Saturday, May 22, 2010

இளம்பெண்ணின் சோக முடிவு!


shockan.blogspot.com


""ராஜாத்தி... நான் பெத்த மயிலே... ப்ரியா கண்ணு... இனி நான் உன்ன எப்படி பார்ப்பேன்? நானே உன்ன கொன்னுட்ட னேடி... தங்கம்...'' என்று கோவை செல்வபுரம் தில்லை நகர் வ.உ.சி. தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கேட்டுக்கொண்டேயிருக்கும் ஒரு தாயின் கதறல் கேட்பவர்களையெல்லாம் கலங்கடிக்கிறது.

கேட்டுக்கொண்டே கலங்கித்தான் நாமும் அவ்வீட்டில் நுழைந்து முருகேஸ்வரி என்ற அந்தத் தாயிடம் பேசினோம். ""நிலா மாதிரி பொறந்த தலைச்ச புள்ள கண்ணு என் பொண்ணு சண்முகப்ரியா. அவளுக்குப் பின்னால பொறந்த ரெண்டும் ஆம்பளப் பசங்க. மர வேலை செய்யற என் புருஷனோட சம்பாத்தியத்த வச்சு எங்க பொழப்பு ஓடிட்டு இருந்தபோது சித்தாளு வேலைக்குன்னு போய் நான் சம்பாதிச்ச பணமும் என் குழந் தைகள படிக்க வைக்கிறதுக்கு பத்தவே யில்லை. அதுக்காக அங்க இங்கன்னு கடன் வாங்கி என் புள்ளைய படிக்க வச்சுட்டி ருந்தேன்.

பசங்க ரெண்டும் 8-வது, 9-வதுன்னு படிச்சிட்டிருக்குதுக. என் புள்ளை படிப்புக்காக கல்லாமேட்டுல இருக்கற உஷாங்கற பொம் பளகிட்ட 4,000 ரூபாய பத்து ரூவா வட்டிக்கு வாங்கினேன். அதுல அசலு 2,000 ரூபாய குடுத்துட்டேன். மீதி 2000 ரூபாய குடுக்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருந்த நேரம்.

என்ன நேரமுன்னு தெரியலை சாமி... என் புருஷனுக்கு காது கேட்காமப் போயிருச்சு. அதுக்கு வைத்தியம் பார்க்கறதுக்குக்கூட பணமில்லை சாமி எங்கிட்ட. இதுல வயசான எங்கம்மாவுக்கு வேற வைத்தியம் பாக்கணும். இந்த நிலைமையில எல்லாருக்கும் வட்டி கட்டிட்டு இருக்கும்போது என் பொண்ணு எங்கிட்ட... "அம்மா நீ படற கஷ்டத்துக்கெல்லாம் நான் நல்லா படிச்சு உன்னைய உக்கார வச்சு சோறு போடு வேம்மா'ன்னு சொல்லுவா. சொல்லிக்கிட்டேதான் இருப்பா. சொன்ன மாதிரியே நல்லா படிச்சு இப்ப பதினொண்ணாவது பாஸாயிட்டா. இப்ப லீவுல அவ வீட்ல இருக்கும்போது ஒருநாளு இந்த உஷாவும் அவங்க அம்மாவும் வாங்குன பணத்தை எப்ப குடுப்பே? வட்டியும் தரமாட்டேங்குறன்னு எங்கிட்ட சண்டைக்கு வர... போன வாரத்துல ஒருநாளு இந்தாங்கக்கா வட்டி... எப்படியாவது அசலு ரெண்டாயிரத்த குடுத்துடறேன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தபோது "எப்படியாவது அவங்ககிட்ட வாங்கன பணத்தக் குடுத்துடுங்கம்மா ரொம்பவும் கெட்டவார்த்தையில பேசுறாங்க. நான் வேணா இப்ப வீட்ல சும்மாயிருக்கறதுக்கு வேலைக்குப் போகட்டுமா'ன்னு கேட்டா.

"வேண்டாம் தங்கம்... அம்மா எப்படியாவது 2000 ரூவா பணத்தக் குடுத்துடுவேன்'னு சொன்னேன். முந்தாநாளு நைட்டு 8 மணிக்கு வயசான எங்கம்மாவும் என் பொண்ணும் வீட்ல இருக்கும்போது அந்த உஷாவும் அவுங்க அம்மாவும் வீட்டுக்கு வந்துட்டு "பணம் கொடுக்கமாட்டாளா உங்கம்மா. எப்ப கேட்டாலும் பணம் இல்லை இல்லைன்னு சொல்றா. ஏன்? நீ நல்லாத்தானே இருக்கறே... உன்ன வச்சு உங்கம்மா பிஸினஸ் பண்ணி பணத்தை தரலாமில்லை'ன்னு அப்படி கெட்ட வார்த்தையில பேசியிருக்காங்க.

என்புள்ள அழுதுக்கிட்டே "இப்படி எல்லாம் பேசாதீங்க. எங்கம்மா வேலையிலிருந்து வந்ததும் அவங்ககிட்ட பேசிக்கீங்க'ன்னு சொல்லியிருக்கிறா. எங்கம்மாவும் சொல்லியிருக்குது. ஆனா அவுளுக ரொம்பவுமே கெட்ட வார்த்தையில பேச கோபமான எங்க பொண்ணு... "இப்படியே பேசிக்கிட்டிருந் தீங்கண்ணா அப்புறம் நான் சீமெண்ணய ஊத்தி கொளுத் திக்குவேன்'னு சொல்லியிருக்கு. "கொளுத்துடி பார்க்கலாம்'னு நின்னுட்டாளுகளாம். வெடுக் குன்னு போய் கதவ சாத்துனவ 5 லிட்டர் கேன்ல இருந்த சீமெண்ணய ஊத்திட்டு நெருப்ப பத்த வச்சிட்டு ஒரேயடியா போய்ட்டாளே சாமீ... நான் என்ன பண்ணுவேன்... இப்படி ஆகறதுக்கா என் புள்ளைய வளர்த் தேன். ரெண்டாயிரம் ரூவா பணத்துக்காக என்பொண்ண கொன்னுபோட்டாங்களே.

ரெண்டாயிரம் ரூவா பணத்த இப்ப நான் குடுத்துடறேன்... என் புள்ளைய கொடுக்கச் சொல்லுங்க... என் புள்ளையக் குடுக்கச் சொல்லுங்க. இனி யாரு சாமி என்னைய உக்கார வச்சு சாப்பாடு போடறேன்னு ஆறுதலா சொல்லுவாங்க?'' என மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுகிறாள் அந்தத் தாய்.

""நல்லா படிக்கற பொண்ணு. எப்பவுமே கோயில், குளம்னு இருக்கும். எங்க பொண்ணு கூடதான் வீட்டுக்கு முன்னால உக்காந்து தாயம், பரமபதம்னு வெளையாடும். சுட்டியா இருக்கும். சின்னபொண்ணுன்னு கூட பார்க்காம கெட்ட வார்த்தையாவே பேசி அந்தப் பொண்ண இப்படி பண்ண வச்சுட்டாங்களே... இவுங்க ரொம்பவும் கஷ்டத்துலயிருக்காங்கன்னுதான் ஒரு வருஷமா வாடகை கூட நான் வாங்கறதில்லை. எல்லா கடனையும் இப்பதான் கட்டிக்கிட்டு இருந்தாங்க. ஆனா அதுக்குள்ள இப்படி... நிச்சயமா அந்த ரெண்டு பொம்பளைகளுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கோணும்ங்க...'' என்கிறார் வீட்டு ஓனரான ராஜேந்திரன் கோபமாய்.

தன் பேத்தி கண் முன்னே எரிந்து போகும்போது தன்னால் தடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தோடு தன் பேத்தியின் சிறு வயது புகைப்படத்தை நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு அவள் எரிந்த ரூமையே வெறித்து வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் அந்தப் பாட்டி ரங்கநாயகியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருக்க... நாம் பேசும்போதெல்லாம் மௌனத்தையே பதிலாகத் தருகிறார்.

""அடிக்கடி சாமி கும்புடுற அக்காவ கடைசியில சாமிகூட காப்பாத்தாமப் போயிருச்சே'' என ப்ரியாவின் இரு தம்பிகளும் அழுகிறார்கள்.

வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் பி-10 ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். ""முருகேஸ்வரி வாங்கின பணத்திற்கு அந்த சின்னப் பொண்ணு சண்முகப்ரியாவை நச்சரித்த உஷா, நவநீதம் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். வெறும் ரெண்டாயிரம் ரூபாய் பணத்திற்காக ஓர் உயிர் போயிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை'' என்கிறார் சோகமாய்.

சண்முகப்ரியாவின் உயிரைப் பறித்த மண்ணெண்ணெய் கேனுக்குப் பக்கத்தில் அவளை பத்திரமாய் பள்ளிக்கு கூட்டிக்கொண்டு போய்வந்த சைக்கிளும், கொடி கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் அவள் அணிந்த ஆடைகளும் அவள் இல்லாததின் வெறுமையை அதிகப்படுத்துகின்றன.

நாம் உட்பட எல்லோரையும் அழ வைத்துவிட்டுப் போய்விட்ட சண்முகப்ரியா தன் தோழிகளுடன் எப்போதோ எடுத்த போட்டோவில் மட்டும் சிரித்துக்கொண்டே யிருக்கிறாள்.

No comments:

Post a Comment