Tuesday, May 25, 2010

தொடர் நஷ்டம்... விஜய்க்கு நாளை ரெட்?


shockan.blogspot.com

விஜய்யின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரது படங்களுக்கு நாளை ரெட் கார்டு போட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அங்காடித் தெரு தவிர சமீபத்தில் வெளியான எந்தத் தமிழ்ப் படமும் வெற்றியைப் பெறவில்லை என்று விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் புலம்பி வருகின்றனர்.

விஜய்யின் குருவி, வில்லு, வேட்டைக்காரன் மற்றும் சுறா ஆகிய படங்கள் தொடர்ச்சியான தோல்வியைத் தழுவி, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக வெளிப்படையான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நஷ்டத்தை விஜய்தான் ஈடு செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எப்படி ஈடு செய்ய வேண்டும் என்றும் ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளை மே 26-ம் தேதி பிற்பகல், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமும் அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்கிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஆர் எம் அண்ணாமலை இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். செயலாளர் பன்னீர் செல்வம், சேலம் டிஎன்டி ராஜா, கோவை ராயல் சுரேஷ் போன்ற நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், தனது படங்களின் நஷ்டத்தை விஜய் ஈடுகட்ட வேண்டும் அல்லது அவரது எதிர்வரும் படங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து படுதோல்வியைத் தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் குறித்தும் அந்த நஷ்டத்தை திரும்பப் பெறுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment