Saturday, May 22, 2010

108-க்கு ஒரு சல்யூட்!


shockan.blogspot.com

சுயநல அரசியல்வாதி களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாராட்டு விழா நடத்தத் தெரிந்த நம் மக்களுக்கு, நமக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி பாராட்டுவதோ, சமூகத்தில் குட்டி குட்டி அன்னை தெரசாக்களாக இயங்கிக் கொண்டி ருப்பவர்களை தட்டிக் கொடுக்க வோ மறந்து விடுகிறார்கள்.

தமிழகத்தில் இரவு பகல் பாராது, மனிதனுக்கும் மரணத்துக் கும் இடையே உள்ள சிறுவெளியை பெருவெளியாக்க "சர் சர்'ரென்று சத்தம் கொடுத்தபடி சாலைகளில் பறந்து கொண்டிருக்கும் 108 சர்வீஸைப் பற்றியோ, அதில் பணிபுரியும் ஊழியர்களையோ நாம் சாதாரண நாட்களில் நினைத்துப் பார்க்கிறோமா?

ஆனால் நினைத்துப் பார்த்தார்கள் ராமநாதபுர மாவட்ட மக்களும், மாவட்ட நிர்வாகமும். 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் துவங்கப்பட்டு 2 வருடம் ஆனாலும், ராமநாதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட நிறைவு நாளை விழாவாக எடுத்து 108-ஐ நிர்வாகம் செய்யும் நிர்வாகிகள், துடிப்புடன் செயல்படும் ஊழியர்கள், இவர்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்கள் அனைவரையும், மாவட்ட நிர்வாகத்தின் உயரதிகாரிகளும், இவர்களால் உயிர் பிழைத்தவர்களும் வந்து நெஞ்சுருக பாராட்ட... வந்திருந்த பொதுமக்களும், நிருபர்களும் கண்கலங்கிப் போனார்கள். ""இதுதான்யா நிஜமான பாராட்டுவிழா'' என்றனர் வந்திருந்தவர்கள்.

நிகழ்ச்சியில், பாராட்ட வந்த மாவட்ட எஸ்.பி. பிரதீப்குமார் ""எங்களால் உடனே செய்ய முடியாத பணியை 108 சர்வீஸ் செய்கிறது. போன் செய்த 15 நிமிடத்திற்குள் விபத்து நடந்த இடத்திற்கு வந்து நிற்கும் ஆம்புலன்ஸை கண்டு ஆச்சரிய மாக இருக்கிறது. 108-ஐ பார்த்து நானும் ஒரு உத்தரவு போட்டுள்ளேன். எங்கே யாவது சண்டை, திருட்டு பிரச்சினை என்று எங்களுடைய எஸ்.பி. அலுவலக எண்ணுக்கு போன் செய்தால் கால் மணி நேரத்தில் போலீஸ் அங்கே இருக்கும் படியாக ஏற்பாடு செய்திருக்கிறேன்.

அதேபோல் 108 வாகனத்தை சிலர் டேமேஜ் செய்கிறார்கள். இங்கேயும் அப்படியொரு சம்பவம் நடந்தது. நாம் உடனே சம்பந்தப்பட்ட அக்யூஸ்டை அரெஸ்ட் செய்து பி.பி.டி. ஆக்டில் வழக்கு பதிவு செய்தோம். பல உயிர்களை காப்பாற்றுகிற உங்களுக்கொரு பிரச் சினையென்றால் நாங்கள் உங்களை பாதுகாப்போம்.

நீங்கள் செய்கின்ற 108 சேவைக்கு பாராட்டுவதை விட சல்யூட் அடிக் கிறேன்'' என்று எஸ்.பி. சல்யூட் அடிக்க, கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.

அடுத்து பாராட்ட வந்த கலெக்டர் ஹரிஹரன், ""நான் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஒரு விபத்து. உடனே நான் 108-க்கு கால் செய்தேன். திரும்பவும் அவர்கள் எனது செல்லுக்கு கால் செய்து கன்பர்மேஷன் செய்து கொண்டார்கள். அடுத்த 15-வது நிமிடம் என்னைக் கடந்து 108 ஆம்புலன்ஸ் செல்கிறது. ஒரு மீட்பு வேலைதானே என்று இதில் பணி புரிபவர்கள் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிப்ப தில்லை. அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தின் கோ-ஆர்டினேட்டராக இருக்கும் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். ஏற்கனவே இந்த மாவட்டத்தின் கலெக்டராக இருந்ததால், மாவட்டத்தின் நிலவரத்தை அறிந்தவர் என்பதால், ஏ.எல்.எஸ். வசதியுள்ள ஆம்புலன்ஸ் நமது மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு கொடுத்துள்ளார். மற்ற மாவட்டங்களில் ஒன்றுதான். அதுபோல் சாதாரண ஆம்புலன்சும் நமது மாவட்டத்திற்கு கூடுதலாகக் கொடுத்துள்ளார். அதனால்தான் நமது மக்களை பேராபத்துகளிலிருந்து உட னுக்குடன் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி உயிர் காக்கும் சேவையை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நமது மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. மிஸ்யூஸும் செய்கிறார்கள். சமீபத்தில் ஆர்.எஸ்.மங்கலத்தில் லாரியொன்று கூட்டத்திற்குள் புகுந்து விபத்து ஏற்படுத்த, உயிருக்கு போராடியவர்களை மீட்க சென்ற 108 வாகனத்தை பொதுமக்கள் தாக்கியிருக்கிறார்கள். இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது. 108 வாகனம் ஒரு மொபைல் ஐ.சி.யூ.தான். அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் சேவையைப் பாராட்ட முடியவில்லை. அதனால் நானும் 108-க் கும் அதன் களப்பணியாளர்கள், டிரைவர்களுக்கும் சல்யூட் அடிக்கிறேன்'' என்றார்.

108 சேவை மூலம் உயிர்பிழைத்தவர்களின் உயிர்ப்பான வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டு அந்த அரங்கில் திரையிடப்பட்டன.

திருப்பாலைக்குடியைச் சேர்ந்த யூசுப் என்பவர் ""எங்க பள்ளிக்கூட ஆண்டு விழாவில் கரண்ட் தாக்கி பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் உடனே வந்து பலபேரின் உயிர்களைக் காப்பாற்றியது 108தான். வாழ்க்கையில் யாரும் மறக்க முடியாது இதன் சேவையை''.

மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சுதா என்ற இளம்பெண் ""நான் நிறை மாசமா இருந்தேன். திடீர்னு வலி வந்துடுச்சு. உயிர் போற வலி. வீட்ல யாரும் இல்லை. பக்கத்துல இருந்த வங்கதான் 108 வண்டிக்கு போன் பண்ணினாங்க. அதுல இருந்தவங்க என்னை பத்திரமா ஏத்தி ராம்நாடு கொண்டு போனாங்க. அதுக்குள்ள எனக்கு 108-க்குள்ளேயே குழந்தை பிறந்திடுச்சு. என்னையும் என் குழந்தை உயிரையும் காப் பாத்துன 108-ஐ எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாது''.

இதுபோலவே பலபேரின் அனுபவங்கள். வருகை தந்த பொதுமக்கள் அனைவரும் கூறியது ஒன்றே ஒன்றுதான். ""கலைஞர் அவர்கள் மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கான அத்தனை திட்டங் களையும் கொண்டு வந்தார். கூடவே ஆயுளை நீட்டிப்பதற்கும், அவசர கதியில் வரும் துர் மரணத்திலிருந்து விடுபடவும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறாரே 108 சர்வீஸ் இதுதான், அவர் கொண்டு வந்த திட்டங்களில் தலைசிறந்தது'' என்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் களப்பணி யாளர்கள், முதலுதவிகள் அளிக்கும் அறிவியல் பட்டதாரிகள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் கலெக்டர் கையால் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.

நம்மிடம் பேசிய தலை மைச் செயல் அலுவலரான ஸ்ரீவட்சன், மண்டல மேலா ளர் லட்சுமணன் ஆகியோர், ""தமிழகம் முழுவதும் 385 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. தமிழக முதல்வர் அவர்கள் அடுத்த வருடத்திற்குள் இதன் எண்ணிக்கையை 545 ஆக ஆக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இன்னும் அதிகமான மக்களுக்கு சேவை செய்ய முடியும்.

இதுவரை தமிழகம் முழுவதும் 4,31,535 நபர்களுக்கு சர்வீஸ் செய்திருக்கிறோம். அதில் விபத்து கேசுகள் 1,33,302. இதய நோயாளிகள் 22,812 பேர். ஆம்புலன்ஸ் வரவில்லையென்றால் அப்போதே உயிர் போயிருக்கக்கூடிய கேஸ்களில் 21,730 பேரைக் காப்பாற்றியிருக்கிறோம். "கோல்டன் ஹவர்' என்று சொல்லப்படும் அந்த ஒரு மணி நேர அவகாசத்தை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள 108 சேவை பயன்படுகிறது. எங்களுடைய சேவைகளுக்கு தமிழக அரசு முழுமையான அளவில் உதவி செய்கிறது. எங்களுடைய அடுத்த இலக்கு போன் செய்த 10 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான்'' என்று உற்சாகமாகப் பேசினார்கள் 108 சர்வீஸ் நிர்வாகிகள்.

நாமும் செய்வோம் 108-க்கு ஒரு சல்யூட்!

No comments:

Post a Comment