Thursday, May 6, 2010

ரஜினி முதல் வடிவேலு வரை யாருக்கு எவ்வளவு சம்பளம்?

shockan.blogspot.com


இதய நோயாளிகள், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். ஆர்வம் உந்தித் தள்ளினால், மருத்துவரின் அறிவுரையுடன், மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடருங்கள்...



இயக்குநர்கள்:

பாலா, செல்வராகவன் உட்பட பெரும்பாலான இயக்குநர்கள் 'இத்தனை கோடிகளில் படத்தை முடித்துத் தருகிறேன்' என்று தயாரிப்பாளர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு, ஃபர்ஸ்ட் காப்பி முறையில் படம் இயக்கி வருகிறார்கள். அதனால், 'இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்' என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மற்றபடி முன்னணி இயக்குநர்களான ஷங்கர் - 8 கோடி, ஏ.ஆர்.முருகதாஸ்-7 கோடி எனப் பெறுகிறார்களாம். இது கோடம்பாக்கம், வடபழனிப் பெரியவர்கள் பலரிடம் பேசிப் பிடுங்கிய விவரம். இருப்பினும், சம்பந்தப்பட்டவர்கள் இதை அப்படியே மறுக்கவும்கூடும். இதில் கறுப்பு - வெள்ளை விளையாட்டுக்களும் தனி!

ஓ.கே. மக்களே! இதெல்லாம் வெயில், மழை பாராமல் தமிழர்களை உற்சாகப்படுத்தப் பாடுபடுபவர்களின் தோராயமான சம்பள விவரங்கள். பொருளாதார தேக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள் கோலிவுட் ஹீரோ, ஹீரோயின்கள் மட்டும்தான்போல. ஆனால், தனி நபரின் சம்பளங்கள் கோடிகளில் உயர்ந்தாலும், படங்களின் வசூல் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

''போன வருஷம் ரிலீஸான 131 படங்களில், 'அயன்', 'நாடோடிகள்', 'படிக்காதவன்' ஆகிய படங்கள்தான் சக்சஸ். 'வெண்ணிலா கபடிக் குழு', 'மாயாண்டி குடும்பத்தார்' 'சிவா மனசுல சக்தி', 'பேராண்மை', 'பசங்க' படங்கள்தான் போட்ட காசை எடுத்தன. மற்ற பெரும்பாலான படங்கள் அட்டர் ஃப்ளாப்தான்!'' என்று இறுக்கமான முகத்துடன் தகவல் தெரிவிக்கிறார் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியின் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன். தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் குறித்து இவரிடம் பேசியபோது வேதனையில் வெம்பி வெடித்துவிட்டார். அவர் பகிர்ந்துகொண்ட பல பகீர் ரகத் தகவல்களில் இருந்து கொஞ்சம் உங்கள் பார்வைக்கு...

''நான் சினிமாவுக்கு வந்து 26 வருஷம் ஆச்சுங்க. இப்போ இருக்கிற மாதிரி எப்பவும் தமிழ் சினிமா சிரமப்பட்டது இல்லை. இப்போ இருக்கிற ஹீரோக்கள் 'ஏன், எதுக்கு'ன்னு கேள்வி எதுவும் கேட்காமல் சம்பளத்தை அள்ளித் தர்ற தயாரிப்பாளருக்கே கால்ஷீட் தர்றாங்க. தங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் எடுக்கும் இயக்குநரையே டிக் அடிக்கிறாங்க. ஒரு பக்கம் படங்கள் ஹிட் ஆக மாட்டேங்குதுன்னு அலுத்துக்கிறாங்க. ஆனா, மறுபக்கம் பேப்பரை விரிச்சா, முழுப் பக்கங்களுக்கு சினிமா விளம்ப ரங்கள்தான் ஆக்கிரமிக்குது. ஸ்டார் ஹீரோக்கள், பிரமாண்ட இயக்குநர்கள் படங்களே ஒருவாரம்கூட தியேட்டர்ல தங்க மாட்டேங்குது. இன்னொரு பக்கம் 80 லோ பட்ஜெட் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் பெட்டிக்குள் முடங்கிக்கிடக்கின்றன. நடிகர்கள் இன்னிக்கு வருவாங்க நாளைக்குப் போவாங்க. ஆனா, தயாரிப்பு நிறுவனங்கள்தான் ஆலமரம் கணக்கா தழைச்சு நிக்கணும். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் சினிமா தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் இன்னமும் நிலைச்சு நிற்க என்ன காரணம்னு யோசிக்கணும். இன்னும் நிறையப் பேசலாங்க. ஆனா, வேண்டாம். நாங்க எங்களுக்குள்ளே பேசித் தீர்த்துக்கிறோம்!'' என்று ஆதங்கத்தோடு நிறுத்திக்கொண்டார் சேகரன்

பெரிய நடிகரைவைத்துத் தயாரிக்கும் படம் தோல்வி அடைந்தால், சம்பந்தப்பட்ட நடிகர் தனது அடுத்த படத்தை அதே தயாரிப்பாளருக்காக நடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அதே விநியோகஸ்தருக்கு அந்தப் படத்தை விற்பதோடு, அதே தியேட்டர்களில்தான் திரையிட வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தை ஈடுகட்ட முடியும்' என்பது சமீபத்தில் விநியோகஸ்தர்கள் சங்கம் நிறைவேற்றிய ஒரு தீர்மானம். அது குறித்து கருத்துக் கேட்டபோது, ''இப்போது ஹீரோக்களின் படங்கள் அபரிமித விலை ஆகிவிட்டது. மினிமம் கேரன்ட்டியில்கட்டுப்படியாகவில்லை என்பதுதான் உண்மை. படம் ஓடினால், லாபம். ஓடாவிட்டால் பெரும் நஷ்டம் என்பதுதான் இப்போ சினிமா கணக்கு!'' என்று கவலையுடன் தொடங்குகிறார் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கப் பொதுச் செயலாளர் திருப்பூர் சுப்பிரமணியம்.

''கமல், விஜய், அஜீத், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள்கூடத் தங்கள் படங்கள் தோல்வி அடைந் தால் தயாரிப்பாளர்களைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை. கவிதாலயா நிறுவனம் தயாரித்த 'ராக வேந்திரா' படம் நஷ்டம் அடைந்தது. உடனே, 'வேலைக்காரன்' படத்தை கவிதாலயாவுக்காக நடித்துக் கொடுத்தார் ரஜினி. ராகவேந்திரா நஷ்டத் தைத் தாண்டிய லாபம் சம்பாதித்தது 'வேலைக்காரன்'. அதே விநியோகஸ்தர்களுக்குப் பணமும் கிடைத்தது. அந்த மனசு இப்போ ஏன் இல்லை? வெற்றிப் படமான 'கந்தசாமி', அதன் தயாரிப்பாளருக்குப் பெரிய லாபம் எதுவும் தரவில்லை. ஆனால், ஹீரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடுத்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த 'அசல்' படமும் தோல்விதான். 'பில்லா' படத்தின் வெற்றியைப் பார்த்துப் போட்டுக்கொண்ட சூடு அது. 30 கோடி ரூபாய் செலவுவைத்த 'ஆயிரத் தில் ஒருவன்' படம் வெளியானதில் இருந்து அந்தப் படத் தயாரிப்பாளர் ரவீந்திரன் படும் பாடு ரொம்பக் கஷ்டம்.

ஏ.எம்.ரத்னம் எவ்வளவு பிரமாண்டமான படங்களைத் தயாரித்தவர். இன்னிக்கு அவரை போனில் கூடத் தொடர்புகொள்ள முடியாது. அவ்வளவு பிரச்னை களில் சிக்கித் தவிக்கிறார். பயங்கர பணக் கஷ்டம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் படும்பாட்டைக் கொஞ்சமாவது நடிகர்கள், இயக்குநர்கள் உணர வேண்டும். சினிமா மீது அவர்களுக்கு இருக்கும் அதே ஆசை, ஆர்வத்தோடுதான் நாங்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்காதீர்கள்!'' என்று பெருமூச்சுடன் முடிக்கிறார் சுப்பிரமணியம்.

''சுப்பிரமணியம் கருத்தில் இருந்து முற்றிலும் முரண்படுகிறேன்!'' என்கிறார், சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம். ''ஒரு தயாரிப்பாளர், எக்ஸ் என்ற நடிகரை வெச்சு வட்டிக்குக் கடன் வாங்கி 25 கோடி செலவு பண்ணி ஒரு படம் தயாரிக்கிறார். படம் ஃப்ளாப். மறுநாளே நடுத் தெருவில் நிற்கும் அந்தத் தயாரிப்பாளர் மறுபடியும் 25 கோடி ரூபாயைத் திரட்டி, அதே நடிகரைவெச்சு உடனடியாக எப்படிப் படம் எடுக்க முடியும்? இது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். 'பாபா' படம் தோல்வி அடைஞ்சப்போ, விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டத்தில் ஒரு பகுதியை ரஜினி திருப்பிக் கொடுத்தார். அந்த சிஸ்டம்தான் சரியா வரும்!'' என்கிறார்.

''விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இதைத் தீர்மானமாக கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. ஒரு கோரிக்கையாக வலியுறுத்தி உள்ளார்கள் என்றே அறிகிறேன். இது ரொம்ப நல்ல விஷயம். ஆனால், ஒருவர் மட்டுமே பேசித் தீர்வு காணக்கூடிய விஷயம் இல்லை. தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் என எல்லா சங்க நிர்வாகிகளும் ஓர் இடத்தில் அமர்ந்து பேசித் தீர்வு காண வேண்டிய விஷயம் இது!'' என்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராமநாராயணன். தொடர்ந்து அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் அடுக்குகிறார். ''பொதுவாக, பெரிய நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்கும்போதே அடுத்தடுத்து இரண்டு மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி கால்ஷீட் கொடுத்துவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது தோல்வி அடைந்த படத்தின் தயாரிப் பாளருக்கு உடனே அடுத்த படம் செய்வது சிரமம். கியூவில் அடுத்து உள்ள தயாரிப் பாளரிடம் பேசி, அவர் பெருந்தன்மையுடன் தனது படத்தைத் தள்ளிவைத்து உதவினால்தான் அது சாத்தியம். இல்லையென்றால், உடனடியாக அதே தயாரிப்பாளருக்குப் படம் பண்ணாமல், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட இரண்டு, மூன்று படங்களையும் முடித்துவிட்டு நான்காவது படமாகவாவது செய்ய வேண்டும். அவருக்கே உடனடியாகப் படம் பண்ணும்போது, கதை, திரைக்கதை எழுதி சரியான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்ய நேரம் வேண்டும். அதே தயாரிப்பாளருக்கே படம் பண்ணுகிறோம் என்று கூறிக்கொண்டு, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசர அவசரமாக வேலை செய்தால் இந்தப் படமும் தோல்வியைத் தழுவினால் என்ன செய்வீர்கள்? இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைப் பேசித்தான் தீர்க்க வேண்டும்!'' என்கிறார் இராமநாராயணன்.

No comments:

Post a Comment