பொது மேடைகளில் தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சிப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த 27-ந்தேதி வாழப்பாடியார் நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினர் கதர் சட்டையினர். இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், வழக்கம்போல் தனது பாணியில் விளாசித் தள்ளினார். இளங்கோவனின் தி.மு.க. விமர்சனம் குறித்து, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண் டானிடம் கேட்டோம்.
""நம் கட்சியின் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தப் போறாங் களாம். அதே நாளில் நாமும் ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து கூட்டம் போட முடி யாதா'' என்று கேட்கிறாரே இளங்கோவன்?
இளங்கோவனுக்கு தைரியமிருந்தால் போடட்டுமே... போட்டுத்தான் பார்க்கட்டுமே! யார் தடுக்கப் போகிறார்கள்? வெறும் வாய்ச் சவடாலாக இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் போட்டு காட்டவேண்டும் இளங்கோவன். பிரதமர் மன்மோகன்சிங்கே, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் வாதங்கள் சரி கிடையாது' என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர், தி.மு.க. வைச் சேர்ந்தவரா? காங்கிரஸ்காரர்தானே! இளங்கோவன் போன்ற மண்டூகங்கள், பிரதமர் என்ன சொல்கிறார்? சோனியாகாந்தி என்ன சொல்கிறார்?ன்னு தெரிந்துகொண்டு பேசவேண்டும். ஊழல் நடக்க வில்லையென்று பிரதமர் சொன்ன பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இளங்கோவன் பேசுகிறார் என்றால்... பிரதமரையே கண்டிக்கிறார்னு அர்த்தம்.
""எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தீர்கள்னு ஒரு எம்.பி. (டி.ஆர்.பாலு) பாராளுமன்றத்தில் குதிக் கிறார். இதேமாதிரி நாங்களும் கேட்கட்டுமா? தமிழகத் தில் முதலமைச்சர் பதவி மட்டும்தானே இருந்தது. ஆனா, இப்போ துணையெல்லாம் உருவாக்கியிருக் கிறீர்களே... காங்கிரஸை கேட்டா இதை செய்தீர்கள்'' என்று இளங்கோவன் ஆவேசப்பட்டிருக்கிறாரே?
அடே... அடே... பைத்தியக்கார இளங்கோவனே... உனக்கு அரசியலமைப்பும் புரியவில்லை, ஆட்சியமைப்பும் புரியவில்லை. மத்திய சர்க்கார்ங்கிறது தற்போது கூட்டணி ஆட்சி தத்துவத்தில் இயங்குகிறது. தி.மு.க. போன்ற பல கட்சிகளை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் மன்மோகன்சிங். கூட்டணி ஆட்சியில் தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்து, விவாதித்து... அப்புறம்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படை யில்தான் தி.மு.க. கேள்வி எழுப்பியது. ஆனா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா நடக்கிறது? இல்லையே... தி.மு.க.வின் தனி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், தி.மு.க.வின் கொள்கை முடிவுக்கு காங்கிரஸ்காரரான இந்த இளங்கோவன்கிட்டே எதற்கு கேட்க வேண்டும்?
""ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வைத்த கோரிக்கையைக்கூட இவர்கள் (தி.மு.க.) ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெதற்கு இவர்களை நாம் தூக்கி சுமக்க வேண்டும்'' என்று இளங்கோவன் கேட்பதில் என்ன தவறு என கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்
காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை அழுத்த மாக புரிந்து கொள்ள வேண்டும். புத்தி பேதலித் துள்ள இளங்கோவனால் புரிந்துகொள்ள முடியு மான்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல் கிறேன். காமராஜர் மீது கலைஞருக்கும், கலைஞர் மீது காமராஜருக்கும் இருந்த நட்பு, மரியாதை, பாசம் எல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி. இதனைப் பட்டிய லிட்டால் நூலகத்தில் வைக்கிற அளவுக்கு ஒரு பெரிய புத்தகம்தான் போடவேண்டியதிருக்கும். அப்படிப் பட்ட கலைஞரா, காமராஜர் பெயர் கூடாது என்று சொல்லுவார்? காமராஜருக்கு தி.மு.க.வும் கலைஞ ரும் செய்துள்ள மரியாதையில் 1 சதவீதம் கூட அன்றைய-இன்றைய காங்கிரஸ்காரர்கள் யாரும் செய்தது கிடையாது. பொது மேடைகளில், தி.மு.க.வுக்கு எதிராக தைரியசாலி மாதிரி பேசுகிற இளங்கோவன், சோனியாவை சந்தித்துப் பேசலாமே! ஏன் பேச மறுக் கிறார்? உங்கள் யோக்யதை என்னன்னு சோனியா வுக்கு தெரியும்ங்கிறதினாலதான் இளங்கோ வன் போன்ற "உபரி'களுக்கு அப்பாயிண்ட் மென்ட்டே தரமாட்டேங்கிறார். இந்த உண்மை யெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா
""சமீபத்தில் நடந்த அண்ணா நூற் றாண்டு விழாவில், கலைஞரை பாராட்டி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய இளங் கோவன், "ஒருவரை பாராட்டி பேசுவதற் கென்றே புலவர் கூட்டம் ஒன்று அலையுது. அப்படி புகழ்ந்து பேசுவதை கேட்டு சிலர் ரசிக்கின்றனர்'' என்று நக்கலடிக்கிறாரே?
அரசியலில் ஒருவரை இழித்தும் பழித்தும் பேசி சுயஇன்பம் காண்பதில் அலாதி பிரியம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரை "அரசியல் அரு வருப்பு'' என்று தான் சொல்ல வேண்டும். புலவர்கள் என்பவர் கள் அறிவின் முதிர்ச்சிகள். அவர் கள், தகுதியுள்ள வர்களைத்தான் பாராட்டு வார்கள். இளங்கோவன் போன்ற தற்குறிகளையா பாராட்ட முடியும்? அனைத்து துறைகளிலும் ஆற் றல் மிக்கவரான, சாதித்துக் காட்டியவரான கலை ஞரை பாடுவதில்தான் தங்கள் கவிதைகளுக்குப் பெருமைன்னு உலக கவிஞர்கள் நினைக்கின்றனர். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆற்றல்மிக்கவ ரான கலைஞருக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரை காட்டுங்களேன். கவிஞர்கள் மட்டுமில்லை... நாங்க கூட பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட ஒரு ஆளை காட்ட முடியுமா இளங்கோவனால்?
""என்னைத் தோற்கடித்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டார்கள்'' என்று தி.மு.க.வை குற்றம் சாட்டுகிறாரே இளங்கோவன்?
தனது தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியா மல் உளறுகிறார் இளங்கோவன். தி.மு.க. மீதும் அதன் தலைமை மீதும் மாசு கற்பிக்கப்பட வேண்டுமென்பதற் காகவே, இப்படிப்பட்ட விஷயத்தை கக்குகிறார். தி.மு.க. வை வசைபாடுகிற காங்கிரஸ்காரர்களை வாக்காளர்கள் மன்னிப்பதில்லை. ஈரோட்டில் நின்றால், யாருடைய தயவு மில்லாமல் ஈஸியாக ஜெயித்து விடுவேன் என டெல்லியில் மல்லுக்கட்டித்தானே அந்த தொகுதியை வாங்கி னார். ஜெயிக்க வேண்டியதுதானே...! இத்தனைக்கும் அவருடைய சொந்த மண் ஈரோடு. அங்கேயே உன்னால் ஜெயிக்க முடியவில்லையென்றால்... உன் யோக்யதை, தராதரம் அந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. தோற்கடித்துவிட்டார்கள். இதில் தி.மு.க. என்ன செய்யும்? அதனால், தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரை பற்றியும் மறைமுகமாக பேசுவதையெல்லாம் தவிர்த்து விட்டு... உருப்படற வழியை இளங்கோவன் பார்ப்பது நல்லது.
No comments:
Post a Comment