Wednesday, May 26, 2010

டிரினிடாட்-டோபாகோ பிரதமராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு


shockan.blogspot.com

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட்-டோபாகோ நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கம்லா பெர்சாத் பிசேசர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந் நாட்டின் முதல் பெண் பிரதமரும் இவரே.

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான இந்த நாட்டில் நடந்த தேர்தலில் கம்லா தலைமையிலான மக்கள் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 41 நாடாளுமன்றத் தொகுதிகளில் 5 கட்சிகளைக் கொண்ட கம்லாவின் கூட்டணி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 43 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியை தோற்கடித்துள்ளார் கம்லா பெர்சாத்.

53 வயதான கம்லா சட்டம் படித்துவிட்டு எம்பிஏ பட்டமும் பெற்றவர். டிரினிடாட் நாட்டின் முதல் பெண் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர். மேலும், அந்நாட்டின் சட்டத்துறை அமைச்சராகவும், கல்வித்துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார்.

1845ம் ஆண்டு முதல் 1917 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 1,48,000 தொழிலாளர்கள் டிரினிடாட் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்த நாட்டில் கரும்பு மற்றும் கோகோ தோட்டங்களில் பணிபுரிய இந்தியர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

தற்போது, அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment