதுதான் தொலைத்தொடர்புத்துறையை ஏதோ தங்கள் கைவசப் பட்ட கம்பெனியின் கணக்கு எழுதுவதுபோல, இவர்கள் விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. எனவே, எப்போது சொல்கிறேன் என்பது முக்கியமல்ல. சொல்லப்படுவதில் உண்மையும் சாரமும் இருக்கிறதா என பார்ப்பதுதான் ஒரு நாணயமான நல்ல அரசியல்வாதியின் அடையாளம். அந்த அடையாளத்தை நான் விஜயகாந்த்திடம் தேடினால் என் அறிவின் மீது உங்களுக்கு சந்தேகம் வரும். அவர் தன்னுடைய அறிக்கையில் தொலைத்தொடர்புத்துறை செயலாளராக இருந்த டி.எஸ்.மாத்தூர் இந்த உரிமம் வழங்குவதற்கு கையெழுத்துப் போட மறுத்துவிட்டதாகவும் அவர் ஓய்வு பெற்ற பிறகுதான் உரிமங்கள் வழங்கப்பட்டன என்றும் கூறியிருக்கிறார். உரிமம் வழங்குவது உட்பட எல்லா கொள்கை முடிவுகளுக்கும் கையெழுத்திட்டிருப்பவரே மாத்தூர்தான். அவரை அடுத்து வந்த செயலாளர் இதை செயல்படுத்தினார். இந்த உண்மைகள் தெரியாமல் ஊடகங்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் எழுதி தரப்படும் அறிக்கைகளை வெளியிடுகிறார் விஜயகாந்த். பாவம்... அவரை விட்டுவிடுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் எதிர்க்கட்சிகளும் மீடியாக்களும் தொடர்ந்து உங்களை குறி வைக்கும்போது பொது மக்களிடமும் தாக்கத்தை உண்டாக்குகிறதே?
ஆ.ராசா : எதிர்க்கட்சிகள் செய்வது அரசியல். மீடியாக்கள் செயல்படுவதற்கு இரண்டு காரணங்கள். 1. பத்திரிகையாளர்கள் தவறாக நினைக்கக்கூடாது. செய்தி சேகரிப்பாளர்களுக்கும் கட்டுரை எழுதுபவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்பதும் தொலைத்தொடர்பு உரிமம் என்பது எந்த வடிவில் வழங்கப்படுகிறது-அதிலுள்ள பரிந்துரைகள் என்ன ஆகியவை குறித்து போதுமான தகவலும் இல்லை. புரிதலும் இல்லை. ஓராண்டுக்கும் மேலாக எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் 2001-ம் ஆண்டில் நிர்ணயிக் கப்பட்ட கட்டணத்தை ஏன் மாற்ற வில்லை என்றும், முதலில் வந்தவர் களுக்கு முதலில் அனுமதி அளிப் பது சரியா, அலைக் கற்றையை ஏன் ஏலம் விடவில்லை போன்ற கேள்விகள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு, அவற்றிற்குத் திரும்பத் திரும்ப பதில் சொல்லி சலித்தும் களைத்தும் போய்விட் டேன். பார்வையில்லாத சிலர் யானையைப் பார்த்து அவர்களாகவே உருவகப்படுத் திக்கொள்வது போல இது குறித்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. காரணம் 2. இந்தத் துறையில் யார் அமைச்சராக இருந்தாலும் ஒரு முக்கிய முடிவு எடுக்கும்போது அதனால், கோடிகோடியாக இலாபம் ஈட்டுகின்ற சில நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதும், சில நிறுவனங்களுக்கு அனுகூலமாக அமைவதும் இயற்கையான ஒன்று. தங்களுடைய வியாபார தொழில் மேலாதிக்கத்திற்கு இழப்பு வரும்போது அவர்கள் அந்த முடிவுக்கு எதிராகத் திரும்பத்தான் செய்வார்கள். அவர்கள் கையில் இருக்கின்ற செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும்கூட, அவர்களின் குரலாகத்தான் ஒலிக்குமே தவிர, உண்மை பேசும் என எதிர்பார்க்க முடியாது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனைப்படிதான் செயல்பட்ட தாகத் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள். இது குறித்து பிரதமருக்கு நீங்கள் எழுதிய கடிதத்தினை பெற்றுக்கொண்டதற்கான அக்னாலட்ஜ்மென்ட் மட்டுமே பிரதமர் வழங்கியதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு பிரதமர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்படுகின்றனவே?
ஆ.ராசா : பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை யென்றால் அந்த கடிதத்திலேயே கருத்தாக, இம்முடிவு களை நிறுத்தி வையுங்கள் என்று ஒரு வரியில் தெரிவித்திருப்பாரே! ஒப்புதல் வழங்கவில்லை என்று பிரதமர் இதுவரை மறுக்கவில்லை என்பதையும் செய்தி வெளியிடு பவர்கள் மறந்துவிடக்கூடாது.
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், உங்களை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறாரே?
ஆ.ராசா : ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு, டான்சி நில வழக்கு, தர்மபுரியில் வேளாண் மாணவிகள் எரிக்கப் பட்ட வழக்கு உள்பட பல வழக்குகளில் நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளானவர் ஜெயலலிதா. உயர்நீதி மன்ற நீதிபதி சீனிவாசன் அவர்கள், "நாடொறும் நாடிமுறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்' என்ற வள்ளுவரின் குறளைச் சொல்லி ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதை மறக்க முடியாது. நிறைந்த நீதிமன்றத்தில் தான் போட்ட கையெழுத்தை தன்னுடையது இல்லை என்று சொன்ன நாணயப் புத்திகொண்ட டான்சி, கொடநாடு, சிறுதாவூர் புகழ் ஜெயலலிதாவுக்கு தொலைத்தொடர்பில் கிராமப்புறங்களுக்கு அதிக சேவையும் நுகர்வோருக்கு கட்டணக்குறைப்பும் வழங்க வேண்டும் என்றும் எடுக் கப்பட்ட நல்ல முடிவுகளைப் பற்றிப் பேசுவதற்கும், என்னைப் பதவி விலகச் சொல்வதற்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?
No comments:
Post a Comment