Saturday, May 22, 2010

கலைஞர் கருணை காட்ட வேண்டும்'' சீமான்


shockan.blogspot.com

நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர் களை முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் கொன்றழித்த கருப்பு நாளான "மே 18'-ல் "தமிழினம் மீண்டெழும்' என்ற முழக்கத்தோடு தனது "நாம் தமிழர்' இயக்கத்தை அரசியல் இயக்கமாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சியை மதுரையில் எழுச்சியோடு நடத்தினார் சீமான்.

மாலை 4 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, சீமான் வர தாமதமானதால் அவர் வருவதற்கு முன்பாகவே புறப்பட்டது. 18 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் இதில் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் ஈழத்துக்காக குரல் எழுப்பி உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு "பிரபாகரன்' விருதை வழங்கினார் சீமான்.

விழாவில் பேசிய தீரன், ""இலங்கையை போர்க் குற்ற நாடாக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்'' என வலியுறுத்தினார். பினாங்கு துணை முதல்வர் ராமசாமியோ "" மலேசிய அரசு, "இந்திய அரசை விமர்சிக்கக் கூடாது' என்ற கண்டிஷனோடு தன்னை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது என்று ஆதங்கப் பட்டார்.

தமிழருவி மணியன் மைக் முன் வந்தபோது... ""சோனியாவைப் புகழ்ந்த வாய்... இங்கு பேசக்கூடாது'' என சிலர் குரல் கொடுக்க... ""நான் காங்கிரஸைத் தலை முழுகி வந்துவிட்டவன். ஈழத்துக்காக இளைஞர்களைப் படைதிரட்டும் ஆற்றல் சீமானுக்கே இருக்கிறது'' என எதிர்ப்புக் குரல்களை சமாதானப்படுத்தி முழக்கமிட்டார்.





நிறைவாகப் பேசவந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ""அன்று ஆதித்தனார் ஆரம்பித்த நாம் தமிழர் இயக்கம்... இப்போது அரசியல் இயக்கமாக மாறுகிறது. தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று சக்தியாக நாம் தமிழர் இயக்கம் வடிவெடுத்திருக்கிறது. நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. இலங்கையில் இருக்கும் ராஜபக்ஷே அரசை போர்க்குற்ற அரசாக, தமிழக சட்டமன்றத்திலே தீர்மானம் இயற்றி கண்டித்து... கலைஞர் கருணை காட்ட வேண்டும். நாளைகளில் தமிழர்களுக்கான தமிழினத்திற்கான அரசை நாம் தமிழர் இயக்கம் கொடுக்கும்'' என்றார் தன்னம்பிக்கையோடு.

நாம் தமிழர் இயக்கத்தின் இந்த இன எழுச்சி மாநாட்டில்... "இந்திய அரசு தமி ழீழத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும். மலேசியாவில் தலைமுறை தலைமுறை யாக வாழும் நாலரை லட்சம் தமிழர்களுக்கு மலேசிய அரசு குடியுரிமை வழங்க இந்திய அரசு கேட்டுக்கொள்ள வேண்டும். தமிழில் படித்தோர்க்கு மட்டுமே தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்' என்பது உள் ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழுணர்வாளர் களால் உணர்வுமயமாய் களைகட்டியது மாமதுரை.

No comments:

Post a Comment