Saturday, May 15, 2010

காமராஜருக்கு கொள்ளி வைத்த குடும்பம் படும் பாடு!



shockan.blogspot.com

அரசாங்கம் தனக்கு கொடுத்த நிலத்தை ஒரு அடாவடி ஆசாமியிடமிருந்து மீட்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார் அந்த மூதாட்டி. காவல்துறை முதல் கலெக்டர்வரை அவரும் முறையிட்டுவிட்டார். அவர்களும் தலையிட்டுவிட்டார்கள். மீட்க முடியவில்லை. நிலத்தைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கின்ற அந்த மூதாட்டி... பெருந்தலைவர் காமராஜரின் அக்கா மகள்.

காமராஜரின் மூத்த அக்கா நாகம்மாளின் மூத்த மகள் மங்களம். (இரண்டாவது அக்காவான கமலாதேவி குடும்பத்தின் வறுமையை நக்கீரன் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து அரசின் உதவி கிடைத்ததை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்) மங்களத்தின் மகன்தான் காமராஜருக்கு கொள்ளி போட்டவர். சுதந்திரப் போராட்ட தியாகி ராசனின் மனைவியான மங்களம், காமராஜர் உயிரோடு இருக்கும்போது மகனுக்கு மெடிக்கல் சீட் கேட்டுப் பார்த்தார். ""நம்ம குடும்பத்தில் ஏற்கனவே ஒருவருக்கு டாக்டர் சீட் கொடுத்தாச்சு. அவ்வளவுதான். இது அரசாங்க சொத்து. குடும்பத்துக்கு தாரை வார்க்க முடியாது'' என்று கறாராகச் சொல்லிவிட்டார் காமராஜர்.

அவரது மறைவுக்குப் பிறகு, மங்களம் குடும்பத்திற்கு இருந்த ஆதரவு போய்விட்டது. கணவரும் இறந்துபோக, அவருக்கான தியாகி பென்சன் மட்டும்தான் விருதுநகரில் இருந்த மங்களத்தையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, விருதுநக ருக்கு வந்தார். அவரிடம், மதுரையில் உள்ள மேலக்குயில் குடி கிராமத்தில் தனக்கொரு இடம் கேட்டு மனு கொடுத்தார் மங்களம். சென்னை திரும்பி யதும் மேலக்குயில்குடி கிராமத்தில் சர்வே எண் 96-ல் 5 ஏக்கர் 28 சென்ட் நிலத்தை ஒப்படைக்க கலெக்டர் மூலம் உத்தரவிட் டார் எம்.ஜி.ஆர். இதை எதிர்த்து சிலர் வழக்குப் போட, அந்த வழக்கில் 1995-ல் ஜெ ஆட்சியின்போது சாதகமான தீர்ப்பு கிடைக்க, 22-02-95 அன்று மங்களத்திடம் அந்த நிலம் இலவசமாக ஒப்படைக்கப் பட்டது. இதையடுத்து, பக்கத்தில் உள்ள நாகமலைபுதுக்கோட்டையில் குடியேறியது மங்களத்தின் குடும்பம்.
நிலத்திற்கான கிஸ்தி, வரி எல்லா வற்றையும் தன் பொறுப்பில் கட்டி வந்தார் மங்களம். 2009-ல் தன் வாரிசுகள் 4 பேருக் கும் அந்த நிலத்தைப் பிரித்துக்கொடுக்க முயன்றபோதுதான் அவரை அதிர்ச்சி தாக்கியது. மேலக்குயில்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி சாமியார் என்ற மச்சக் காளை ஊருக்குள் 30 வருசமா புறம்போக்கு நிலங்களை வளைச்சுப் போட்டு வைத்திருக் கிறார். காமராஜர் அக்கா மகளுக்கு கொடுத்த 5 ஏக்கர் 28 சென்ட்டுடன் சேர்த்து 13 ஏக்கரை வசப்படுத்தியுள்ள மச்சக்காளை, "இந்த புறம்போக்கு நிலங் களையெல்லாம் நான்தான் பாதுகாத்து வர்றேன். இதை எடுக்க நினைத்தால் கலெக்டர் முதல் தலையாரி வரை எல்லார் மேலேயும் வழக்குப்போடுவேன்' என மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.

காமராஜர் குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்றவுடன் கலெக்டர் உத்தரவில் போலீஸ் படை வந்தது. மச்சக்காளையோ கலெக்டர், சர்வேயர், ஊர் பிரசிடெண்ட், ஆக்கிரமிப்பை அகற்றிய பெண் போலீஸ், சொந்த பங்காளி கண்ணன் உள்பட பலர் மீதும் வழக்குகளைப் போட்டுவிட்டார். திருமங்கலம் கோர்ட்டில் வழக்குப் பதிவாகியிருப்ப தால் நிலத்தை மீட்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறார் மங்களம். இதே மச்சக்காளை, விளாச்சேரியில் 300 குடும்பங்களுக்கு கொடுக் கப்பட்ட இலவச மனைப் பட்டா நிலத்தையும் தன்னுடைய நிலம் என்று போலி பத்திரம் போட்டு தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்ப தாகப் பயத்துடன் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.

நிலத்தை மீட்கப் போராடும் மங்களம் நம்மிடம், ""எங்க நிலத்துக்கு போலீஸ் பாதுகாப் போடதான் நாங்க போகவேண்டியிருக்குது. 5 ஏக்கர் 28 சென்ட்டில் 1 ஏக்கர் 28 சென்ட்டை தனக்கு கொடுத்தால் கேஸை வாபஸ் வாங்கிடுறதாகவும் இல்லேன்னா நிலத்திலே கால் வைக்க விடமாட் டேன்னும் மிரட்டுறான். ஊர்க்காரங்க நியாயம் கேட்கப்போனா ஒரு தலித்தை கையில வச்சுக்கிட்டு, தீண்டாமை கேஸ் போட்டுடுவேங்கிறான். அவன் மேலே நடவடிக்கை எடுக்க போலீஸ்காரங்க, அதிகாரிங்க எல்லாரும் பயப்படுறாங்க. இதை நக்கீரன்தான் கலைஞர் அரசாங்கத்தோட கவனத்துக்கு கொண்டுபோய் எங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யணும்'' என்றார் வேதனையுடன்.

மச்சக்காளையின் உறவினரான கண்ணன் என்பவர், ""எங்க சொத்தையும் நாங்க அனுபவிக்க விடாம 30 வருசமா ஆக்கிரமிச்சி வச்சிருக்கிறார். கேசு, தகராறு, அடிதடின்னு ஒரே பிரச்சினைதான். எத்தனையோ புகாரைக் கொடுத்து சிறையில் அடைச்சாலும் ஜாமீனில் திரும்பிவந்து அதே தப்பை செய்றாரு. இவரால் ஊரே இரண்டுபட்டு கிடக்குது'' என்றார்.

மேலக்குயில்குடி பஞ்சாயத்து தலைவி கருத்தம்மா, ""அரசு புறம்போக்கையெல்லாம் தன் இடம்னு சொல்லி போலி ரெகார்டு தயார் பண்ணு றதுதான் அந்தாளோட வேலை. இவரால அரசாங்கத் தோட இலவச நிலத் திட்டமே இந்த ஏரியாவில் முடங் கிக் கிடக்குது'' என்றார். தொடர்ச்சியான புகார்களுக் குள்ளாகியுள்ள மச்சக்காளையைத் தேடிச் சென்றோம்.

மே 12-ந் தேதி மேலக்குயில்குடியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த போது, ""இது எங்க ஊரு நிலம். நான்தான் 30, 40 வருசமா காவல் காத்துக் கிட்டிருக்கேன். புறம்போக்கு நிலத்தை காமராஜர் குடும்பத்துக்கு அரசாங்கம் பட்டா போட்டு தரும்போது, இதே ஊரிலே இருக்கிற எனக்கு ஏன் பட்டா தர மறுக்குறாங்க? சட்டமும் நீதியும் எல்லாருக்கும் ஒண்ணுதான். காமராஜர் பெயரை சொல்லி அரசாங்கத்தோட சட்டத்தை ஏமாத்தப் பார்க்குறவங்களை விடமாட்டேன். என்கிட்டே ஆதாரம் இருக்குது. எனக்கு 1 ஏக்கர் 28 சென்ட்டை விட்டுட்டுப் போகச் சொல்லுங்க. என்னை கிராமத்து வில்லனா பார்த்தாலும் சரி, ஹீரோவா பார்த்தாலும் சரி. கடைசி வரை போராடுவேன்'' என்று தெனாவெட் டாகவே பேசினார் சங்கிலிசாமி என்கிற மச்சக்காளை.

நாகமலை புதுக்கோட்டை போலீ சாரோ, "அந்தாளா' என அலறியபடி, ""60 வயசுக்குமேலே குண்டாஸ் போட முடியாது. மச்சக்காளைக்கு 65 வயசாகுது. எப்படி அவனை கட்டுப்படுத்துறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கோம்'' என்கிறார்கள். பெருந்தலைவர் குடும்பத்துக்கு அரசாங்கம் கொடுத்த நிலத்தை அபகரித்து, கிராமத்துக்கே சவாலாக இருக்கும் மச்சக் காளைக்கு மூக்கணாங்கயிறு போடுமா அரசாங்கம்?

No comments:

Post a Comment