Friday, November 13, 2009

சீரழியும் கண்ணகியின் பூம்புகார்!



கண்ணகி, கோவலன், மாதவி என காப்பிய நாயக-நாயகிகள் உலவிய பூம்புகாரில் இப்போது எந்தப் பக்கம் ஒதுங்கி னாலும் காதல் ஜோடிகள் தழுவிக் கொண் டிருக்கின்றன. நாங்களும் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதற்காக இப்படியா? அக்கம் பக்கத்துல உள்ளவங்க பாப்பாங்களேன்னுகூட வெட்கப்படாம கூச்ச நாச்சமில்லாம நடந்துக்கிட்டா ஃபேமிலியோடு வர்றவங்க எப்படி சுத்திப்பாக்குறது'' என்றனர் திருப்பூரிலிருந்து நாகை மாவட்டம் பூம்புகாருக்கு வந்திருந்த குமரன் தம்பதியர்.அக்கம்பக்கம் பற்றி பூம்புகாருக்கு வரும் காதலர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் அவர்களை ஒரு சில கும்பல் கண்டு கொண்டுதான் இருக்கிறது. பூம்புகாரில் காவிரி கடலுடன் கலக்கும் பகுதிக்கு சந்துரு-விஜி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) கல்லூரி காதல் ஜோடி வந்தது. கூடவே நண்பனையும் அழைத்து வந்திருந்தான் சந்துரு. காதலர்கள் முத்தங்களை பரிமாறிக் கொள்ள, நாகரிகமாக ஒதுங்கிச் சென்று விட்டான் நண்பன். தூரத்திலிருந்து ஜோடியை கவனித்துக்கொண்டிருந்த 3 பேர் கும்பல், நெருங்கி வந்தது. சந்துருவை தண்ணீரில் பிடித்து தள்ளிவிட்டு, விஜியை கருவைக் காட்டுக்குத் தூக்கிச்செல்ல, விஜியின் அலறல் கேட்டு அப்பகுதி மீனவர்கள் ஓடிவந்து , மூவரையும் விரட்டி, விஜியைக் காப்பாற்றியுள்ளனர். சந்துருவோ தப்பித்தால் போதும் என மயிலாடுதுறைக்கு பஸ் ஏறிவிட, ஜோடியைக் காணோமே என அலையாய் அலைந்திருக்கிறான் நண்பன்.இப்படிப்பட்ட சம்பவங்கள் இங்கே சர்வசாதாரணம் என்கிற சுண்டல் வியாபாரி பாலு, ""நிலவரம் தெரியாம வர்ற ஜோடிகளை கண்காணிச்சு, பையனை அடிச்சுப்போட்டுட்டு, பொண்ணை தூக்கிட்டுப்போய் சீரழிக்கிற கும்பல் இங்கே நிறைய இருக்குது. கள்ளக்காதல் ஜோடிகள், பள்ளிக்கூட காதல் ஜோடிகள், புதுசா கல்யாணமான புருசன் பொண்டாட்டி இவங்களெல்லாம் இந்தப் பக்கம் வர்றதே ஆபத்துதான். ஆனா, தப்புத்தண்டா ஜோடிகள் இங்கேதானே வருதுங்க. 60 வயசு கிழவன், 19வயசு பொண்ணோடு வந்து ஓரமா ஒதுங்குனான். மீனவர்கள்தான் பிடிச்சு போலீசுகிட்டே கொடுத்தாங்க. ஒரு நடவடிக்கையும் இல்லை'' என்றார் விரக்தியாக.

நம்முடன் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த ஒரு காக்கி, ""கடல் கொண்ட இந்த ஊரை பெருமையா மறுபடியும் உருவாக்கினாரு நம்ம முதலமைச்சர். இங்கதான் இத்தனையும் நடக்குது. சுற்றுலாத்துறையும் கண்டுக்கிறதில்லை. காவல்துறை உயரதிகாரிகளும் கண்டுக்கிறதில்லை. எங்க கடமையையும் செய்ய விடுறதில்லை'' என்று பெருமூச்சு விட்டார்.காமாந்தகர்களின் ஊராகிவிட்டது கண்ணகி வாழ்ந்த பூம்புகார்.

No comments:

Post a Comment