Friday, November 13, 2009

தலைமை நீதிபதி தினகரனுக்கு ஆதரவும்...!

கர்நாடக உயர்நீதி மன்றம் ஒரு போர்க்களம் போல நவம்பர் 9-ந் தேதி மாறியது. தலைமை நீதிபதி பி.டி.தினகரனுக்கு எதிராக கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களின் ஒரு தரப்பு, கோர்ட் ஹாலுக்குள் நுழைந்து பணிகள் நடக்கவிடாமல் தடுக்க, இதுகுறித்து கேள்வி கேட்ட சக வழக்கறிஞர்களுக்கு சரமாரியாக அடி விழுந்தது. தலைமை நீதிபதி உட்படபெண்நிருபர், டி.வி. கேமராமேன் என ஊடகக்காரர்களும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை.உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான நீதிபதி தினகரன் மீது நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்ததையடுத்து, அவரது பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சக நீதிபதிகளும் அடங்கிய கொலீஜியத்தில் இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக வழக்கறிஞர்கள் போராட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் சி.பி.எம்மின் நிலமீட்பு போராட்டம் என நிலைமை தீவிரமாகியுள்ளது.தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் நீதிபதி தினகரன், ""எனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி நியமித்துள்ள குழு முன் உள்ளது. அந்த குழு முன் என் மீதுள்ள புகாரில் உண்மையில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன்.அந்த நிலமெல்லாம் அனாதீன நிலம். புகார் பற்றி அந்த குழுதான் முடிவெடுக்கணும். அதேநேரத்தில், நீதிமன்றப் பணிகளை மேற்கொள்வது அரசியல் சட்டம் எனக்களித்துள்ள கடமை. அதைத்தான் நான் மேற்கொள்கிறேன்.வழக்கறிஞர்களே எனது பாதுகாப்புக்கு வராவிட்டால் நான் எங்கே செல்வது? நான் என்ன பாவம் செய்தேன்'' என தன் பக்க நியாயத்தை முன் வைக்கிறார்.நீதிபதியை சுழன்றடிக்கும் புகார்ப் புயல் குறித்த விவரங்களை அறிவதற்காக, அவரது நிலங்கள் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரத்திற்கு நேரில் சென்றோம். தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஏகாம்பரம், ""ஜட்ஜ் எங்க தலித் சமூகத்தவர்தான். ஆனா, எங்களை அடிமையா வச்சிருந்த நாயுடு- கொண்டா ரெட்டி சமுதாயத்தினர்தான் அவ ருக்கு நண்பர்கள். எங்க ஊர்த் தலைவரா இருந்த சென்சய நாயுடு, சுப்ராயலு நாயுடு இவங்கதான் ஜட்ஜூக்கு நிலம் வாங்கிக் கொடுத்தாங்க. அந்த நிலத்துக்கு பக்கத்திலே உள்ள ஏரிகளில்தான் எங்க தலித் மக்கள் ஆடு,மாடு மேய்ப்பாங்க. அதுக்குப்போற வழியை வேலி போட்டு அடைச்சதோடு, ஏரியையும் தன்னோட இடமா மாத்திக்கிட்டாரு. ஆடு, மாடு மேய்க்கப் போனவங்க மேலே போலீஸை வச்சு பொய்க் கேசும் போட்டாரு. இத்தனை காலமா அவருக் குப் பயந்துகிட்டிருந் தோம். இப்ப நிறைய பேர் போராட முன் வந்ததால, நில மீட்பு குழு சார்பா 400 பேர் கலெக்டர்கிட்டே போய் மனு கொடுத்தோம்'' என்றார்.""தலித் சமுதாயத் தைச் சேர்ந்த நீதிபதிக்கு எதிராக சதித்திட்டம் நடப்பதாக சொல்லப்படும் நிலையில் தலித் மக்களே அவருக்கு எதிராகப் பேசுகிறீர்களே'' என கேட்டதற்கு, தலித் காலனியை சேர்ந்த பஸ் கண்டக்டரான ஜெயபால், ""இந்த கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை தலைவிரிச்சு ஆடிச்சின்னா அதுக்கு காரணம் நாயுடுகளும் கொண்டா ரெட்டிகளும்தான். அவங்ககூட ஜட்ஜ் சேர்ந்துகிட்டார். அவர் எங்க ஆளாகவே இருந்திருந்தா புறம்போக்கு நிலங்களை வளைச்சிருக்க மாட்டார்'' என்றார் அழுத்தமாக. ""நிலத்தை மீட்டே தீருவோம்'' என்றார் ராமன் என்பவர்.நீதிபதியின் நிலத்தை மீட்க சி.பி.எம் ஆதரவில் நில மீட்புக்குழு தீவிர போராட்டங்களை மேற்கொள்ள, முள்வேலிகளை அகற்றியது நீதிபதி தரப்பு. தொடர்ந்து நீடித்துவரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக காவேரிராஜபுரம் வி.ஏ.ஓ.கோவிந்தசாமி நம்மிடம், ""சுப்ரீம் கோர்ட் செகரட்டரி ஜெனரல் பத்ரன் உத்தர வுப்படி நீதிபதி தினகரனின் சொத்துகள் பற்றிய ரிப்போர்ட்டை எங்க கலெக்டர் பழனிகுமார் ரெடி பண்ணி அனுப்பினார். அதற்கான டேட்டாக்களை எங்க ரெவின்யூ துறைதான் கலெக்ட் செய்தது. எங்க கணக்கெடுப்பில் 199 ஏக்கர் 53 சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதுபோக அவர் பெயரிலும் அவர் மனைவி பெயரிலும் உள்ள நிலங்களையும் கணக்கிட்டதில் பட்டா நிலம் 250 ஏக்கர். புறம்போக்கு 199.53 ஏக்கர். எல்லாவற்றுக்கும் முள்வேலி போட்டிருந்தார்'' என்றார் புள்ளிவிவரமாக. நிலத்தைக் கணக் கெடுப்பு செய்யச் சென்றபோது போனில் தன்னை நீதிபதி மிரட்டியதாகச் சொல்லும் தாசில்தார் விஜயராகவலு, இது பற்றி கண்ணம்மாசத்திரம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார்.நிலம் தொடர்பான புகார்களை நீதிபதி தரப்போ திட்டவட்டமாக மறுக்கிறது. தினகரனின் மனைவி வினோதினி, தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலாளருக்கு அனுப்பியிருக்கும் விளக்கத்தில் பல விவரங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.புறம்போக்கு நிலத்தை வளைத்திருந்தால், அதனை ஆக்கிரமிப்பு என ரெகார்டுகளில் பதிவுசெய்து, எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அப்படி எந்தப் பதிவும் இல்லை. எங்களுக்கு நோட்டீசும் அனுப்பப்படவில்லை. இ-மெமோ கொடுத்து, இவ்வளவு தண்டத் தொகை கட்ட வேண்டும் என உத்தரவிடப்படும். அதுவும் இதுவரை செய்யப்படவில்லை. இப்போது கலெக்டர் அறிக்கை அனுப்பியபிறகுதான், அடங்கல் ரிப்போர்ட்டில் நிலம் வளைப்பு எனப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த நிலத்துக்குச் சொந்தமானவர்கள் என 18 பேர் மீதான பட்டா கேன்சல் ஆகவில்லை. அப்புறம் எப்படி இது புறம்போக்கு நிலம் என்கி றார்கள்? ஏரிகளை நாங்கள் வளைத்துவிட்டதாகவும் ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஏரிகளில் போன வருடம்கூட மீன் ஏலம் நடத்தியிருக்கிறார்கள். ஏரியை சுற்றியுள்ள மரங்களும் ஏலம்விடப்பட்டுள்ளன.நாங்கள் வளைத்திருந்தால் ஏலம் எப்படி நடந்திருக்கும்? வாய்க்கால்-வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு என்பதும் இப்படிப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுதான். அவற்றின் இரண்டுபக்கமும் இருப்பது எங்கள் நிலம் என்பதால் பொது வான வேலி அமைத்திருந்தோம் கலெக்டர் அனுப்பிய ரிப்போர்ட் அப்பட்டமான பொய் என நீதிபதியின் மனைவி சுட்டிக் காட்டியிருக்கிறார்.நீதிபதிக்கும் குடும்பத்தாருக்கும் சொந்தமானநிலங்களை மீட்டு, 2 ஏக்கர் இலவச நிலம் திட்டத்தின்கீழ் இதனை இப்பகுதி தலித் மக்களுக்கு வழங்கவேண்டும் என 9ந் தேதி போராட்டம் நடத்திய சி.பி.எம் தரப்பில் 306பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலையிட்டுள்ள விவகாரம் என்பதால் தமிழக அரசு இந்த நில விவகாரத்தில் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் செயல்படுவதில் கவனமாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டுக்கு திருவள்ளூர் கலெக்டர் ரிப்போர்ட் அனுப்பும்போதே, தவறான தகவல் எதுவும் இடம்பெற்றுவிடக் கூடாது. நியாய மான விசாரணை நடத்தி ரிப்போர்ட் கொடுங்கள் என கலெக்டரிடம் தெரிவித்திருக் கிறார் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி. நீதிபதி மனைவி அளித்துள்ள விளக்கத்தின் பேரிலும் உண்மையை அறிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறோம் என்கிறது அரசு வட்டாரம்.அதேநேரத்தில், இந்த நில விவகாரத்தை வைத்து அரசுக்கு சி.பி.எம். கொடுக்கும் நெருக்கடியை கலைஞர் விரும்பவில்லை. சிறுதாவூரில் ஜெ. ஆக்கிரமித்துள்ள தலித் நிலத்தை மீட்க போராட்டம் நடத்தாத சி.பி.எம், நீதிபதி தினகரன் விவகாரத்தில் மட்டும் வேகம் காட்டுவது ஏன் என அறிக்கை வெளியிட, அதற்கு சி.பி.எம் தரப்பில் பதில் தரப்பட, இந்த விவகாரத்தில் அரசியல் உஷ்ணம் அதிகமாகியுள்ளது. தினகரன் வளைத்திருப்பது தலித் நிலம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போராட்டங்கள் தீவிரமடைய, இது எங்கள் மூதாதையர் நிலம் என கொண்டா ரெட்டி தரப்பினர் கோர்ட்டுக்குச் சென்றுள்ளனர்.நாங்க வரி கட்டாமல் இருந்துவிட்டோம். ஆனா, பட்டா எங்க பெயரில்தான் இருக்குது. நிலத்துக்கு வரி எவ்வளவுன்னு போன வருட ரிஜிஸ்டரிலும் பதிவாகியிருக்குது. அந்த நிலத்தை எங்களுக்குத் தான் தரணும் என வழக்குத் தொடர்ந்துள்ளனர் கொண்டா ரெட்டி தரப்பினர். புதிய திருப்பங்களையும் தொடர் சர்ச்சைகளையும் எதிர் கொண்டுவரும் இந்த விவகாரத்தில் நீதிபதி தினகரனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வக்கீல் யானை ராஜேந்திரன் நம்மிடம், ""ஒரு தலித் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிவிடக்கூடாது என இங்குள்ள பிராமின் லாபி செயல்படுகிறது. அதுபோல ஒரு தென்னாட்டவர் நீதிபதியாவதை வடஇந்திய லாபியும் விரும்பவில்லை. அதனால்தான் நீதிபதி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். கலெக்டரின் அறிக்கை தவறு என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்திருக்கிறேன். நான் கொடுத்த சில விவரங்களைத் தொடர்ந்துதான் மத்திய அரசின் கீழ் உள்ள சர்வே ஆஃப் இந்தியா மூலமாக ஆய்வு நடத்தி உண்மை விவரங்களை தரச்சொல்லியிருக்கிறார் தலைமை நீதிபதி'' என்றார். கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் நீதிபதி தினகரனுக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு ஆதரவான போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர். புயல் சின்னம் லட்சத்தீவிற்குச் சென்றபிறகும் தமிழகத்தில் மழை ஓயாமல் பெய்வதுபோல, நீதிபதி தினகரன் விவகாரமும் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment