Wednesday, May 19, 2010

அனுராதா ரமணனின் கடைசி எழுத்து...!



shockan.blogspot.com
சாதி, மதம் உட்பட எந்தக் குழுவுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல் ஆயிரத்திற்கும் அதிகமான சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், சங்கீத விமர்சனம், ஓவியம் என கலை இலக்கியத்தின் அத்தனை பாதைகளிலும் 33 வருடமாக உற்சாகத்தோடு நடை போட்டுக் கொண்டிருந்த திருமதி அனுராதா ரமணன், தனது 62வது வயதில் 16.5.10 ஞாயிறன்று காலமாகிவிட்டார்.

எம்.ஜி.ஆரிடம் தங்கப்பதக்கம், ராஜீவ்காந்தி விருது உட்பட அவர் வாங்கிக் குவித்த விருதுகளும், நேர்த்தியோடு அவர் தீட்டிய ஓவியங்களும் வீடு முழுதும் நிறைந்திருக்கின்றன. இவர் தந்தை காஞ்சி மடத்தின் மகா பெரியவரின் தீவிர விசுவாசி. இவரும் காஞ்சி மடத்தின், ஜெயேந்திரரின் மீது பக்தி கொண்டவராக இருந்தவர் தான். சங்கரராமன் கொலைக்குப் பிறகு, காஞ்சி மடம் மற்றும் ஜெயேந்திரரின் இருண்ட பக்கத்தை, ஏராளமான விஷயங்களை காவல்துறையிடம் சொன்னவர் அனுராதா ரமணன். "நான் பிராமணத்திதான்... ஆனால் ஆபாசத்திற்கும் அயோக்கியத்தனத் திற்கும் எதிரானவள்' என்பதை வெளிப்படுத்தியவர். ஜெயேந்திர ருக்கு எதிராக, நீதிமன்றக் கூண்டிலேறி அடுத்த மாதம் சாட்சி யமளிக்கவும் தயாராகவே இருந்தார்.

கலைஞரைப் போலவே தடி மனான பேனாவை, தூரிகை போல திருத்தமாகப் பயன்படுத்திக்கொண்டி ருந்த அனுராதாரமணன் பிறகு கணினி யில் டைப் செய்யத் தொடங்கினார்.

திடுமென உடல்நலிவுற்று, 12 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், தனது கணினியில் வழக்கம்போல் நக்கீரன் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினார். இதுதான் அனுராதா ரமணனின் இறுதி எழுத்து...


திரு.கோபால்,
ஆசிரியர்,
நக்கீரன் பத்திரிகை,
சென்னை-14.


மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய திரு.கோபால் அவர்களுக்கு, என் அன்பான வாழ்த்துக்கள். எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று தினமும் நினைப்பேன். அதுவும் வாரம் இருமுறை நக்கீரன் இதழைப் பிரித்துப் படிக்கும் போதெல்லாம் இந்த ஆர்வம் பெருகும். வேலைப்பளு மட்டும் இல்லை; சமீபகாலமாகச் சிறிது உடல்நிலையும் சரியில்லை. ஆனாலும் நக்கீரனில், "சேலஞ்ச்'சின் இரண்டாம் பாகமான யுத்தம் படிக்கப் படிக்க மனசுக்குள் ஒரு பிரமிப்புதான் ஏற்படுகிறது. இத்தனை சம்பவங்களும் உங்கள் ஒருத்தரின் வாழ்க்கையிலேயே ஏற்பட்டதா? தம்பி, அரச பரம்பரை யில்கூட யுத்தம் எப்போதாவது வரும்; போகும். உங்களுக்கு வாழ்க் கையே போராட்டமாக, கடும் யுத்தமாக அல்லவா இருக்கிறது? உங்கள் அம்மாவை நினைத்தால் கண் கலங்குகிறது. என்னதான் மகன் நெஞ்சுரம் வாய்ந்த பிள்ளைதான் என்றாலும், ஒன்று வீரப்பனைத் தேடிக் காட்டுக்கும், இல்லாவிட்டால் கையில் விலங்குடன்


-கடிதம் முழுமையடையவில்லை.

அவரின் மூச்சு நின்றுவிட்டது.

No comments:

Post a Comment